யாருடைய தரப்பில் நின்று பேசுவது?
குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை அண்மையில் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. தலித் இயக்கங்களுடன் தொடர்புடைய மாற்றுத் திறனாளிப் பிரமுகர் ஒருவர் தன்னுடைய நிலையைப் பயன்படுத்திக்கொண்டு குழந்தைகளின் மீது பாலியல் அத்துமீறல்களைப் பிரயோகிப்பதாகவும், குறிப்பாக, குழந்தைகளின் டிஜிட்டல் வெளியில் அவர் இதைச் செய்வதாகவும் சிலர் பதிவுசெய்தார்கள். குழந்தைகளுக்குக் குழப்பமும் அச்சமும் ஏற்படுத்தும் வகையில் பாலியல் சார்ந்த செய்திகளை அவர்களுக்கு அனுப்புவது, அவர்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் அவற்றைப் பகிர்ந்துகொள்வது ஆகியவை ‘டிஜிட்டல் பாலியல் வன்முறை’ (Digital sexual abuse) என்று குறிப்பிடப்படுகிறது. 13 வயதுக் குழந்தைக்கு அவர் அனுப்பிய ஆட்சேபத்துக்குரிய செய்தியின் படமும் வெளியானது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள மாற்றுத் திறனாளியின் அத்துமீறல்கள் குறித்துச் சிலர் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவர் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி அந்தக் கணக்கின் மூலம் ஒரு குழுவில் இணைந்திருக்கிறார். தன்னுடைய நட்பு வட்டத்திலுள்ள பெண்களின் படங்களை அக்குழுவில் இவர் பகிர்ந்துள்ளார். அவர்களை மோசமாகச் சித்தரித்து ஆபாசமாக அக்குழுவிலுள்ள ஆண்களும் பெண்களும் பேசியுள்ளார்கள். அக்குழுவில் உள்ள சிலர் தங்கள் வீடுகளிலுள்ள குழந்தைகளைப் பற்றியும் ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள். “வெளியில் தன்னை ஒரு முற்போக்கு முகமாகக் காட்டிக்கொண்ட” இவரது இந்த முகம் சம்மந்தப்பட்ட பெண்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கியதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். Digital sex abuse என்பதற்கான அப்பட்டமான உதாரணம் இது.
மெய்நிகர் உலகிலோ நிஜ வாழ்விலோ குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய குறிப்பான அடையாளமின்றி முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுக்கும் வர இயலாது என்றாலும் இது குழந்தைகள்மீதான பாலியல் வன்முறையை மீண்டும் பொதுவெளியின் பேசுபொருளாக ஆக்கியிருக்கிறது. பண பலம், புகழ், உறவுமுறை, கழிவிரக்கம் சமூக அந்தஸ்து, துறை சார்ந்த அதிகாரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது கலைத்துறைகளிலும் கல்வித்துறையிலும் அரசியலிலும் நடந்துவருகிறது. தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டப்படும் பிரமுகர், மாற்றுத் திறனாளி என்பதை முன்னிட்டு அவருடைய சார்பில் சிலர் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். மாற்றுத் திறனாளியின் பாலியல் அத்துமீறலைக் குற்றம் சொல்பவர்கள் அவரைப் போன்றவர்களுக்குப் பாலியல் இன்பம் மறுக்கப்படும் அவலத்தைப் பற்றிப் பேசுவதில்லை என்று கரிசனப்படுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான வாதம் மட்டுமல்ல; தன்னளவிலேயே அத்துமீறலைக் கொண்டது.
இங்கிலாந்தில் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த சிலர்மீது குழந்தைகளைப் பாலியல் நடவடிக்கைகளுக்குப் பழக்கப்படுத்தும் (sex grooming) குற்றச்சாட்டு சில மாதங்களுக்கு முன்பு சுமத்தப்பட்டது. குழந்தைகள்மீது இவர்கள் செலுத்திய பாலியல் வன்முறை குறித்து தேசிய அளவிலான விசாரணை நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் யெவெட் கூப்பர், இந்த விசாரணைகள் பாகிஸ்தானிய வம்சாவளிக் குழுக்களின் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். National Audit on Group-Based Child Sexual Exploitation and Abuse (ஒரு குழுவாகச் சேர்ந்துகொண்டு குழந்தைகள்மீது நிகழ்த்தும் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவை குறித்த தேசியத் தணிக்கை) இதன்மீது நடவடிக்கை எடுத்தது. இந்தக் குற்றம் இங்கிலாந்தில் முறையாக ஆய்வுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்திருக்கிறது. குழந்தைகளுக்குப் பாலியல் செய்திகளை அனுப்புவதுபோன்ற செயல்கள் sex grooming என்னும் வகைமைக்குள் வரும். தற்போது சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் இத்தகைய செயல்களைக் குறித்தவை என்பதால் இவற்றை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
சமூக ஊடகங்கள், வாட்ஸப் உள்ளிட்ட தளங்களில் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் போக்கு அதிகரித்துவருகிறது. இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பயிற்றுவித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுவரும் ஹரிஹரசுதன் தங்கவேலு, 18 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் தனிக்கணக்கு தொடங்குவதைத் தடைசெய்வது அவசியம் என்கிறார். குழந்தைகளிடம் நேரில் பழகக்கூடியவர்களில் சில பாலியல் ரீதியான செயல்பாடுகளுக்கு அவர்களைப் பழக்கப்படுத்துவதை செக்ஸ் குரூமிங் என்று சொல்வதுண்டு. குறிப்பிட்ட சில செய்திகளையோ படங்களையோ அனுப்புவதன் மூலம் இத்தகைய குரூமிங் ஆன்லைனிலும் நடக்கிறது என்று ஹரிஹரசுதன் தெரிவிக்கிறார். இது தொடர்பான விழிப்புணர்வு பெற்றோருக்கு இருக்க வேண்டும் என்றும் இவர் சொல்கிறார்.
அண்மையில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்குவதைத் தடைசெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் ஹரிஹரசுதன், அந்தத் தடை பரவலாக வரவேற்புப் பெற்றிருப்பதையும் குறிப்பிடுகிறார். ஆன்லைனில் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் சார்ந்து எத்தகைய அத்துமீறல்கள் நிகழும் என்பதைப் பெற்றோரும் ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டும், குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகளைப் பெரியவர்கள் கண்காணித்துவர வேண்டும், அவர்கள் ஆன்லைனில் எதைப் பார்க்கிறார்கள், படிக்கிறார்கள், யாருடன் உரையாடுகிறார்கள் என்பதைக கவனிக்க வேண்டும். புதியவர்களிடம் இருந்து வரும் நட்பு அழைப்புகள், செய்திகள் அதைப் பற்றிப் பெரியவர்களிடம் சொல்லும்படி குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும் என்கிறார். 18 வயதுவரை குழந்தைகளின் தனியுரிமை என்பது அவர்களுடைய விருப்பத்திற்கு மட்டும் உரியதல்ல என்பதையும் அதில் பெற்றோருக்குப் பொறுப்பு இருக்கிறது என்றும் வலியுறுத்துகிறார். தமது குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களையும் காணொலிகளையும் இணையத்தில் பதிவேற்றுவதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
மெய்நிகர் உலகில் குழந்தைகள்மீது செலுத்தப்படும் இத்தகைய வன்முறை அவர்களுக்கு மெய்நிகர் உலகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்திவிடும். இன்று மெய்நிகர் உலகம் கல்வி, திறன் வளர்ப்பு, பொது அறிவு வளர்ச்சி, தொழில் வாய்ப்புகள் என ஒருவரது வாழ்வுடன் தவிர்க்க முடியாத வகையில் பிணைந்திருக்கிறது. இன்று மெய்நிகர் உலகிலிருந்து ஒருவரை விரட்டுவது அவருடைய புழங்கு வெளியைக் கட்டுப்படுத்துவதாகவே அமையும். இந்நிலையில் வளரிளம் பருவத்தினர் மெய்நிகர் உலகம் குறித்த அச்சத்துக்கு ஆட்படுவது அவர்களுடைய எதிர்காலத்தையே பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டது. அவர்களுடைய பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே இதைத் தீவிரமான பிரச்சினையாகவே அணுக வேண்டும்.
அத்துமீறுபவர்களின் கண்ணோட்டத்தில் பார்த்துக் கண்ணீர் சிந்தும் சிலர் பாதிப்புக்குள்ளான குழந்தைகளையும் இளைஞர்களைப் பற்றி யோசிப்பதாகத் தெரியவில்லை. எந்தக் குறைபாட்டுக்கும் பிறர்மீதான அத்துமீறல் தீர்வாக இருக்க முடியாது. அதிலும் தன்னை எந்த விதத்திலும் காத்துக்கொள்ள முடியாத ஒரு குழந்தையிடம் அத்துமீறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தீவிர மனநலக் கோளாறு உள்ள சிலர் சில சமயம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடக்கூடும். அத்தகையோர் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்பவர்கள். அவர்கள் விஷயத்தில் இந்த வாதம் செல்லுபடியாகலாம். உடல் ரீதியான குறைபாட்டைக் காரனம் காட்டிப் பாலியல் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது. பாலின்பம் பெற இயலாத ஏக்கத்தை முன்னிறுத்திக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இதேபோன்ற நிலையில் இருக்கும் பிறருக்கும் இதே சலுகையைக் கொடுப்பார்களா என்று யோசிக்க வேண்டும்.
பாலியல் தொடர்பான தவறான குற்றச்சாட்டுக்கு யாரும் பலியாகிவிடக் கூடாது என்னும் கவலை நியாயமானதுதான். ஆனால், பாலியல் குற்றங்களால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்னும் கவலைதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் உடல், மன வேதனைகளையும் வாழ்நாள் முழுவதும் துரத்தும் கொடுமையான அனுபவமாக அது மாறக்கூடும்; சிலருக்கு அது வாழ்க்கையையே சிதைத்துவிடவும்கூடும். அதுவும் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பலர் இயல்பான வாழ்க்கையையும் இயல்பான பாலுறவையும் இழந்துவிடுகிறார்கள். எனவே குழந்தைகளுக்கெதிரான பாலியல் அத்துமீறல்களைக் கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். இதன் அடிப்படையில்தான் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offences – POCSO Act, 2012) இயற்றப்பட்டிருக்கிறது. இது பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை வரையறுத்து, அதற்குத் தீவிரமான தண்டனைகளை இந்தச் சட்டம் வழங்குகிறது. குற்றத்தை உடனடியாகத் தெரிவிப்பது, விரைவான விசாரணை, குழந்தைகளுக்கு இணக்கமான நீதிமன்ற நடைமுறைகள் (Child-friendly judicial process) ஆகியவற்றை உறுதிசெய்கிறது. நடந்த குற்றத்தைப் பற்றிக் குழந்தைகளை விசாரிக்கும்போது எடுத்துக்கொள்ள வேண்டிய கவனத்தையும் முன்னெச்சரிக்கையையும் பற்றி விவரமாகப் பல வழிகாட்டுநெறிகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தையின் அடையாளத்தை வெளியிடாதிருத்தல், எந்த நிலையிலும் குழந்தையின் உரிமைகளைப் பாதுகாத்தல், குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, குழந்தையை விசாரிக்கும் காவலர்களுக்கு இருக்க வேண்டிய நுண்ணுணர்வு என மிக விரிவாக இந்தச் சட்டம் இந்தப் பிரச்சினையைக் கையாள்கிறது.
இந்தச் சட்டம் குறித்துக் காவல்துறையினர் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை, புகாரளிக்கும் வழிமுறைகள் குறித்துப் பெற்றோருக்குப் போதிய அறிதல் இல்லை, குறிப்பாக அதிகம் படிக்காத, பின்தங்கிய நிலையிலுள்ள பிரிவினரிடத்தில் இந்த விழிப்புணர்வு மிகவும் குறைவு என்று பல பிரச்சினைகளுக்கிடையில்தான் இந்தச் சட்ட அமலாக்கமும் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விழிப்புணர்வு அதிகரிப்பு, தைரியமாகப் புகார் அளிக்கும் போக்கு ஆகியவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, போக்சோ வழக்குகளின் பதிவில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 2024 மே மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் 10,668 போக்சோ வழக்குகள் பதிவாகி, அவற்றில் 6,228 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, 4,440 வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்கு வந்த வழக்குகளில், 25.77% வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் குறித்த ஊடகச் செய்திகள், அதிகாரப்பூர்வமான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau – NCRB) தரவுகள் ஆகியவை சில பொதுவான போக்குகளைச் சுட்டிக்காட்டுகின்றன. கல்வித்துறையினர், பொதுப் பணியாளர்கள், சமயத் துறையினர், அரசியல் பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதாகப் பதிவாகியிருக்கிறது. குழந்தைகளுக்கு நெருக்கமானவர்கள், அவர்களது மரியாதையைப் பெற்றவர்கள், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோரே இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவதை இது காட்டுகிறது. இவர்கள் தங்களுடைய நிலையை, அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
தடுப்பு நடவடிக்கைகள்
குழந்தைகளுக்கு எதிரான அனைத்துவிதமான பாலியல் வன்முறையைத் தடுக்கவும் குறைக்கவும் பல விதமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவலறிந்தவர்கள், குற்றத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பயப்படாமல் இருக்கச் சமூகம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உள்ளூர் காவல் நிலையம், மாவட்ட அளவிலான சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை புகார்களைக் கையாள்வதில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க, பிரத்யேகமான விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தீர்ப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். புகாரைப் பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள், குழந்தைகளைக் கையாளவும், அவர்களின் மன அழுத்தத்தைப் புரிந்துகொள்ளவும் பிரத்தியேகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தைக்கு மருத்துவ, உளவியல் ஆலோசனைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் கவலைகளைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும். பள்ளிகள், பேருந்துகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பொது இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதைச் சமூகம் உறுதி செய்ய வேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, நீண்ட கால உளவியல், சமூக மறுவாழ்வு உதவிகளை அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தனிப்பட்ட பிரச்சினை அல்ல; அது சமூகத்தின் கூட்டுப் பிரச்சினை. போக்சோ சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுவதோடு, சமூக விழிப்புணர்வும் பெற்றோரின் பொறுப்புணர்வும் இப்போக்கை மாற்றியமைக்க உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையிலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகும் மனநிலைதான் அந்தக் குழந்தைகளுக்கான பாதுகாப்பாக அமையும்.
