தொலைகின்ற இடம்

ஓவியம்: மணிவண்ணன்
அந்த இடம் பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லும்படி இல்லை. ஒரு வெட்டவெளி மைதானம். இருபது பஸ்கள் நிற்கலாம். ஒரு பக்கத்தில் இருக்கும் பெரிய கொட்டகைக்கு அடியில் டீ, காபி, டிபன், சாப்பாடு ஹோட்டல்கள். லவுட் ஸ்பீக்கரில் எம்ஜிஆர், சிவாஜி பாட்டுகள். அதன் பக்கவாட்டில் ஓலை தட்டி போட்ட மறைவிடம் பெண் பயணிகள் ஒதுங்க. ஆண்களுக்கு மைதானத்திற்கு எதிர் புறத்தில் மரம் செடிகொடிகள் இருக்கும் இடம். ஒரு வரியாக இல்லாமல் எல்லாவிடத்திலும் பஸ்கள் குறுக்கும் நெடுக்குமாக உறுமிக்கொண்டு நின்றன. எங்கும் சிகரெட், பீடி, டீசல் வாசம்.
அவனுக்கு ஆறு வயது இருக்கலாம். அல்லது அதைவிடக் குறைவாகவும் இருக்கலாம். அவனுடைய அம்மாவை பஸ்ஸில் விட்டுவிட்டு இறங்கும்போது கொஞ்சம் பயத்துடனே இறங்கியிருப்பானோ. அவர்கள் எந்த பஸ்ஸில் எந்த ஊர் போகிறார்கள் என்ற தெளிவும் இல்லை.
