மாற்றுக் கல்வி: சாத்தியங்களும் சறுக்கல்களும்


பெரும்பாலானோர் படிப்பறிவற்றவர்களாக இருந்தது இந்தியா விடுதலை பெற்றுத் தன்னாட்சி நடத்தத் தடையாக இருக்காதா என்ற ஐயம் எழுந்தபோது, காந்தி வந்தடைந்த விடை, கல்வியின் நோக்கம் குறித்த தேடலில் நம்மை ஆழ்த்துவது. “குணநலன்தான் கல்வியின் நோக்கம். துணிவு, வலிமை, அறம், தன்னை மறந்து மேலான குறிக்கோளை நோக்கிப் பணியாற்றுதல் ஆகியவையற்றை வளர்த்தெடுக்கவே முயல்வேன். எழுத்தறிவைவிட இதுவே முதன்மையானது; ஏட்டறிவு உயரியதோர் நோக்கத்தை அடைவதற்கான ஒரு வழி மட்டுமே. அதனால்தான் இந்தியாவின் படிப்பறிவின்மை எவ்வளவுதான் கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் எனக்குப் பெருந்தடையாக உறுத்தவில்லை; இதனால் இந்தியா தன்னாட்சிக்குத் தகுதியற்றது என்று எ
