மழை நிற்கப் போவதில்லை

ஓவியம்: செல்வம்
பொழுது புலரத் தொடங்கியிருந்தது. குளிர் இன்னும் விடவில்லை. போர்த்திக்கொண்டிருந்த சாக்குகளை உதறியபடி எழுந்தான் சந்தானம். மண்டபத்தின் உள்ளடங்கிய மூலையில் மூன்று ஆட்டுக்குட்டிகள் நின்று கொண்டிருந்தன. முந்தாநாள் இரவு இந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தபோது, நல்லவேளை, பாதுகாப்பான இடத்தில் அடைக்கலமாகிவிட்டோம் என்று ஆறுதலாக இருந்தது. குளிரில் நடுங்கியபடி, கடும் சளியிலும் காய்ச்சலிலும் விசிலாகவே மாறிவிட்ட மூச்சை இழுத்துவிட்டபடி அந்த மலைப்பகுதியில் இருந்த கோயிலுக்கு ஏறி வந்திருந்தான். ஊரிலிருந்து பல நூறு அடிகள் உயரத்தில் இருக்கும் இடம் இந்தப் பகுதி. பரிச்சயமான இடம்தான். ஆனால் வேறு கண்டம் மாதிரி இப்போது அவனுக்குத் தோன்றியது. பரிச்சயமானதாக இருந்ததெல்லாம்தான் மாறிவிட்டதே என்று நினைத்துக்கொண்டான். அதுவும் கொஞ்ச காலமாக நடப்பவ
