கடிதங்கள்

‘பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம்’ தலையங்கம் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்புச் செயல்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. 2.0 மக்கள்தொகை பதிலீட்டு விகிதச் செயல்களை உ.பி., பிகார் போன்ற மாநிலங்களில் நிறுத்திவைக்க வேண்டும் என்பது சரியே. “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்ல, அபாயத்தின் குறியீடு மவுனம்” என்பது சரியாகச் சொல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துத் தமிழ் இஸ்லாமியர்கள் வெளியேற்றம், அழித்தொழிப்பு, கோரமான வன்முறைகள் எனப் பல இன்னல்களைச் சந்தித்த சரித்திரப் பதிவு. இந்த வடு காலத்தால் அழியாத வடுவாகும். ‘ஆர்எஸ்எஸ்ஸூம் காரல் மார்க்ஸும்’ - “மதமென்னும் பேய் பிடியாதிருக்க” என்றார் வள்ளலார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தனி, சித்தாந்தம் தனி அல்ல; கடந்த கால ஆர்எஸ்எஸ்ஸின் செயல்பாடுகள், சமீபத்திய நிகழ்வுகள் என ஆர்எஸ்எஸ்ஸின் கோர முகத்தை வாசகர்களுக்கு எளிதில் புரியவைத்துள்ளது, மாமேதை மார்க்ஸின் கூற்றுப்படி ‘மதம் மக்களுக்கு அபின்.’ தன்மீதான தடைகளைத் தாண்டி ஊழல் எதிர்ப்பு என்ற போர்வை போர்த்தி, மதம் என்ற தேன் தடவி, மக்களைத் தன் வசப்படுத்தும் கலை வித்தகமே ஆர்எஸ்எஸ்ஸின் செயல்பாடு.
சீனி. மணி
பூந்தோட்டம்
•••
‘இதுவா ஊடக அறம்?’ அறமே செத்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் ஊடக அறமாவது, மண்ணாவது. பிரபலமான நடிகரிடம் ஒரு பேட்டிகூட வாங்க முடியாத ஊடகங்கள், தைரியமாகப் பேட்டி கொடுக்கும் நடிகைகளைக் கொச்சைப்படுத்தும் கேள்விகளைக் கேட்கின்றன. அண்ணாமலையார்கள், சீமான்கள் ஒருமையில் பேசியும் வசைபாடியும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு கேள்விகள் கேட்கிறீர்கள் என்று நேரடியாகக் குற்றச்சாட்டியபோதும் பேட்டி தொடர்ந்துகொண்டேதானே இருந்தது. குறைந்தபட்சம் அந்தப் பேட்டியையாவது புறக்கணித்திருக்கலாமே? எத்தனை முறை அவமானப்படுத்தினாலும் அதைத் துடைத்துக்கொண்டு ஒலிவாங்கியை அவர் முன்னால் நீட்டுகிறார்களே. எங்கிருந்து வரும் அறம்? கட்டுப்பாடுகளை மீறிப் பெண்கள் பொதுவெளிக்கு வருகின்ற சூழ்நிலையில் இம்மாதிரியான ஊடகவியலாளர்கள் அந்தச் சூழ்நிலையைக் கெடுத்துவிடுவார்கள். இப்போதும்கூட இந்த அநீதியை எதிர்த்து ஒரு பெண்தான் எழுத வேண்டியுள்ளது. ஊடக அறம் ஒழிந்துபோய் நாளாயிற்று. அதைத் தேடிக் காலத்தை விரயமாக்க வேண்டாம்.
பாபு அருள் ஜோஷி
களக்காடு
•••
‘இதுவா ஊடக அறம்’? கட்டுரை முக்கியமான, அவசியமான ஒன்றைப்பற்றிப் பேசியிருக்கிறது. இதை இன்னும் சற்றே விரிவுபடுத்தி ‘இதுவா மானுட அறம்’ என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது. நடிகன், நடிகை என்பதை ஆணுக்கு நடிகர் என உயர்த்தியும் பெண்ணை நடிகை எனச் சற்றே தாழ்த்தியும் எழுதுவதில் இருந்தே உலகளாவிய போக்கிலிருந்து நாம் பின்தங்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆங்கிலத்தில் இப்படியானப் பாலின பேதச் சொற்கள் தண்டனைக்குரிய குற்றம். இங்கே அந்த விழிப்புணர்வு வந்துவிட்டாலும்கூட இன்னும் பரவலாகவில்லை என்பதே உண்மை.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இதழ்கள் சிலவற்றில் ஆங்கிலப் பதிப்புகளில் ‘ஆக்டர்’ என பொதுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் தமிழில் நடிகை, ஆசிரியை, கவிதாயினி, மருத்துவச்சி எனப் பால் பேதம் காட்டுகிறார்கள்.
‘இதுவா மானுட அறம்’ கட்டுரையில் ஒரு பெண் கலைஞர் அத்தனைபேர் முன்னிலையில் இழிவுசெய்யப்படுகிறார். அப்படத்தில் அவரோடு பணியாற்றிய ஆண்கள் அத்தனைபேர் இருக்கிறார்கள். ஒருவர்கூட- ஒரே ஒருவர்கூட அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பவில்லை. பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கண்முன் யாராவது மயங்கி விழுந்தால் ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதைக்கூடக் காணொலியாக்கி போஸ்ட் போடுவதையே பலர் முக்கியமாக நினைக்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான் தம்மோடு உழைத்த சக கலைஞர் அவமானப்படுத்தப்படும்போது அதை வேடிக்கை பார்த்த நிகழ்வு.
பிச்சைக்காரன்
சென்னை
•••
‘கற்றனைத்தூறும்’ தொடர் கட்டுரையை எழுதிவரும் கட்டுரையாளர் சென்ற இதழில் சில ஆசிரியர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார். இதில் திறந்த மனதுடன் சில முக்கியமான வினாக்களை எழுப்பியுள்ளார்.
முதல் வினா, தொடக்கப்பள்ளிக் குழந்தைகளது அடிப்படைத் திறன்களான எழுத்துக்களை, எண்களை எழுதுதல், வாசித்தல் பற்றியது. நமது தொடக்கப்பள்ளிக் குழந்தைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இத்திறன்களின் அடைவு ஓராண்டு, ஈராண்டு கழித்தும் ஏற்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.
கட்டுரையாளர், இந்தக் கடிதம் எழுதியவர் போன்றோர் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் காலங்களில், ஆசிரியர்கள் குறிப்பிட்ட எழுத்தை, (இரு மொழிகளிலும்) எண்ணை, சில சொற்களைச் சொல்லிக்கொண்டே வகுப்பறைக் கரும்பலகைகளில் எழுதிக்காட்டுவார்கள். அடுத்து, சில மாணவர்களை அழைத்து அதேபோன்று கரும்பலகையில் எழுதும்படி பணிப்பார்கள். பின்பு அந்த எழுத்தை, எண்ணை, சொல்லைச் சரியான உச்சரிப்புடன் வாசித்துக் காட்டுவார்கள். வாசிக்கச் செய்வார்கள். இந்த வாசிப்பை வகுப்பு முழுதும் பின்தொடர்ந்து உரக்க வாசிக்கும். இதேபோன்று சில வரிகளை, சில பத்திகளைப் பாடப் புத்தகத்தைப் பார்த்து வகுப்பில் மாணவர் பலரும் வாசிக்கவும் செய்வார்கள். இப்பயிற்சி, வேலை நாட்களில் அவ்வப்போது கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெறும்.
இக்காலத்தில் தொடக்க வகுப்புகளில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவுதான். ஆசிரியர்கள் மனது வைத்து நல்ல ஈடுபாட்டுடன் இவ்வாறு பயிற்றுவித்தல் ஒரு கடினச் செயல் அல்ல. சிலர் செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஒரு வகுப்பறை தேசத்தின் தலைவிதியை நிர்ணயிப்பது நமது ஆசிரியர் பெருமக்களின் கையில், மனதில், ஈடுபாட்டில், செயல்பாட்டில்தான் உள்ளது.
இத்தகைய அடிப்படைத் திறன்களைக் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் அடைந்துள்ளார்களா எனக் கண்டறிய நமது பள்ளிகளில் துறை சார்ந்த முறையான வழிமுறைகள் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றன? மாணவர்களுக்கும் ஏன் ஆசிரியர்களுக்கும் கூட ஒரு ‘இலக்கு’ என்பது வேண்டாமா? “தார்மீகப் பொறுப்பு, அறப்பணி, பெற்றிடும் ஊதியத்திற்கு அப்பாலும் ஆசிரியர் பணியின் மீட்சியும் வீச்சும் உள்ளது என்பதெல்லாம் பழைய பல்லவிகள். பிற தொழிலைப் போன்றதுதான் இதுவும். வருவோம், அரசு விதிகளின்படி வேலை நடக்கும், செல்வோம்” இது இன்றைய ஒரு ஆசிரியரின் கூற்று. இதற்கு என்ன சொல்வது? காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எதை நோக்கி என்பதுதான் தெரியவில்லை.
கட்டுரையாளர் சில பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு அரசு மே.நி.பள்ளியில் மேல் வகுப்பு மாணவர்களுக்குத் தினமும் மாலை ஏழு மணி வரை சிறப்பு வகுப்பு. இரவு எட்டு மணிக்குக்கூடக் கிராமங்களில் வீடுகளுக்குச் சென்றடைய முடியவில்லை. ஒட்டுமொத்த மாணவர்களும் கொந்தளித்தார்கள். ஒரு பள்ளியில் நன்கு படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என்று வகுப்பிற்குள்ளேயே பாகுபாடு செய்து பாடம் நடத்தப்பட்டுள்ளது. மாணவி ஒருத்தி தாழ்வுமனப்பான்மையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுபோன்ற அதீதச் செயல்பாடுகளினால் அப்படி என்ன பயன்? எவ்வளவு வறுமையிலும் பிரச்சினைகளிலும் பெற்றோர் தமது குழந்தைகளது கற்றலைப் பாராமுகமாய்த் தட்டிக் கழிப்பது கூடவே கூடாது. கட்டுரையாளர் இதனை வலியுறுத்தி எழுதியிருக்க வேண்டும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
•••
‘பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம்’ தலையங்கம் படித்தேன். மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களோ என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியில் உருவாகிவருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special intensive Revision - SIR) பல்வேறு ஐயங்களை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டது.
தற்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டதில் ஏறக்குறைய ஒரு கோடி பேர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது தெரிகிறது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து காணாமல் போயிருப்பதுபற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இத்தனை தேர்தல்களிலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் போலியாக இடம்பெற்றிருந்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இறந்தவர்கள் | குடிபெயர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இறந்தவர்களின் பெயரை நீக்குவதில் என்ன சிக்கல் இருந்தது. இறப்புச் சான்றிதழ் வழங்கும்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க நடைமுறை சாத்தியமில்லையா? வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இறுதிப் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்ற போது மக்கள் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். மீண்டும் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும் எதற்காக இத்தகைய சிரமங்களை வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கிறது? மிக எளிய முறையில் வாக்காளர் திருத்த நடைமுறையைக் கையாண்டிருக்க வேண்டும். போதிய கால அவகாசம் வழங்கி இந்தப் பணியை செய்திருந்தால் இவ்வளவு வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாமல் போயிருக்காது. அவசர அவசரமாக மிகக் குறுகிய காலத்தில் இந்தப் பணியைத் தேர்தல் ஆணையம் ஏன் செய்தது என்ற கேள்வி எழுகிறது.
வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும் நேர்மையாகவும் தகுதியுடைய யாருடைய பெயரும் விடுபடாமல் இருந்தால்தான் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பதை உணர்ந்து தேர்தல் ஆணையம் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் இவற்றில் கட்சி வேறுபாடின்றி எது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்குமோ அது சார்ந்து சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
•••
