குறளி

ஓவியம்: நரசிம்ம பாலாஜி
பட்டாளத்தில் இருந்த பெரியமாமா பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன். என் அம்மாவுக்கு நேர் அடுத்த தம்பி. எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நகைச்சுவையும், குறும்பும் நிரம்பிய மனிதர். அவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமேயிருக்காது.
வருடம் ஒரு முறை விடுமுறையில் வருவார். கம்பளி, பேரிக்காய், ப்ளம்ஸ், கமலா ஆரஞ்சு, கண்ணாடி பாட்டிலில் அடைத்த ஜாம் என்று கரட்டுப்பட்டியில் கிடைக்கவே கிடைக்காத சாமான்கள் கொண்டுவருவார். மாமா வருகிறார் என்று தபால் வந்த மாத்திரத்தில் நானும் சின்னக்காவும் பரபரப்பாகிவிடுவோம்.
எனக்கு உபரிப் பரபரப்பு உண்டு - மாமா சொல்லும் கதைகளை முன்னிட்டு. வீட்டின் எதிரிலிருந்த சிமெண்ட்டுக் களத்தில் வைத்து அவர் சொன்ன நார்ட்டன் துரை கதையை வரி பிசகாமல் பின்னாட்களில் எழுதினேன். பரவலான வ
