ஜனவரி 2026
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2026
    • கட்டுரை
      செம்புலப் பெயல்நீர் ஆனோம்
      கேரளம் தன்வயப்படும் மதங்களும் அரசியலும்
      சாதியச் சொல்லாடல்களின் சமகால மாற்றங்கள்
      23 ஆண்டுக் காத்திருப்பு
      இலக்கியத் தற்கொலை
      அம்மாக்களும் மகள்களும்
    • சிறப்புப் பகுதி: கல்வி
      அன்றும் இன்றும்: பொறுப்பும் துறப்பும்
      அரசுப் பள்ளி: மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி
      அரசு உதவிபெறும் பள்ளிகள்: தரையில் நடக்கும் தண்ணீரில் நீந்தும்
      கற்றல் சூழல்: கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவோமா-?
      பொதுத்தேர்வு ரத்து: பிழையான முடிவு
      கற்றலின் அழுத்தம்: தொலைந்துபோகும் குழந்தைமை
      மாற்றுக் கல்வி: சாத்தியங்களும் சறுக்கல்களும்
      கற்றல் செயல்பாடு: பூப்பறிக்கக் கோடரியா?
      ஜப்பான்: சுயகல்வியை நோக்கி...
      கல்வித்தரம்: ஆசிரியர்களின் பொறுப்பு
    • கதை
      குறளி
      மழை நிற்கப் போவதில்லை
      தொலைகின்ற இடம்
    • பாரதியியல்
      பாரதியும் சுதேசி கிருஷ்ணனும்
    • குறுங்கதைகள்
      ஆலயத்தின் காவிரி
    • சிறப்புப் பகுதி
      கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு?
    • உரை: காலச்சுவடு 30 சேரன் 50
      தமிழை உலகுக்குக் கொண்டுசெல்லும் பணி
    • பதிவு
      இசையும் இலக்கியமும்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      யதார்த்தத்தின் இறுக்கத்தைத் தளர்த்தும் கலை
    • கவிதைகள்
      கமலா சுரய்யாவின் கடைசி துஆ
      அலைகளை வீடுவரை அழைத்து வருபவன்
    • காலச்சுவடும் நானும்
      ‘‘உண்மைய சொல்லுங்க சார்”
    • தலையங்கம்
      யாருடைய தரப்பில் நின்று பேசுவது?
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2026 மதிப்புரை யதார்த்தத்தின் இறுக்கத்தைத் தளர்த்தும் கலை

யதார்த்தத்தின் இறுக்கத்தைத் தளர்த்தும் கலை

மதிப்புரை
ஷாலினி பிரியதர்ஷினி

ஷகி பெய்ன்
(நாவல்)
டக்லஸ் ஸ்டூவர்ட்
தமிழில்: ஜி. குப்புசாமி

வெளியீடு : 
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை
நாகர்கோவில்-1
பக். 638 
ரூ. 790

‘மொழிபெயர்க்கும் கலையைப் பயில விரும்புபவர்கள் இரண்டு நிபந்தனைகளைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். முதலாவது; நாம் எல்லாரும் எல்லாவிதங்களிலும் வேறுபட்டவர்கள்: வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள். அம்மொழியின் கூறுகள் ஏற்படுத்தும் தாக்கத்தால் உந்தப்பட்டு இந்த உலகை வெவ்வேறு பரிமாணங்களில் காண்பவர்கள். இரண்டாவது; நாம் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் பண்பொத்தவர்கள். உணர்வுகளின் ஆழ அகலங்களைப் பகிர்வதில், தகவல்கள் குறித்த புரிதலில், இப்படி நிறைய விஷயங்களில் நாம் ஒத்த இயல்புடையவர்கள். இந்த இரண்டு முன்நிபந்தனைகள் இல்லாமல் மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூக இயக்கமே சாத்தியமில்லை. மானுட இருப்பின் மறுபெயர் மொழிபெயர்ப்பு.’

- டேவிட் பெல்லோஸ்

ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் அண்மையில் வெளியான ‘ஷகி பெய்ன்’ நாவல் டேவிட் பெல்லோஸின் கூற்றுக்குச் சான்று பகர்வதாக இருக்கிறது. கச்சிதமான சொற்தேர்வு, மூல நூலின் நீள அகலங்களைத் தாண்டாத ஒழுக்கம் இவை ஜி. குப்புசாமி மொழிபெயர்ப்பின் அடையாளங்கள். எதுவும் மாறாமலிருக்கும் பொருட்டு எல்லாவற்றையும் மாற்றுவது நல்ல மொழிபெயர்ப்பு என்ற விதி இருக்கிறது. வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மாற்றுவதுதான் மொழிபெயர்ப்பு என்றும் அதனாலேயே அது மிகவும் எளிதான வேலை என்ற எண்ணமும் பலருக்கு உள்ளது. கடுமையான விதிகள் கொண்ட தற்காப்புக் கலை ஒன்றைப் பயிலும் கவனத்துடன் அணுகினால் மட்டுமே மொழிபெயர்த்தல் கலை வசப்படும். சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் ஒருவருக்குக் கைகூட அவருடைய மொழி ஆளுமை எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும்? அந்நிலையை அடைய அவர் எவ்வளவு வாசித்திருக்க வேண்டும்? ஷகி பெய்ன் நாவலின் இறுதிப் பகுதியில், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை ஒன்றில் இருக்கும் ஓவியத்தைப் பற்றிய விவரணையை, அந்தக் காட்சியை உள்வாங்கிக்கொண்டு, தமிழில் அந்தச் சொற்களை மொழிபெயர்த்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் காட்சியின் தாக்கத்தையும் அப்படியே கடத்தியிருப்பார் ஜி. குப்புசாமி.

 ‘அடிமுதுகுக்குக் கீழே பைஜாமா வழிந்திருந்தது’ என்ற மொழிபெயர்ப்பு மிகச்சரியாக இருக்கிறதா அல்லது மிகப் பொருத்தமாக இருக்கிறதா என்று கேட்டால், எது பொருந்துகிறதோ அதுதான் சரி என்கிறது மொழிபெயர்த்தல் கலையின் அடிப்படைக் கோட்பாடு. இத்தனைக்கும் அந்தப் பகுதிக்கு நாவலில் பெரிதாக எந்த முக்கியத்துவமும் இல்லை. இத்தகைய தருணங்கள் அபூர்வமானவை. உள்ளுணர்வின் குரல் ஓங்கி ஒலிக்கும் தருணங்கள். எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்துக்கொள்ளும் தருணங்கள்.

புனைவுக்கும் கவிதைக்கும் உள்ளுணர்வின் குரல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மொழிபெயர்ப்புக்கும் முக்கியம். மூல நூலில் இருக்கும் ஒரு சொல்லுக்கு இணையாகப் பல சொற்கள் மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து ஒரு சொல் நம்மைப் பிடித்து நிறுத்தும். இதுதான் அந்தச் சொல்லுக்கு இணையான சொல் என்று உள்ளுணர்வு கூறும்வரை மொழிபெயர்ப்பாளர் திருப்தி அடைவதில்லை; திருப்தி அடையக் கூடாது. அதற்கு அவர் மூல நூலை வெவ்வேறு படிநிலைகளிலிருந்து வாசித்திருக்க வேண்டும்; வாசகராக, விமர்சகராக, மூலநூலை எழுதியவரின் நிழலாக, இறுதியில் மொழிபெயர்ப்பாளராக. இது அதிக உழைப்பையும் கவனத்தையும் கோரும் வேலை என்பதாலேயே பலர் குறுக்குவழிகளை நாடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

2020ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு வென்ற நாவல், ஸ்காட்டிஷ் அமெரிக்க எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் முதல் நாவல் ஷகி பெய்ன். 2008ஆம் ஆண்டில் இந்த நாவலை அவர் எழுதத் தொடங்கியபோது அதை வெளியிடும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை.

பழமைவாதக் கோட்பாடுகளால் தன் அரசியலைக் கட்டமைத்த மார்கரெட் தாட்சர் அரசாங்கத்தின் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதிய லாபம் ஈட்டாத அரசு நிலக்கரிச் சுரங்கங்கள், கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், இரும்பு உருக்காலைகள் ஆகியவற்றைத் தொழிலாளர்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்காமல் மூடிவிட்டார். விளைவு, கிளாஸ்கோ நகரம் உள்ளிட்ட பிரிட்டனின் தொழில்சார் நகரங்களும் அதன் மக்களும் வறுமையின் பிடியில் சிக்கின. ஷகி பெய்ன் நாவலின் சமூகப் பின்னணியைக் குறித்து முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் விவரிக்கும்போதே ஒருவித இறுக்கம் நம் மனத்தில் குடிகொள்கிறது.

இதெல்லாம் கற்பனையில்தான் நடக்கும் என்று நம்ப முடியாத சில விஷயங்களைக் குறித்து நாம் சொல்வதுண்டு. இந்த நாவலின் சம்பவங்கள் அனைத்தும் நிஜத்தில் நடப்பதற்கு மட்டுமே சாத்தியம். கற்பனையில் இவ்வளவு குரூரங்கள் சாத்தியமில்லை. இவ்வளவு தீவிரம் சாத்தியமில்லை. நிதானமாக நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிஜத்தில் மட்டுமே சாத்தியம். அதே நேரத்தில் நிஜத்தில் மட்டுமே புலப்படும் சத்தியங்களும் இந்த நாவலில் உண்டு.

ஷகி பெய்ன், அவன் அம்மா ஆக்னெஸ், தந்தை ஷக், பாட்டி லிஸ்ஸி, தாத்தா வுல்லீ, சகோதரன் லீக், சகோதரி கேத்ரின் (ஆக்னெசின் முதல் கணவருக்குப் பிறந்தவர்கள்), நிலக்கரி, நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வீசும் கரும்புயல், சாம்பல் படிந்த குடியிருப்புப் பகுதிகள் என்று நாவலின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் நம் மனத்தைத் தைக்கும் சில காரியங்களைச் செய்துவிடுகின்றன. வலியால் துண்டாடப்பட்ட ஓர் உலகம் அன்பால் மென்மையாக்கப்படும் அனுபவங்களின் தொகுப்பு (A world of pain smoothened by love) என்று டைம்ஸ் பத்திரிகை இந்த நாவலைக் குறிப்பிடுகிறது.

ஷகி பெய்ன் நாவலின் முதல் அத்தியாயத்தில் கில்ஃபெதர் இறைச்சி கடையில் வேலைக்குச் சேர்கிறான் சிறுவன் ஷகி. தலைகள் வெட்டப்பட்ட சிசுக்கள்போல் தோலுரிக்கப்பட்ட கோழிகள் வரிசையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பதினைந்தாவது அத்தியாயத்தில் மீண்டும் மிஸ்டர் கில்ஃபெதர் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் குறிப்பிடப்படுகிறது. ஷகியின் அம்மா ஆக்னெஸ். ஆக்னெஸின் அப்பா வுல்லீ கேம்பெல். போரில் அவர் சாகாமல் திரும்பி வந்ததில் லிஸ்ஸிக்கு (ஆக்னெஸின் அம்மா) சந்தோஷம்தான் என்றாலும், கணவன் போருக்குச் சென்றிருந்த காலத்தில் குடும்பத்தை நடத்த உதவிசெய்த மளிகைக் கடைக்காரர் கில்ஃபெதருக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட்டுப் பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று புரியாமல் உள்ளூரத் தவிக்கிறாள். மறுநாள் காலை குழந்தையுடன் வெளியே செல்லும் வுல்லீ குழந்தை இல்லாமல் திரும்பி வந்ததை அறிந்து குழந்தை எங்கே என்கிறாள் லிஸ்ஸி. “எந்தக் குழந்தை” என்கிறார் வுல்லீ.

தாத்தா வுல்லீ கேம்பலால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தையும் (லிஸ்ஸிக்கும் கில்ஃபெதருக்கும் பிறக்கும் குழந்தை) அவருடைய மகள் வழி (ஆக்னெஸ்) பேரனான ஷகி பெய்னும் மீண்டும் சந்தித்துக்கொண்டார்களோ என்று ஒரு நொடி என் மனம் முடிச்சுப் போட்டுப் பார்த்தது. அப்படியும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம் என்பது போன்ற சாத்தியக்கூறுகள் இந்த நாவல் முழுவதும் காணக்கிடைக்கின்றன.

ஐந்து வயது ஷகியின் பரிச்சயங்கள் எல்லாருமே அவனைப் பார்த்து ஏதாவது ஒரு சமயத்தில் ‘நீ சரி இல்லை’ என்கிறார்கள். ஆண்மயக் கற்பிதங்களால் உருவான ஒரு சமூகத்தில் அவன் தனியனாகவே நிற்கிறான். ஷகி பெய்னைக் கோழை என்கிறார்கள், மென்மையானவன் என்கிறார்கள், பெண் தன்மை கொண்டவன் என்று கேலி செய்கிறார்கள். உண்மையில் ஷகி அந்த மென்மையை விரும்புகிறான். தன் உடல்மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஷகியிடம் ஓர் அசாத்தியமான சிந்தனைத் திறன் இருக்கிறது. மற்றவர்களைக் காட்டிலும் விஷயங்களை ஆழமாகக் கவனிக்கிறான். மருத்துவமனையில் செவிலிக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல் அதற்கு ஒரு சான்று.

இந்த நாவலின் ஒரு முகம் சிறுவன் ஷகி பெய்ன். மற்றொரு முகம் அவன் அம்மா ஆக்னெஸ் பெய்ன். குண வார்ப்பில் இருவரும் எதிரெதிர்த் துருவங்கள். ஷகிக்கு ஆக்னெஸ்தான் எல்லாம். அவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அவளிடம் பதில் இருக்கிறது. எல்லாப் பயங்களுக்கும் அவளிடம் தீர்வு இருக்கிறது. குடிநோய்க்கு அடிமையான ஆக்னெஸை உலகமே வெறுக்கிறது, ஷகியைத் தவிர. அம்மாவின் அந்த நிலைக்கு என்ன காரணம் என்று அவனுக்கு மட்டும் புரிந்ததுபோல் குடி மயக்கத்தில் கிடக்கும் அம்மாவின் உள்ளாடைகளைத் தளர்த்தி அவளை ஆசுவாசப்படுத்துகிறான். அம்மாவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு மகன், ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல அவளை மிகவும் நேசிக்கவும் செய்கிறான்.

ஷகியின் வாழ்க்கைப் பயணம் அதை நோக்கியே தொடர்கிறது. நிம்மதியின் சுவை அலாதியானது. அது பிடித்துவிட்டால் போதும், அதன்பிறகு நாம் தோள்களைக் குலுக்கிக்கொண்டு உடம்பை உதறிக்கொண்டு. பளபளப்பாக மின்னும் ஷூக்களைத் தரையில் ஊன்றி பம்பரம்போலச் சுழன்றாடிக் காட்டலாம்.

வாழ்க்கையிலிருந்து கலையை உருவாக்குவது என்பது பொறுப்பெடுத்துக்கொள்வது, தன் கட்டுப்பாட்டில் வாழ்க்கையைக் கொண்டுவருவது. சிதைந்துபோன குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு வாழ்க்கை அந்த வாய்ப்பை நிஜத்தில் வழங்குவதில்லை. வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர் அவருடைய துயரத்தைக் கலையாக மாற்றும்போது, ஒரு புனைவாக அதைக் கட்டமைக்கும்போது அதன் முழு வடிவமும் அவருடைய சாட்டைக்குச் சுழல்கிறது. அந்த அதிகாரம் அபாரமானது. ஷகி பெய்ன் நாவலில் அந்த அதிகாரத்தை நிலைநாட்டி இருக்கிறார் டக்ளஸ் ஸ்டூவர்ட். அவருடைய குரலின் எதிரொலியாகக் கேட்கிறது ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பு.

                 மின்னஞ்சல்: shalinidarshini@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.