தமிழை உலகுக்குக் கொண்டுசெல்லும் பணி
காலச்சுவடு 30வது ஆண்டையொட்டித் தமிழகத்திலும் அதற்கு அப்பாலும் சில நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்பது எங்களுடைய விருப்பம். தமிழகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன்னால் முதலில் 2025 மார்ச் மாதம் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் காலச்சுவடு 30 பற்றிய அமர்வு (ஜேபிஎம் அரங்கில்) நடந்தது. அதே மாதம் லண்டனில் நண்பர் பௌசர் ஏற்பாடுசெய்த நிகழ்ச்சி மார்ச் எட்டாம் தேதி டிரினிட்டி மையத்தில் நடந்தது. அதன் பின்னர் அதே மாதத்தில் பிரான்சில் சோர்போன் பல்கலைக் கழகத்தில் தெற்கு ஆசியத் துறையில் ஒரு ஆய்வுக்கூட்டத்தை மார்ச் 21 அன்று நடத்தியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து என்னுடைய வேண்டுகோளை ஏற்று நண்பர் சர்வேயும் அவரது நண்பர்களும் இந்த நிகழ்ச்சிக்கு ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலச்சுவடு முதல் இதழ் வருகிறது. கடந்த ஓராண்டில் என்னுடைய தந்தையார் சு.ரா. பிறருக்கு எழுதிய பல கடிதங்களை தொகுக்கத் தொடங்கியிருக்கிறோம். அவற்றில் பலவற்றைப் படித்துவருகிறேன். இதில் எனக்குத் தெரியவந்த விஷயம் கிட்டத்தட்ட இதழ் தொடங்கப்படுவதற்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவருக்குத் தமிழில் ஒரு மாற்று இதழ் உருவாக வேண்டும், அதில் பல முக்கியமான நல்ல விஷயங்கள் வர வேண்டும், அதுவழியாகச் சமூகத்தில் ஒரு பரவலான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவரை இருந்த சிறுபத்திரிகை மரபைக் கடந்த அளவில் அது நடைபெற வேண்டும் என்ற வேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதை அவர் எழுதியிருக்கும் கடிதங்களில் பார்க்க முடிகிறது. ஆகவே அதுமாதிரியான முயற்சிகளைத் தொடங்குவதற்குப் பலரையும் அவர் ஊக்குவித்துக் கடிதங்கள் எழுதுகிறார். தொடங்கக்கூடியவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவைத் தெரிவித்து அவர்களுக்கும் பல யோசனைகளைப் பகிர்ந்துகொண்டு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன.
காலச்சுவடு அக்டோபர் (2025) மாத இதழ் சுரா காலமாகி அவரது 20ஆம் ஆண்டு நினைவு இதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழில் அவரது சில கடிதங்களை வெளியிட்டிருக்கிறோம். 1986ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுயுகம் பிறக்கிறது இதழ் சார்ந்து அவர் எழுதிய பல கடிதங்கள் வெளி வந்திருக்கின்றன. அந்த இதழைத் தொடங்குவதற்கு அப்போது தமிழகத்திலிருந்த புலிகளுடைய தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டிலுள்ள பல அறிவுஜீவிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவருடைய தனிப்பட்ட ஆர்வத்தின்பால் அவர்களுக்குப் பண உதவி செய்து ஒரு பத்திரிகை தொடங்குவதற்கு உதவியிருக்கிறார். அதன் அடிப்படையில் புதுயுகம் பிறக்கிறது பத்திரிகை தொடங்கப்படுகிறது. தொடங்கியவர்கள் சுராவுக்கும் நண்பர்கள். ஆகவே அவர் அரசியல் சார்ந்த விஷயங்களை அணுகாமல் அப்படியொரு வாய்ப்பு உருவாவதை அடுத்துத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை எப்படி ஊக்கப்படுத்தலாம் என்று அவர்களுக்குப் பல்வேறு கடிதங்களை எழுதியிருக்கிறார். அந்த இதழ் பல்வேறு காரணங்களால் இரண்டு இதழ்களுக்குப் பிறகு வெளிவரவில்லை.
இதைப் போல எஸ்.வி. ராஜதுரையின் முன்னெடுப்பில் வெளிவந்த இனி என்ற பத்திரிகைக்கும் அவர் பெருமளவு உதவி, அது தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். இதுபோன்ற முயற்சிகளெல்லாம் தொடராத நிலையில் கடைசியாகத்தான் அவர் 1988ஆம் ஆண்டு தானாகவே ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவெடுத்து ஜனவரியில் காலச்சுவடு முதல் இதழ் வெளிவருகிறது.
அந்தக் காலகட்டத்தில் நான் நாகர்கோவிலில் இருக்கவில்லை. பெங்களூருவில் படித்துக் கொண்டிருந்தேன். ஆகவே அந்த இதழ்கள் எனக்குத் தபாலில் வரும். அதைப் படிப்பதைக் கடந்து என்னுடைய ஈடுபாடு அதிகளவில் இருக்கவில்லை. புதுயுகம் பிறக்கிறது நடத்தப்பட்டபோது இரண்டு மாதங்கள் சென்னையிலிருந்து அவர்களுடைய பணியைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அது பெரிய அனுபவமாகவும் இருந்தது. இதன் பின்னர் 1991ஆம் ஆண்டு அவர் காலச்சுவடு மலர் வெளியிடும்போது நான் திரும்ப ஊருக்கு வந்துவிட்டேன். அதில் அவர் சொன்ன பணிகளைச் செய்யக்கூடிய அளவில் என்னுடைய ஆதரவு அந்த மலரிலிருந்தது. பிறகு 1994ஆம் ஆண்டில் நானும் என்னுடைய இரண்டு நண்பர்களும் சேர்ந்து மீண்டும் காலச்சுவடு இதழைத் தொடங்கினோம். அது 9வது இதழ். அப்படித் தொடங்கும்போது ஏற்கெனவே இருந்த சிறுபத்திரிகை மரபைக் கடந்து பல்வேறு விஷயங்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு அதனுடைய வரையறையை முற்றிலும் வேறுவிதமாக அமைத்துத்தான் இதழ் தொடங்கப்பட்டது. அதுவரை வந்த பல பத்திரிகைகளை நாம் பார்க்கும்போது - காலச்சுவடு முதல்பகுதி உட்பட- அது நின்றுபோவதற்குக் காரணமாக இருப்பது படைப்புகள் போதுமான அளவு தரமாகக் கிடைக்கவில்லை. படைப்பாளிகளின் ஆதரவு இருக்கவில்லை என்ற ஒரு கருத்தைத்தான் பல இதழ்களை முடிக்கும்போது வெளிப்படுத்தியிருப்பார்கள் அல்லது தலையங்கங்களை எழுதியிருப்பார்கள். நாங்கள் அந்த வரையறையை விரித்துப் பல்வேறு விஷயங்களைக் காலச்சுவடில் கொண்டுவரலாம். உதாரணமாக முதல் மூன்று இதழ்களுக்குள் முத்தம்மா (காலச்சுவடு 12, டிசம்பர் 1995) என்பவரது பேட்டியை வெளியிட்டிருந்தோம். அவர் ஒரு புலம்பெயர் தொழிலாளர். அதாவது எங்கெல்லாம் பெரும்பணிகள் நடக்கின்றதோ அவ்விடங்களுக்குச் சென்று கூலிப்பணிகளைச் செய்யக்கூடியவர். ஒரு அணை கட்டப்படுகிறது என்றால் அங்கு சென்று விடுவார். ஒரு சாலைப்பணியென்றால் அங்கு சென்றுவிடுவார். அப்படிப்பட்ட ஒருவரை நீண்ட நேர்காணல் எடுத்து வெளியிட்டிருந்தோம். அந்த நேர்காணல் மிகப்பெரிய அளவிற்கு வாசகர்களால் வரவேற்கப்பட்டது.
இதேபோன்று வழக்கமாக இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவராத பல்வேறு விஷயங்களை உள்ளடக்கத் தொடங்கிய பிறகு இந்த 30 ஆண்டுகளில் ஒரு இதழுக்குப் போதுமான அளவு படைப்புகள் இருக்கவில்லை, அது பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்ற சூழல் எப்போதுமே வந்ததில்லை. ஒவ்வொரு இதழ் வரும்போதும் அடுத்த இதழுக்கான படைப்புகள் கைவசம் இருக்கக்கூடிய நிலையில்தான் படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் மும்மாத இதழ். இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இரு இதழ், 2004ஆம் ஆண்டிலிருந்து மாத இதழாக இருப்பத்தோரு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

கவிஞர் இளவாலை விஜயேந்திரனுடன் கண்ணன்
1995ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தைத் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் தொழிநுட்பம் சார்ந்த மாற்றம். அதாவது அச்சு ஊடகத்தின் தன்மை மாறுகிறது. அச்சுக்கோர்க்கும் இயந்திரங்களின் காலம் முடிந்துபோய் DTP Technology உருவாகி வரும்போது நாம் சிவகாசி அல்லது சென்னை போன்ற இடத்திலிருந்துதான் ஒரு பதிப்பகத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலை மாறி நம் இடத்திலிருந்து நடத்தக்கூடிய மாற்றம் அந்தத் தொழில்நுட்பம் சார்ந்து சாத்தியப்படுகிறது. இன்னொரு விஷயம் நாங்கள் இதழை நடத்தும்போது DTP முறையில்தான் ஆரம்பித்தோம். இருந்தாலும் வெளியில் சென்று அந்தப் பணிகளைச் செய்து இதழைத் தயார் செய்யும்போது பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்கள், நடைமுறை சார்ந்த கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தன.
1993ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. என்னுடைய மனைவியார் ஐடி சார்ந்த பணிகளை மேற்கொண்ட Programmer. அப்போது அவர் நாங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்துவிட்டு வீட்டிலேயே ஒரு கணினியை வாங்கி அந்தத் தொழில்நுட்பப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வீட்டில் வைத்தே தமிழில் அச்சுக்கோர்க்கும் அளவுக்கு ஒரு வசதியை 94 அல்லது 95ஆம் ஆண்டு ஏற்படுத்திவிட்டார். அவ்வாறு ஏற்படுத்தியதும் அப்பணி எளிதாக மாறிவிட்டது.
இந்தப் பின்புலத்தில்தான் ஒரு பதிப்பகத்தை நாமே தொடங்கி நடத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது. அதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று சு.ரா.வுக்கு அவரது எல்லாப் படைப்புகளும் வேகமாக அச்சில் வர வேண்டும். வாசகர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இன்னும் பல புதிய படைப்புகளை எழுத வேண்டும், அவையும் வெளிவர வேண்டும் என்ற வேகம் ஏற்பட்டிருந்தது. அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்குப் பதிப்பகங்கள் அப்போது இருக்கவில்லை. இரண்டாவது அவருடைய சகாக்கள், முன்னோடிகள், அவரோடு எழுதியவர்கள் என்று கருதத்தக்க பல்வேறு இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களுடைய பெரும்பான்மையான படைப்புகள் அச்சில் இருக்கவில்லை; அல்லது நல்ல பதிப்புகளில் வாசகர்கள் வாசிக்கக்கூடிய அளவில் அவை இருக்கவில்லை. இந்தப் பிரச்சினைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்தப் பின்புலத்தில்தான் நாங்கள் காலச்சுவடு பதிப்பகத்தைத் தொடங்கினோம்.
முதல் இரண்டும் சு.ரா.வின் படைப்புகளாக வெளிவந்தன மூன்றாவது படைப்பாக ஜி. நாகராஜனின் முழுமையான படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு பார்த்தால் சு.ரா.வின் எழுத்துக்களும் மற்ற முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளும் மாறி மாறித் தொடர்ந்து வெளிவந்து இன்றுவரை காலச்சுவடு வெளியீடுகளில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை நல்ல பதிப்புகளாகக் கொண்டுவரும் பணி என்பது தனி ஒரு பாதையாகச் சென்றுகொண்டிருக்கிறது. இதைக் கடந்து நவீன எழுத்தாளர்கள், புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் தனியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
காலச்சுவடு இரண்டு அல்லது மூன்றாவது இதழில் ‘ஏழுகடல் தாண்டி’ என்ற (இதழ் 11, ஏப்ரல் - ஜூன் 1995) பகுதியைத் தொடங்கினோம். இந்தப் பகுதி அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தக்கூடிய சிறுபத்திரிகைகள் பலதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பத்திரிகைகளை எடுத்து அவற்றிலுள்ள பகுதிகளை மீண்டும் காலச்சுவடில் வெளியிடுவது. அதன் வழியாக அவற்றைத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுக் செல்வது என்ற பணியை ஆரம்பித்திருந்தோம். இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் அப்பாவுக்கு ஏற்கெனவே இருந்த வலுவான தொடர்புகள், இலங்கைச் சமூகம் சார்ந்து என இவையெல்லாம் சேர்ந்து இரண்டாயிரமாவது ஆண்டு தமிழ் இனி 2000 என்ற மாநாட்டை நானும் சேரனும் ஒருங்கிணைப்பாளராக இருந்து காலச்சுவடும் இலங்கையிலிருந்து வெளியான சரிநிகரும் சேர்ந்து சிறப்பாக நடத்தினோம்.
அந்தக் காலகட்டத்தில் (நாகர்கோயிலுக்கு) மின்னஞ்சல் வந்துவிட்டது. தொலைபேசித் தொடர்புகள் மாறுகின்றன. இதனால் எங்களின் தொடர்பு வட்டம் தமிழ்நாட்டைக் கடந்து உலகளாவியதாக மாறியது. அந்தத் தொடர்புகள் வழியாக காலச்சுவடு 2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கை, புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எங்களது மொத்தப் படைப்புகள் 1400 நூல்களுக்கு மேல் வந்துவிட்டன. இதில் 250 நூல்கள் தமிழகத்துக்குப் அப்பாலுள்ள தமிழ் எழுத்தாளர்களின் (சிங்கப்பூர், மலேசியா எல்லாம் சேர்ந்து) படைப்புகளாகவும் இருக்கும்.
நான் இப்போது இங்கு வருவதற்கான வாய்ப்பு அமைந்ததற்கான காரணம் ஃபிராங்பர்ட் புத்தகச் சந்தையில் பங்கெடுத்ததுதான். 2007ஆம் ஆண்டு அவர்களிடம் Frankfurt Bookfair Fellowship Programme என்ற திட்டத்தின் வழியாக முதலில் வந்தேன். அது பதிப்பாளர் என்ற எனது பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்னர் எந்த ஆண்டு தமிழகத்தில் நடக்கக்கூடிய சென்னை புத்தகச் சந்தையில் கலந்துகொண்டேனோ அதற்கு அடுத்த மாதமே தில்லியில் நடக்கும் பன்னாட்டுப் புத்தகச் சந்தையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நண்பர்களால் ஏற்பட்டது. அதிலிருந்து தமிழகம் கடந்து இந்தியப் பதிப்புச் சூழலின் ஆழமான உறவுகள், அதையும் கடந்து உலகப் பதிப்புச் சூழலில் கலந்துகொள்ளும் ஆர்வம். இவையும் அந்தப் பயணங்கள் வழியாக மிக ஆழமாக ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஃபிராங்க்பர்ட் புத்தகச் சந்தை பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன். அதன்வழியாக இங்கு வரும் வாய்ப்பு உருவாகி Rights Trade என்ற பணியைத்தான் நாங்கள் ஃபிராங்க்பர்ட்டில் செய்கிறோம். Rights Trade என்றால் புத்தகங்களின் உரிமைகளைப் பரிமாறிக்கொள்வது. குறிப்பாக மொழிபெயர்ப்பு உரிமைகளாக இருக்கலாம். அது பதிப்பாளராக எங்களுடைய பணி.
இதையும் கடந்து அங்கு சினிமா உரிமைகள் சார்ந்த விஷயங்கள் நடக்கின்றன. புத்தக விநியோகிப்புகள், தொழில்நுட்பத்திற்கும் பதிப்பகத்திற்குமான தொடர்புகள், அச்சாக்கம், காகித வணிகம் என எல்லாம் நடப்பதற்கான வாய்ப்புகள் அங்கிருக்கின்றன. இவையெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன. நாங்கள் எங்கள் படைப்புகளின் மொழிபெயர்ப்புரிமைகளை பிற மொழிகளுக்குக் கொடுப்பது அவர்களிடமிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கான உரிமையைப் பெற்றுத் தமிழில் வெளியிடுவது என்பதை மிகப்பெரிய அளவில் செய்வதற்கான வாய்ப்பினை ஃபிராங்க்பர்ட் எனக்கு அமைத்துக் கொடுத்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு தமிழில் அதுவரை வெளிவராத ஆங்கிலப் படைப்புகள் சில அமெரிக்கப் படைப்புகள், ஓரிரு ஐரோப்பியப் படைப்புகள், நோபல் பரிசு பெற்றோரின் படைப்புகள், ரஷ்ய இலக்கியங்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையைக் கடந்து இன்னும் சிறுசிறு மொழிகள் . . . நார்வேஜியனிலிருந்து நான்கைந்து படைப்புகள், துருக்கி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா போன்று கிட்டத்தட்ட 30 நாடுகளின் மொழிகளிலிருந்து படைப்புகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள், கிளாசிக் படைப்புகள் எனத் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டுவருகிறோம்.
அதைப்போன்று தமிழ்ப் படைப்புகளை அவர்களிடம் கொண்டுசெல்வதற்கான ஒரு முயற்சி. முதலில் சொன்னது எளிதானது. அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டால் உரிமையைக் கொடுத்துவிடுவார்கள். நாம் வாங்கி வந்து மொழிபெயர்த்து வெளியிட்டுவிடலாம். ஆனால் நமது படைப்புகளைக் கொண்டுசெல்வது முற்றிலும் வேறு. முதன்முதலாக நான் ஃபிராங்க்பர்ட் வந்தபோது நமக்குத் தமிழ் பற்றிய கற்பனைகள் அதிகமாக இருக்க ஃபிராங்க்பர்ட் பதிப்புச் சூழலில் தமிழ் என்ன மொழி என்றே யாருக்கும் தெரியவில்லை. உலகத்தில் யாருடைய நூல் அறிமுகப் பட்டியலிலும் இல்லாத ஒரு புதிய விஷயத்தை நான் என்னுடைய நூல் அறிமுகப் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன். அது தமிழ் மொழி பற்றிய அறிமுகம். நூல் அறிமுகப் பட்டியலின் முதல் பக்கத்தில் ஒரு பக்கத்திற்குத் தமிழை அறிமுகப்படுத்திச் சுருக்கமாக எழுதிச் சேர்த்தோம். ஏனென்றால் மேற்கத்தியப் பண்பாட்டில் அவர்கள் கேள்விப்படாத, பெரும் மொழிகள் என்று அவர்கள் கருதக்கூடிய அரபி, ஸ்பானிஷ், ஃபிரெஞ்ச் அல்லாத அதிகபட்சமாக இந்தி, பெங்காலி. இதைக் கடந்த மொழிகளை விசித்திரமான மொழிகள் என்ற பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். நாம் அதைக் கடந்து வெளியே வந்து நமது மொழியைப் பற்றிப் பேசுவதே மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும். ஆகவே இது ஒரு கிளாசிக்கல் மொழி. இதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது என்பதை ஒவ்வொரு சந்திப்புகளிலும் சொல்வதற்குப் பதிலாக என்னுடைய நூல் அறிமுகப் பட்டியலிலேயே சேர்த்து முதலில் அதை அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன்.
வங்காளம் என்றால் நாங்கள் தாகூரின் மொழியிலிருந்து வந்திருக்கிறோம் என்று உரையாடலை ஆரம்பிக்கலாம். அவருக்கு இணையான படைப்பாளிகள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று பேசுவதற்கு ஒரு திறப்பை அது வழங்கும். அப்படிப்பட்ட எதுவுமே நமக்கு இருக்கவில்லை. நமது பெரிய படைப்புகள் எதுவும் உலகிற்குச் செல்லவில்லை. நமது படைப்பாளிகள் அறியப்படவில்லை. இதுபோன்ற நிலையில் தமிழ் மொழியிலிருந்து படைப்புகளை வாங்கி வெளியிட்டுத்தான் அவர்களது தொழிலைப் பார்க்க வேண்டும் என்ற சூழலும் கட்டாயமும் அவர்களுக்கில்லை. ஒரு குறிப்பிட்ட எடிட்டருக்கு அந்த ஆர்வம் இருந்தால்கூட அந்தத் திட்டத்தை அவர் தன்னுடைய பதிப்பகத்தில் ஏற்க வைப்பது மிகவும் கடினம். ‘நாம் எதற்காக செய்ய வேண்டும். அதில் என்ன தனித்துவம் இருக்கிறது’ என்ற கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. இதுபோன்ற விஷயங்களைக் கடந்து, பல்வேறு படைப்புகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது என்று பார்த்து அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை இந்தியாவில் வெளியிட்டுத் தயார்படுத்தி, மிக மிக மெதுவாக நூல் அறிமுகப் பட்டியலைத் தயார்செய்து, ஒவ்வொன்றாகப் பேசி, ஒரு பதிப்பகம் வெளியிட்டால் அதை அடுத்த பதிப்பகத்தில் கொடுத்து இன்றுவரை கிட்டத்தட்ட 25 மொழிகளுக்கு மேலாகத் தமிழ் படைப்புகள் போகக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.
நேற்று என்னுடைய முகநூலில் ஒரு பதிவைப் வெளியிட்டிருந்தேன். இந்த முறை ஃபிராங்க்பர்ட் சென்றிருந்தபோது மூன்று புதிய நூல்களை அங்குள்ள பதிப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன். ஒன்று ‘ஒரு புளிய மரத்தின் கதை’ மாசிடோனிய மொழியில் வெளிவந்தது. இன்னொன்று அசர்பைஜானில் ‘வாடிவாசல்’. மூன்றாவது சல்மாவின் ‘மனாமியங்கள்’ ஆர்மீனிய மொழியில் வெளிவந்தது. இதுபோன்று சிறுசிறு மொழிகள். பல சமயங்களில் அவர்களது மொழியில் படைப்புகளை வெளியிட்டு அதை நமது நாட்டிற்கு அனுப்ப முடியாது. ஏனென்றால் அச்சிறிய நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தபால்துறையில் உடன்படிக்கை இருக்காது. ஆகவே தபால் சேவை இருக்காது. அதுபோன்ற மொழிகளில்கூடத் தமிழ்ப் படைப்புகள் வரக்கூடிய வாய்ப்பும் சூழலும் உருவாகியிருக்கிறது. இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழை மேலும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
நல்வாய்ப்பாக இதுபோன்ற விஷயங்களுக்கு ஆதரவு தரக்கூடிய அரசுச் சூழல் தமிழ்நாட்டில் இப்போது உருவாகியிருக்கிறது. இந்த முறை, கடந்த முறை, அதற்கு முந்தைய ஆண்டும் தமிழக அரசு சார்பாக ஃபிராங்க்பர்ட்டுக்கு வந்து அரங்கு அமைக்கிறார்கள். சென்னைப் பன்னாட்டுப் புத்தகச் சந்தை என்று தொடங்கி நடத்திவருகிறார்கள். அதற்கு அயல் பதிப்பாளர்களை அழைக்கிறார்கள். நம்முடைய படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு நல்கை வழங்கக்கூடிய திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் வழியாகவும் தமிழ்ப் படைப்புகளுக்கு ஒரு புதிய ஊக்கம் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிடைத்துவருகிறது. இந்தச் சூழலில் இன்னும் பல முக்கியமான பணிகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்.
19.10.25 அன்று ஓஸ்லோவில் ‘காலச்சுவடு 30 - சேரன் 50’ நிகழ்வில் ஆற்றிய உரை.
