இசையும் இலக்கியமும்

சென்ற டிசம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், சங்கீத காலநிதி சஞ்சய் சுப்ரமணியனின் சங்கீத நினைவுகள் ‘இசைபட வாழ்தல்’ தமிழில்: ப. சகதேவன், தி. ஜானகிராமனின் இசைசார் சிறுகதைகள் அடங்கிய, ‘ரசிகரும் ரசிகையும்’ (தொகுப்பு: சுகுமாரன்) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், ‘இசைபட வாழ்தல்’ நூலை இதழாளர் ப. கோலப்பன் வெளியிட, நீலம் மாத இதழ் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் பெற்றுக்கொண்டார். ‘ரசிகரும் ரசிகையும்’ நூலை எழுத்தாளர் ஜே.பி. சாணக்யா வெளியிட, மொழிபெயர்ப்பாளர் ரீனா ஷாலினி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, ‘இசைபட வாழ்தல்’ நூல் குறித்துப் பேசிய ப. கோலப்பன், வாசகர் படிப்பதற்கு எளிய நடையில் உள்ளது என்றார். இசை சார்ந்த குடும்பப் பின்னணியில் வந்தவர் சங்கீதத்தைத் தன் வாழ்வாகக் கொள்ளாமல் மேற்கொள்ளாமல் வேறொன்றைச் செய்திருந்தால் மட்டுமே வியப்படைந்திருப்பேன் என்றார். இந்நூலின் வாயிலாக சஞ்சய் சுப்ரமணியன் செம்மங்குடி, வண்டிக்கார மணி, பாலமுரளி போன்ற பல இசை ஆளுமைகளைத் தேடித் தேடிக் கேட்டவராக உள்ளார் என்பதை அறிய முடிகிறது. அதேபோல் இசைசார்ந்த நூல்களையும் வாசித்துள்ளார். தொடர்ந்து, இசையில் தேடலும் ஆழங்கால்பட்ட திறந்த மனங்கொண்டு அணுகுகிற கலைஞராகத் திகழ்கிறார் என்றார். இசை சார்ந்த தன்னுடைய ரசிகர்களுக்குப் புதிய பாடல்களை அளித்துத் திருப்திப்படுத்துபவர் சஞ்சய்; அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்டுள்ளார் என்பதை இந்நூலில் அறிய முடிகிறது என்றார். மேலும், இந்நூல் இசைசார்ந்த அன்பர்களுக்கு மட்டுமன்று எத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. தண்டபாணி தேசிகர் குறித்து அவர் எழுதியதை மிக முக்கியமானதாகக் கருதுவதாகக் கூறினார். இலக்கிய உலகிற்கும், இசை உலகிற்கும் கிடைத்த பரிசாக இந்நூலைக் காண்பதாகக் குறிப்பிட்டார்.

‘ரசிகரும் ரசிகையும்’ நூல் குறித்துப் பேசிய எழுத்தாளர் ஜே.பி. சாணக்யா, தி.ஜாவின் கதைகளில் கவனிக்கத் தவறிய எளிமையாகக் கடந்துசென்ற செய்திகளைக் கவனப்படுத்த இச்சிறுகதைத் தொகுப்பு துணைநிற்கிறது என்றார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதைகளும் வாசிக்கப்பட வேண்டியவை. அவற்றில், ‘ரசிகனும் ரசிகையும்’, ‘செய்தி’ ஆகிய கதைகளை எடுத்துக்கொண்டு பேசினார். தி.ஜாவின் கதைசொல்லல் முறை, மொழிநடை, சொல்வழக்கு, கதைமாந்தர் இயல்பு, கதையின் கச்சிதத் தன்மை போன்றவற்றை ரசனையோடு விளக்கினார். தி.ஜாவை மீள்வாசிப்புச் செய்ய உதவும் தொகுப்பாக, ‘ரசிகரும் ரசிகையும்’ நூலைக் காண்பதாகக் கூறினார். தி.ஜாவின் எழுத்துகளை மிக நுண்மையான பார்வையில் அணுகி, சுவாரசியமான உரையை நிகழ்த்தினார் சாணக்யா.

சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன், ‘இசைபட வாழ்தல்’ ஆங்கில மூல ஆசிரியர் கிருபா. ஜி, தமிழில் மொழிபெயர்த்த ப. சகதேவன் மூவருடனான கலந்துரையாடலை எழுத்தாளர் அரவிந்தன் ஒருங்கிணைத்தார். இக்கலந்துரையாடலில், எழுத்தாளர் அரவிந்தன் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு மூவரும் விளக்கமாகவும் தெளிந்த பார்வையுடனும் பதிலளித்தனர். தன்னுடைய சங்கீத அனுபவங்களையும் வாழ்வனுபவங்களையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது, இதை எழுத கிருபா ஜியைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதையெல்லாம் கலந்துரையாடலில் சஞ்சய் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். தி. ஜானகிராமன், இளையராஜா ஆகியோரைப் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைத்தார். சஞ்சயின் தன் கூற்றாக வெளிப்படும் இந்த நூலில் அவருடைய குரலைக் கொண்டு வந்தது எப்படி என்று கிருபா ஜி விளக்கினார். இசையின் மீதும் சஞ்சயின் இசையின் மீதும் தனக்கு இருக்கும் ஆர்வமே இந்த நூலை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடத் தூண்டியதாக மொழிபெயர்ப்பாளர் ப. சகதேவன் கூறினார். இந்த நிகழ்வில் வாசகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைப் பலராமன் சுப்புராஜ் ஒருங்கிணைத்தார்.


குறிப்பு: நிகழ்ச்சியின் காணொலித் தொகுப்பை சுருதி இலக்கியம்’ யுடியூப் தளத்தில் காணலாம். நன்றி: சுருதி டிவி. https://www.youtube.com/watch?v=789U3DDQGbE.
படங்கள்: தாமோதரன்
மின்னஞ்சல்: balaramanaavin@gmail.com
