மாநிலத் தேர்தல் முடிவுகள்: மாறிவரும் தேர்தல் களம்
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற ஹரியானா, மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தல்கள் பலரும் எதிர்பாராத முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்குப் பெரு வெற்றி கிடைக்குமென்றோ காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் சரிவு ஏற்படுமென்றோ யாரும் கணிக்கவில்லை. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 233 இடங்களை வென்றிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி வென்ற மொத்த இடங்கள் 50தான்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 41 இடங்களில் பாஜக கூட்டணி 17 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 31 இடங்களை வென்றிருந்தது. இதே போக்கு சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றே பரவலான எதிர்பார்ப்பும் கணிப்பும் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தலைகீழாக்கிவிட்டது தேர்தல் முடிவு. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஹரியானா தேர்தலும் இதேபோன்ற அதிர்ச்சியைத் தந்தது. மக்களவைத் தேர்தலில் பாஜக சந்தித்த பின்னடைவு தற்காலிகமானதுதானோ என்ற எண்ணத்தை இந்த முடிவுகள் தோற்றுவித்தன.
2014, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் மோடியின் வசீகரமும் பிம்பமும் பாஜகவின் வெற்றிக்குப் பெருமளவில் காரணமாக அமைந்திருந்தன. அந்த வசீகரமும் பிம்ப வலிமையும் 2024 மக்களவைத் தேர்தலில் காணப்படவில்லை. எனவே பாஜகவால் முன்புபோல வெற்றிகளைக் குவிக்க முடியாது என்றே அரசியல் வல்லுநர்கள் கணித்தார்கள். அது மட்டுமல்ல; தேர்தல் களத்தில் மோடி-அமித் ஷாவின் வலிமை குறைந்துவரும் நிலையில் இருப்பதாகவும், இது பாஜகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கெல்லாம் மாறாக ஹரியானா, மகாராஷ்டிரத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
மாநிலத் தேர்தல்களில் உள்ளூர்ப் பிரச்சினைகள் முனைப்புக்கொள்வதால் இந்த வெற்றியை நாடு தழுவிய அளவில் பாஜக பழைய வலிமையைப் பெறும் என்பதன் அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலுடன் நான்டெட் என்னும் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அந்த மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. எனவே சட்டமன்றத் தேர்தல் முடிவை மக்களவைத் தேர்தலுக்கான அடையாளமாகக் கொள்ள முடியாது என்னும் வாதமும் எழுகிறது.
பாஜகவின் இந்த வெற்றிகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்களை அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இலவசத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துவரும் பாஜக, மகளிருக்கான ‘லட்கி பஹின்’ (அன்பான சகோதரி) திட்டத்தை மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதியாக முன்வைத்தது. இது தமிழ்நாட்டில் பெண்களுக்குத் தரப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் போன்ற திட்டம். இதன்கீழ் பெண்களுக்கு நேரடியாக மாதம் ரூ.1500 வழங்கப்படும். பாஜகவுக்குப் பெண்களின் ஆதரவு கிடைக்க இந்தத் திட்டம் உதவிசெய்திருக்கிறது. பெண்களின் வாக்களிப்பு 2.5 விழுக்காடு அதிகரித்திருப்பது இந்த வாக்குறுதியின் விளைவாக இருக்கும் என்று கருதலாம்.
இதைத் தவிர, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்றதும் பாஜகவின் வெற்றிக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு மோடியை முன்னிறுத்தி பாஜக போட்டியிட்ட மக்களவைத் தேர்தலின்போது பல மாநிலங்களில் ஆர்எஸ்எஸ்ஸின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தை மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 10ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் செயல்வீரர்களின் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் மோகன் பாக்வத்தின் உரையிலிருந்து ஊகிக்கலாம். தேர்தல் என்பது போட்டிதானே தவிரப் போர் அல்ல என்று சொன்ன அவர் தேர்தல் முடிவுகளைப் பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்றார். மக்கள் கருத்தை உருவாக்குவதுதான் எங்கள் வேலை என்றார். நாடாளுமன்றத்தில் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்திய அவர், நல்ல சேவகர் யார் என்பது பற்றியும் தன் கருத்தைச் சொன்னார். “பணியின்போது நாகரிகமாகவும் பணிவுடனும் நடந்துகொள்பவரே உண்மையான சேவகர். நான் இதைச் செய்தேன் என்னும் ஆணவம் இருக்கக் கூடாது,” என்றார். மணிப்பூரில் கடந்த ஓராண்டாக நடந்துவந்த வன்முறை பற்றியும் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு தன்னை முன்னிறுத்தித் தேர்தலை எதிர்கொள்ளும் மோடியின் அணுகுமுறைக்கு எதிரானது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். “மோடியின் உத்தரவாதம்”, “அடுத்த முறையும் மோடியின் ஆட்சிதான்,” என்பன போன்ற முழக்கங்களையே மோகன் பாக்வத் மறைமுகமாகக் குறிப்பிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதினார்கள்.
இதன் விளைவு ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தெரிந்தது என்று கருத வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் கண்டிப்பாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட அந்தத் தேர்தலில் மோடியை முன்னிறுத்தும் வியூகம் பின்னுக்குச் சென்று இதர வியூகங்கள் முனைப்புப் பெற்றன. மகாராஷ்டிரத் தேர்தலிலும் அதுவே நடந்தது. இலவசத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துவந்த பாஜக அந்த நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டு மகளிருக்கான உதவித் தொகையைத் தரும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தது. ஹரியானா, மகாராஷ்டிரத் தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் மிகவும் தீவிரமாகக் களமிறங்கிப் போராடியது. மாநிலத் தேர்தலாக இருந்ததால் மோடியை முன்னிறுத்தி வாக்குகளைக் கவரும் முனைப்பும் மட்டுப்பட்டிருந்தது. தேர்தல் களத்தில் மோடி-ஷாவின் இருப்பும் ஆதிக்கமும் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகவே இருந்தன.
இத்தகைய சூழ்நிலையில் பாஜக பெற்றுள்ள வெற்றி சில கேள்விகளையும் ஊகங்களையும் எழுப்புகிறது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களிலும் இடையில் நடைபெற்ற பல சட்டமன்றத் தேர்தல்களிலும் மோடி என்னும் பிம்பம் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததைப் போல 2024 மக்களவைத் தேர்தலில் அமையவில்லை. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மோடி வசியம் பழையபடி வேலை செய்யவில்லை. இந்நிலையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக தோல்வியடைந்திருந்தால் அது மக்களவைத் தேர்தலில் நிலவிய போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட்டிருக்கும். மோடியின் வசீகரம் பலவீனமானதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக அது இருந்திருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் பலரும் எதிர்பாராத விதமாக பாஜக வென்றிருக்கிறது. மோடியை முன்னிறுத்தாமல், மோடியின் தீவிரப் பிரச்சாரம் நிகழாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது. எனில், மோடியைத் தாண்டி பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் யோசிக்க ஆரம்பித்துவிட்டதன் தொடக்கமாக அல்லது அடையாளமாக இந்தத் தேர்தலைப் பார்க்க முடியுமா?
கருத்தியல் அடிப்படையை வலுவாகக் கொண்ட அமைப்புகள் தனிநபர்களைச் சார்ந்து இயங்குவதை விரும்புவதில்லை. ஆர்எஸ்எஸ்ஸும் இதற்கு விதிவிலக்கு இல்லை. மோடியைப் போன்ற ஒருவர் அமைப்பை மீறி வளர்ந்துவருவதை ஆர்எஸ்எஸ் சிந்தனையால் ஏற்க முடியாது. அதே சமயத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தனிநபரின் செல்வாக்கு உதவியாக இருக்கும்போது அதைப் புறக்கணிக்கவும் முடியாது. எனவே மோடியின் தனிப்பட்ட பிம்பத்தின் பலன்களை முழுமையாக அறுவடை செய்துவந்த அமைப்பு, அந்தப் பிம்பத்தின் ஒளி மங்கும் நேரத்தில் கச்சிதமாகக் காய் நகர்த்தி ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் வியூகமாக ஹரியானா, மகாராஷ்டிரத் தேர்தல் அணுகுமுறையைக் காண இயலும். தனிநபர்களின் பிம்பங்கள் வலுவாக இருந்தபோதும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நுண்தள வியூகங்களை அமைத்துச் செயல்பட்ட சங்கப் பரிவார அமைப்புகள் இப்போது அந்த முயற்சியை, தனிநபர்களைப் பெருமளவில் தவிர்க்கும் கட்டத்திற்குக் கொண்டுசெல்ல முனைவதாகத் தெரிகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கான சவாலைக் கணிசமாகக் கூட்டிவிடும். தனிநபர் பிம்ப வலிமையால் கிடைக்கும் வெற்றியைக் காட்டிலும் அமைப்பு சார்ந்த வலிமையுடனும் உள்ளூர் நிலவரங்களுக்கேற்ற நெகிழ்வுகளுடனும் ஒரு கட்சி களமிறங்கும்போது அதன் வெற்றி வாய்ப்பு கூடிவிடும்.
எவ்வளவுதான் அமைப்பு சார்ந்த வலிமையும் உணர்ச்சிகரமான உத்திகளும் இருந்தாலும் ஒரு எல்லையைத் தாண்டி ஊடுருவ இயலாமல் இருந்த பாஜகவுக்கு மிகவும் தேவையான வீச்சையும் பரவலையும் மோடியின் பிம்பம் அளித்தது. அந்தப் பிம்பத்தின் பலன்களை முழுமையாக அனுபவித்த கட்சி இன்று அந்தப் பிம்பத்தைத் தாண்டித் தன் செல்வாக்கின் வலையை நன்கு திட்டமிட்ட வகையில் விரிப்பதாகத் தெரிகிறது. மோடி பிம்பம் முற்றிலும் தன் ஒளியை இழப்பதற்கு முன் அமைப்பின் வலைப்பின்னலால் வாக்காளர்களை வளைக்கும் சங்க பரிவாரத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கக்கூடும் என இந்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.
கள வியூகத்தில் ஆர்எஸ்எஸ் செய்துவரும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு மாற்று வியூகம் அமைக்க வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தொடர்ந்து மோடி பிம்பத்தையே இலக்காகக் கொண்டிருந்தால் எதிர்ப்பின்றி ஆர்எஸ்எஸ் தன் வியூகத்தை வலுப்படுத்திக்கொண்டு செல்லும். தனிநபர் பிம்பம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அது குறுகிய காலத்திற்கு மேல் நீடிக்காது. அமைப்பு சார்ந்த வலிமைக்கு ஒப்பீட்டளவில் கூடுதலான ஆழமும் நீடித்த ஆயுளும் இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த இடங்களுக்கு ஏற்ற, தனிநபர் பிம்பங்களைச் சாராத கள வியூகங்களை அமைத்து ஆர்எஸ்எஸ் தலைமையில் சங்கப் பரிவார அமைப்புகள் களமிறங்கும் நிலையில் அதை எதிர்கொள்ள அதற்கு இணையான நுண்வியூகங்களும் கடினமான உழைப்பும் அமைப்பு சார்ந்த பலமும் தேவை. தேசியத் தலைமை, பெரிய கட்சி என்னும் உரிமைகோரல்களைக் கைவிட்டு, மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளைத் துறந்து, அந்தந்த இடங்களுக்கு ஏற்ற கூட்டணி, ஒவ்வொரு பகுதிக்குமான அணுகுமுறை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களம்காண வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் சுறுசுறுப்பைக் காட்டுவதோடு நில்லாமல் தொடர்ந்து களத்தில் மக்களைச் சந்திக்க வேண்டும். உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். உள்ளூரில் செல்வாக்குப் பெற்றவர்களை மதிக்க வேண்டும். தனிநபர் பிம்பத்துடன் வரும் சவாலைக் காட்டிலும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பு முழு மனதுடன் களமிறங்கும் சவாலை எதிர்கொள்வது கடினம் என்னும் புரிதலுடன் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்க வேண்டும். இல்லையேல் ஹரியானாவும் மகாராஷ்டிரமும் தந்த அதிர்ச்சி பிற பகுதிகளுக்கும் பரவும்.