வ.உ.சி. வரலாறு: ஒரு தேடலின் பயணம்
ஆ.இரா. வேங்கடாசலபதியுடன் பா. மதிவாணனும் கரு. ஆறுமுகத்தமிழனும் உரையாடியதன் பதிவு திருச்சி வானொலியில் 03.08.2024இல் ஒலிபரப்பானது. அந்த உரையாடலில் வரலாற்று ஆய்வுபற்றியும் வ.உ.சி.யைத் தான் கண்டடைந்தது பற்றியும் வேங்கடாசலபதி பகிர்ந்துகொள்கிறார். உரையாடலின் பகுதி இது.
எது உங்களை அவ்வளவு தீவிரமாக வ.உ.சியை நோக்கிச் செலுத்தியது?
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் பாடநூலில் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு இடம்பெற்றிருந்தது. அதில் வ.உ.சி.பற்றிய குறிப்பே இல்லை. அப்போதே வ.உ.சி. என்ற பெயர் தமிழகத்தில் எல்லோரும் அறிந்த பெயர். கப்பலோட்டிய தமிழன் என்றும் செக்கிழுத்த செம்மல் என்றும் அவர் அறியப்பட்டிருந்தார். ஆனால் பாடநூலில் அவருடைய பெயர் இல்லை. அது பெரிய ஒரு குறையாக மனத்தை உறுத்திக்கொண்டிருந்தது. அதையே ஒரு முகாந்திரமாக வைத்து உடனே அவரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது இன்னும் அதிகமாகத் தேடிச் சென்றப