கடிதங்கள்
டிசம்பர் 2024 இதழில் வெளியான சுகுமாரனின் ‘இசைபட வாழ்தல்’ கட்டுரையையும் அதனைத் தொடர்ந்து டி.எம். கிருஷ்ணாவின் குரலில்
எதிரொலிக்கும் ‘வாழ்வின் கதை’ என்ற கட்டுரையையும் படித்தேன்.பெரியாரைப் புகழ்ந்து பாடியதாலோ அம்பேத்கரைப் போற்றிப் பாடியதாலோ கர்நாடக சங்கீதத்தின் மாண்பு குறைந்துபோய்விடுவதில்லை. கிறிஸ்தவத் தமிழ்ப் பண்டிதர்களும் இஸ்லாமியத் தமிழ்ப் பண்டிதர்களும் தமிழ்ப் பாடல்கள் பாடியதால் தமிழின் மாண்பு குறைந்துவிட்டதா என்ன? இசை எல்லோருக்குமானது. தொலைக்காட்சிகளில் கிராமப்புறங்களிலிருந்து வரும் குழந்தைகள் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் நல்ல குரல் வளத்துடனும் இசை நயத்துடனும் பாடவில்லையா? அவர்களும் முறையான பயிற்சி பெற்றால் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்குவார்கள். சங்கீதம் புனிதமானது, தெய்வீகமானது என்று கூறிப் பெரும்பாலானவர்களை விலக்கி வைப்பதன் மூலம் தமது தனிப் பெருமையைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள்.
டி.எம். கிருஷ்ணா இளகிய மனதுடையவர். எம்.எஸ். என்ற இசை ஆளுமையின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பற்றிய அவரது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வாழ்க்கை வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. “அவரது துயரங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் அவருடைய உண்மையான குரலைக் கேட்டதே இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்ற வரிகள் உண்மையானவை. ‘மீரா’ படத்தில் அவர்
பாடிய பாடல்கள் உண்மையில் அவரது மனதின் வெளிப்பாடாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. “இசையின் தூய்மை குறித்து என் மனதில் கட்டமைக்கப்பட்டிருந்த முன் முடிவுகள் வன்முறை நிரம்பிய பாரபட்சங்கள் என்பதை உணரவைத்தார்” என்ற வலி நிரம்பிய வரிகள் நம்மையும் ஆழச் சிந்திக்கவைக்கின்றன. எம்.எஸ். இசையில் தனக்கான இடத்தை அடைந்தார், ஆனால் வாழ்க்கையில் தனக்கான இடத்தை அடையப் போராடினார்; துணிவுடன் இக்கட்டுரைகளைப் பிரசுரித்தமைக்குத் தங்களைப் பாராட்டுகிறேன்.
கு. அசோகன்,
நாகர்கோவில்.
அரவிந்தனின் ‘சங்கடம்’ மிகவும் நன்று. சரளமான சொற்றொடர்களையும் சம்பவங்களையும் கதாபாத்தி ரங்களையும் இந்தப் படைப்பில் உலவவிட்டுள்ளார். கதையின் முடிவால் கதை சொல்லிக்கு மிகப்
பெரியதொரு சங்கடம் தீர்ந்திருந்தது. ஆனால் வாசகனாக இந்த முடிவைச் சற்றும் எதிர்பார்த்திருக்க
வில்லை. சித்ரா அம்மையார் கதைசொல்லியிடம் மாத்திரம் அன்று, என்னுள்ளும் கதாநாயகியாகக் குடிகொண்டுவிட்டார்.
சில மாதம் முன்பு காலச்சுவடில் வெளியான ஹேமி கிருஷின் ‘கை’ கதையில் இருந்ததைப் போலவே இக்கதையிலும் வாழ்வின் தத்துவார்த்தப் பார்வை வந்து போயிருந்ததை எண்ணிக்கொள்கிறேன். என் வாழ்வின் ஒரு துளியும் ஞாபகத்தில் வந்து அலைமோதிச் சென்றது! இம்மாதிரியான சரளமான பாணியில் சொல்லிச் செல்லும் எந்த கதையும், சிறுகதையோ நாவலோ, உடனுக்குடன் வாசக வரவேற்பையும் கலைமதிப்பீட்டையும் ஒருங்கே தக்க வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.
எல். கோபாலகிருஷ்ணன்,
மின்னஞ்சல்.
டிசம்பர் இதழ் முழுவதும் பிராமண எதிர்ப்பு கமழ்ந்தது. இனி எத்தனை காலம் இந்தப் போர்வை பலன் தரும்? காலச்சுவடு இதழை எத்தனை தமிழர்கள்
படித்து உள்வாங்குவார்கள்? பிராமணர் என்றாலே வெறுத்து ஒதுக்குகிறீர்கள். பலவீனமானவர்களை விமர்சிப்பது உங்களது பலத்தைக் காட்டுகிறது. கிருஷ்ணாவிற்கு பாரத ரத்னாவே வழங்கட்டும்; யார் தடுப்பது? சக மனிதனைப் பிறப்பால் துச்சமென நினைப்பதல்லவா சாதித் துவேஷம். இதில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வேறு. முழு வரியும் தெரிந்தோர் எத்தனை தமிழர்கள்? எம்.எஸ்., காற்றில் கலந்த துயரல்ல! காற்றில் கலந்த உயிர். இசை வாணிக்கும் சங்கீத கலாநிதி வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
சு. வாசன்,
மின்னஞ்சல்.
‘துணை’ (வாஸந்தி) கிடைத்தது. நான் மறதி வியாதிக் கதைகள் படிப்பதில்லை. சினிமா பார்ப்பதில்லை. அதன் கொடூரத்தை வீட்டில் இருமுறை பார்த்தவன். நான் எதிர்பார்த்ததுபோலவே கதை இருந்தது. இரண்டு நாட்களுக்கு எனக்குத் தூக்கம் வராது. அப்படி என் மனதைப் போட்டு அசைத்துவிட்டது. ஆனால் ஒரு நன்மை இருந்தது.
ஒரு சிறுகதை படித்து முடிந்ததும் அது எனக்கு என்ன தந்தது என்று எண்ணிப்பார்ப்பேன். அந்த விசயத்தில் எனக்கு இந்தச் சிறுகதை நிறையவே தந்தது. பலதை நினைவூட்டியது.
20 வருடத்திற்கு முன்னர் இந்தக் கதையை இன்னும் நன்றாக அனுபவித்திருப்பேன். இப்பொழுது பெயர்ச் சொற்கள் அழிந்துகொண்டு வருகின்றன; வினைச் சொற்கள் அழிவதில்லையாமே. என்னால் மறக்க முடியாத வரிகள் ஒளவை சொன்னதுதான். ‘இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது.’
எத்தனை பொருத்தம்! இரண்டு நாள் தூக்கம் கடன் தாருங்கள்.
அ. முத்துலிங்கம்,
மின்னஞ்சல்.
டி.எம். கிருஷ்ணாவினுடைய இசை மேதமையைக் கருத்தில் கொள்ளாமல் அவருடைய சமூக நடவடிக்கைகளை முன்னிறுத்தி அவருக்கு விருது அளிக்கப்படுவதை எதிர்ப்பவர்களைக் கண்டித்து சுகுமாரன் கட்டுரை எழுதுகிறார்.
அந்தக் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டியிருக்கும் டி .எம். கிருஷ்ணாவின் எம்.எஸ். குறித்த நூலுக்கான முன்னுரையில், “ஒருவரது வாழ்வில் நிகழும் மேலும் கீழுமான ஊசலாட்டத்தில் இருந்துதான் கலை பிறக்கிறது. அவரது வாழ்வின் துயரங்களை மூடி மறைக்க விரும்புகிறோம். ஆனால் அந்த அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட இசையை ஆராதிக்கிறோம், இது கொடூரமானதாகத் தோன்றுகிறது,” என்று எழுதுகிறார்
ஒருவிதத்தில் விருது எதிர்ப்பாளர்களும் இதே வாதத்தைத்தானே முன்வைக்கிறார்கள், “கிருஷ்ணா வினுடைய சமூக நடவடிக்கைகளால் அவருடைய துறைசார் மேதைமை களங்கப்படுகிறது,” என்பதாக. நான் இதன் அறம் சார்ந்த கூறுகளைப் பற்றிப் பேசவில்லை. தர்க்கப்படி இதுவும் கிருஷ்ணாவின் பார்வையைத்தானே எதிர்முனையிலிருந்து பிரதிபலிக்கிறது?
எனில் கிருஷ்ணாவின் இசை மேதைமையை மட்டும் கருத்தில் கொண்டுதான் அவருக்கு விருது அளிக்கப்படுவதாக அகாதமி வாதிட்டால், எம்.எஸ்.எஸ். மீதான தன்னுடைய பார்வையை முன்வைத்துத் தன் கலை தன் சமூக நடவடிக்கைகளில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது என்று கூறி அதை கிருஷ்ணாவே முன்வந்து மறுக்க வேண்டுமோ? சுகுமாரன் கட்டுரையைப் படித்தபின் கிருஷ்ணாவைப் படித்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பா. வெங்கடேசன்,
மின்னஞ்சல்.