சங்கு
என் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. அதன் சத்தம் மூடிய கதவுகளைத் தாண்டி வெளியில் கேட்டுவிடுமோ என்று அஞ்சும்படியான பேரோசை . என் வாழ்வின் மிக மோசமான ஐந்து நிமிடங்கள் அவை.
யாரோ கதவைத் தட்டும் ஓசை. நானும் சந்ருவும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் உடைகளைச் சரிசெய்து கொண்டு எழுந்து நிற்கிறோம். வெளியில் அம்மாவின் குரல். அம்மாவா, அவள் எப்படி இந்த நேரத்தில்? சோற்றுக் கூடையை எடுத்துக்கொண்டு காலையில் தோட்டத்திற்குப் போனாள் என்றால் மாலையில்தான் வீடு திரும்புவாள். இன்று இந்த உச்சி வெயில் பொழுதில் வீடு வந்திருக்கிறாள். சந்ரு பின்வாசல் வழி ஏதும் உண்டாவெனப் பதறித் தேடினான். வேறு வழி இல்லை. கதவைத் திறந்தேன். ‘என்ன தூங்கிட்டியா?’ என்றபடி வாசலில் ஒரு அடி எடுத்து வைத்தவள் உள்ளே சந்ரு நிற்பதைப் பார்த்துத் தடுமாறி நின்றுவிட்டாள். ஒரே நிமிடம்தான். கூடையைக் கீழே போட்டுவிட்டு எதுவும் பேசாமல் திரும்பிப் போய்விட்டாள். சந்ருவும் அவசரமாக நழுவி வெளியேறி விட்டா