ஆளுமைகளை ஆவணப்படுத்துதல்
நிச்சலனத்தின் நிகழ்வெளி
(கட்டுரைகள்)
புதுவை இளவேனில்
வெளியீடு:
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 2024
9, பிளாட் 1080 A,
ரோஹினி பிளாட்ஸ்
முனுசாமி சாலை
கே,கே, நகர் மேற்கு
சென்னை-78
பக். 232
ரூ. 600
1839இல் லூயி தாகர் என்ற பிரெஞ்சு நாட்டவர், முதல் ஒளிப்படத்தை உருவாக்கி, ஒரு புதிய கலாச்சார உபகரணத்தினை நமக்களித்தார். பல பிரதிகளை எளிதாக உருவாக்கக் கூடிய ஒரு கட்புல ஊடகமான ஒளிப்படம் தோன்றிச் சில ஆண்டுகளிலேயே நம் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட து. சென்னையில் கவின்கலைப் பள்ளியில் (இன்றைய கல்லூரி) ஒரு பாடமாக ஒளிப்படம் இடம் பெற்றது. 1856இலேயே தி ஃபோட்டோகிரபிக் சொசைட்டி ஆஃப் இண்டியா ( The Photographic Society of India ) தோன்றியது மட்டுமல்லாமல் புகைப்படக் காட்சிகளும் நடத்தப்பட்டன. ஆனால் இந்தக் கலைக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
ஒரு தொன்மையான சமூகத்தில், புதிய கலைவடிவங்கள் தோன்றினால் அவை உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; தொடக்கம் என்னவென்று தெரியாத பாரம்பரிய இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகள் போற்றப்பட்ட சமூகத்தில், நம் கண்முன் தோன்றிய இந்தப் புகைப்படக் கலை கவனிக்கப்படவில்லை. சினிமாவிற்கும் இதே கதிதான் ஏற்பட்டது. ஆகவே கட்புலக் கலைகள் சார்ந்த ரசனை மக்களிடையே வளரவில்லை. குடும்பப் புகைப்படங்களை எடுத்து, ஆல்பத்தில் ஒட்டி வைப்பதுடன் நமது ஆர்வம் அடங்குகிறது. தமிழ்நாட்டில் பத்திரிகை உலகிலும், சமூக அளவில் குடும்ப நிகழ்வுகளிலும் புகைப்படக்கலை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது; என்றாலும் ஒரு கலை வெளிப்பாடாக அது இன்னமும் அறியப்படவில்லை.
இந்த நிலையிலும், புகைப்படம் சார்ந்த உபகரணங்கள் இங்கு கிடைக்காத நாட்களில் தமிழ்நாட்டில் சில புகைப்பட விற்பன்னர்கள் தோன்றியது வியப்பே. கருப்பு-வெள்ளைப் படங்களின் காலத்தில் அவர்கள் அதிசயிக்கத்தக்கப் படங்களை எடுத்தனர். தமிழ்நாட்டில் இயங்கிய எம்.கிருஷ்ணன், டி.என். ஏ. பெருமாள், டி.எஸ். சத்யன்> ஹேரி மில்லர், ராகவேந்திர ராவ் போன்றோர் நினைவிற்கு வருகிறார்கள். இன்று இளம் ஜெயசிங் நாகேஸ்வரன் பன்னாட்டளவில் புகழ்பெற்றுவருகிறார். இவர்களில் யாருமே முறையாகப் புகைப்படக் கலை கற்கவில்லை; தாங்களாகவே கற்றுக்கொண்டனர். அன்று காமிராக்களும் லென்சுகளும் இந்தியாவில் கிடைக்கவில்லை; என்றாலும், இங்கு படமெடுப்பதற்கு வேண்டிய பொருட்களும் காட்சிகளும் அபரிமிதமான சூரிய வெளிச்சமும் கிடைப்பது இந்த முன்னோடிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் வரலாறு சார்ந்த புகைப்படங்கள் நமக்கு வெகு அரிதாகவே கிடைக்கின்றன. காந்தி படங்கள், அதிலும் அவரது சபர்மதி காலப் படங்கள் வெகு அரிதாகவே கிடைக்கின்றன
இருபது ஆண்டுகளுக்கு முன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தமிழ் எழுத்தாளர்களின் புகைப்படங்களைத் தேடத் தொடங்கியது. மறைமலை அடிகள் நூலகத்தில் இருந்த ஒரு சேகரிப்பு எங்கள் கவனத்திற்கு வந்தது. ஆனால் அந்தப் படங்கள் கவனக்குறைவினால் மீட்க முடியாத அளவு சேதமடைந்திருந்தன. மாதவையா, புதுமைப்பித்தன் போன்றோரின் படங்கள் ஒன்று அல்லது இரண்டுதான் எஞ்சியிருக்கின்றன.
இந்தக் குறையைப் போக்குவதுபோல ஒளிப்படக்கலைஞர் புதுவை இளவேனில் தமிழக எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் எடுத்த ஒளிப்படங்களைத் தொகுத்து ‘நிச்சலனத்தின் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் அருமையாக உருவாக்கப்பட்ட நூலை வெளியிட்டிருக்கிறார். தனக்குப் பிடித்த இருபத்தொரு ஆளுமைகள் பற்றிய கட்டுரையுடன் அவர்களது 139 புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அருமையான ஆவணப்படுத்தல் பணி இது. அவர் சொல்கிறார். “ இதைச் செய்ய பலரும் முன் வர வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் ஊரிலிருக்கும் ஒரேயோர் எழுத்தாளரையாவது நீங்கள் பதிவு செய்யுங்கள். அதை உங்கள் கடமையாக உணருங்கள் என்று சக புகைப்பட கலைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் இதைச் செய்ய வேண்டும். நான் முதல் படிக்கட்டுக்கான கல்லைப் பதித்திருக்கின்றேன்.”
எழுத்தின் மேலும், ஓவியம் போன்ற கலைகள் மேலும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு இந்த நூலில் வெளிப்படுகிறது. ஒரு எழுத்தாளரைப் படித்த பிறகே அவரைப் படமெடுக்கத் துணிவேன் என்கிறார் இளவேனில். அவர் ஒரு நல்ல வாசகர் மட்டுமல்ல. இந்தக் கட்டுரைகள் மூலம் ஒரு நல்ல எழுத்தாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். நூலும் கெட்டி அட்டையுடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. படங்கள் தெளிவாக அச்சேற்றப்பட்டுள்ளன.
வண்ணப்படங்களுடன் பல கறுப்பு- வெள்ளைப் படங்களும் இடம் பெற்றுள்ளன. கறுப்பு-வெள்ளைப் படங்களின் அடிப்படையில்தான் ஒரு ஒளிப்படக் கலைஞரை எடை போட முடியும் என்று எண்ணுகின்ற விமர்சகர்கள் சிலர் இருக்கிறார்கள், கார்ட்டியர் பிரசான்போல. இந்த நூலில் எழுத்தாளர் பிரபஞ்சனின் ஐந்து படங்களும் கறுப்பு – வெள்ளைப் படங்கள்தான். அவை பிரபஞ்சனின் ஆளுமையை நன்றாகப் பிரதிபலிக்கின்றன. அதேபோல பெருமாள்முருகனின் வண்ணப் படங்கள் அவரது எளிமையையும் தோழமையையையும் நன்கு வெளிக்கொண்டு வருகின்றன. ஒரு கலைஞனின் பார்வை ஒரு புகைப்படத்தில் பதிவுசெய்யப்படும்போது ஒவ்வொன்றும் ஒரு கலைப்படைப்பாக அமைகின்றது. கவிதை, ஓவியம்போலவே புகைப்படமும் தனித்துவம் மிக்க வெளிப்பாடாகின்றது.
புகைப்படங்களில் உருவப்படங்கள் எடுப்பது ஒரு தனித்தளம். இதில் உடனடியாக மனத்திற்கு வருபவர் கனடாவில் ஓட்டாவா நகரில் இயங்கிப் புகழ் பெற்ற யூசுஃப் கார்ஷ்; கலைஞர்கள், உலகத் தலைவர்கள், நேரு, சர்ச்சில் உட்பட பலரைப் படமெடுத்தவர். கார்ஷ் படங்களைத் தனது ஸ்டுடியோவில் மட்டுமே எடுப்பார். ஆகவே ஒளிவீச்சிற்கு முக்கிய கவனம் அளிப்பார். இளவேனில் தனது படங்களை கிடைக்கும் ஒளியிலேயே (available light ) திறமையாக எடுத்துள்ளார்.
ஃபிலிமில் கிடைத்த படைப்புச் சுதந்திரம், டிஜிட்டல் காமிராவில் இல்லை என்பவர்களும் உண்டு. ஃபிலிமில் எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளைப் படங்களில் ஒப்பு வேறுபாடு (contrast ) நன்கு புலப்படும். டிஜிட்டலில் எடுக்கப்பட்ட கறுப்பு-வெள்ளைப் படங்கள் நீர்த்துப்போனவை போல காணப்படுகின்றன. இந்த நூலில் பட்டம்மாளின் படங்கள் அவ்வாறு இருக்கின்றன. ஆனால் டிஜிட்டல் காமிராவில் பல வசதிகள் உண்டு. ஃபிலிம் செலவு கிடையாது. குறைந்த ஒளியிலும் கவலையில்லாமல் படங்கள் எடுக்கலாம். கி.ரா.வைச் சந்திக்க வந்த ஜெயமோகனை வீட்டினுள் பேசிக்கொண்டிருக்கும்போது இளவேனில் எடுத்த படங்களைப் பாருங்கள். நூலில் பல படங்கள் இயல்பாக உள்ளன (candid shots). இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 73ஆம் பக்கத்தில் உள்ள கவிஞர் விக்ரமாதித்யனும் அவரது துணைவியாரும் உள்ள படம். கார்ட்டியர் பிரசான் சொன்ன “சரியான தருணம்” (Decisive moment) என்ற ஒளிப்படக் கொள்கையை அது நினைவூட்டுகின்றது. அதேசமயம் எஸ். ராமகிருஷ்ணனின் படங்கள் நடிக்கவைத்து எடுத்தவை போல் தோன்றுகின்றன.
பாவண்ணன் ஒரு காஃபி டே உணவகத்தில் காப்பி ஊற்றிக் கொண்டிருப்பது போன்ற கறுப்பு வெள்ளைப் படம் அருமையான ஆழம் கொண்டது. அவரது சாந்த சுபாவம் இதில் வெளிப்படுகிறது. முழுமையான கறுப்பும் முழுமையான வெண்மையும் இந்தப்படத்தில் தெரிகின்றன. இதுதான் இந்தப் புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த படம். பாவண்ணனையும் அவரது எழுத்தையும் எனக்குப் பிடிக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல அன்புமதி எடுத்திருக்கும் இளவேனிலின் உருவப்படமும் அருமையான படைப்பு. ஆனால் சில படங்கள் பாதி இடது பக்கத்திலும் மறுபாதி வலது பக்கத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. இது படத்தின் அழகைக் குலைக்கின்றது. சுந்தர ராமசாமியின் டைடானிக் போஸ் படம் ஒரு எடுத்துக்காட்டு. இது சிறிய அளவிலான படம்தான். ஒரு பக்கத்தில் இடமளித்திருக்கலாம். படங்களை lay-out செய்தவர் கவனித்திருக்க வேண்டிய வேலை இது. படங்களடங்கிய புத்தகத்தில் இந்தப்பணி மிகவும் முக்கியமானது.
இங்கு நாம் மனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழில் புகைப்படக் கலை பற்றிய விமர்சனங்கள் எழுதப்படுவதில்லை. இக்கலையைப் பற்றிய கட்டுரைகளை அரிதாகவே காண்கின்றோம். கலைச்சொற்கள் புழக்கத்தில் வரவில்லை. Depth, contrast, composition போன்ற புகைப்படக் கலைசார்ந்த சொற்களுக்கு என்ன தமிழ்ப்பதங்களைப் பயன்படுத்தலாம்? கலைச் சொற்கள் இல்லாமல் விமர்சனம் இருக்க முடியாதே. புகைப்படங்களுக்கென அரங்குகள் அரிது. (பெங்களூரில் ஒன்று சிறந்த முறையில் இயங்கிவருகின்றது) புகைப்படக் கலையை ஊக்குவிக்க பல கல்லூரிகளில் முன்பு இயங்கிக் கொண்டிருந்த ஃபோட்டோகிரபிக் கிளப்புகள் இன்றில்லை. ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இக்கலை ஒரு பாடமாக இருக்கின்றது என்றறிகிறேன்.
இளவேனிலின் தனித்துவமிக்க இந்த நூல் புகைப்படக் கலைக்கு ஊக்கமளிக்கும். எழுத்தாளர்களைப்பற்றிய அவரது கட்டுரைகள் இலக்கிய ஆவணங்களாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நூலுக்கு நிச்சயம் ஒரு இடமிருக்கின்றது.
மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com