மன்னிப்பதன் வெற்றி
சென்னை புத்தகக் காட்சி 2025ஐ முன்னிட்டு வெளியாகவிருக்கும் புதிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இவை.
நபிகள் நாயகம்
சில முக்கியக் குறிப்புகள்
(கட்டுரைகள்)
ஜியாவுதீன் ஸர்தார்
தமிழில்: முடவன் குட்டி முகமது அலி
ரூ.200
ஹுதைபியா உடன்படிக்கையிலிருந்து ஏறத்தாழ விலகிய நிலையில், விலகியது சரியா எனும் சந்தேகம் குறைஷியர்களுக்கு வரவே சமாதான ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மக்காவின் மிக முக்கியத் தலைவரான அபூ சுஃப்யானை நபிகள் நாயகத்திடம் குறைஷியர் அனுப்பினர். ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அபூ சுஃப்யானுக்கு மறுக்கப்பட்டது. தனக்காக இதில் தலையிட்டு முகம்மதுவைச் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி நபிகளாரின் மிக நெருங்கிய தோழரான அபூபக்கரை அபூ சுஃப்யான் கேட்டார். அபூபக்கர் மறுத்துவிட்டார். இறைத்தூதரின் மருமகன் அலீயிடமும், மகள் பாத்திமாவிடமும் அபூ சுஃப்யான் சென்றார். அவர்களும் அவரின் வேண்டுகோளை நிராகரித்தனர். மக்காவாசிகள் சமாதானத்தை விரும்புவதாக மதீனா பள்ளிவாசலில் அபூ சுஃப்யான் பொது அறிவிப்பைச் செய்தார். அதன் பின் மக்காவிற்கே திருப்பிச் சென்றார்.
போருக்கு அணிதிரள முஸ்லிம்கள் தயார் நிலையில் இருக்கையில் முத்தா யுத்தத்தில் முடிக்கப்படாமல் இன்னுமிருந்த வேலையைச் செய்துமுடிக்க முஸ்லிம்கள் சிரியா செல்லத் தயாராக இருப்பதாக மக்காவாசிகள் நினைத்தனர். எனினும் உண்மையில் நடக்கவிருப்பதைச் சிலரால் யூகிக்க முடிந்தது. பத்ரு யுத்தத்தில் சண்டையிட்ட முக்கியமான முஸ்லிமான ஹாதிப் இப்னு அபூ பல்தஆ முஸ்லிம்கள் படையெடுக்கவிருப்பதை எச்சரித்து குறைஷியருக்கு ஒரு ரகசியச் செய்தி அனுப்பினார். மக்காவில் இருக்கும் தனது குடும்பம், குழந்தைகளின் கதி பற்றியும், குறைஷியருடன் நேசமாக இருக்கும் மக்காவிலுள்ள தனது இனக்குழு பற்றியும் ஹாதிப் கவலைகொண்டிருந்தார். அவர் எழுதிய அந்த ரகசியக் கடிதம் முஸ்லிம்களால் இடைமறிக்கப்பட்டது. ஆனால் ஹாதிப்பின் துரோகம் மன்னிக்கப்பட்டது.
முகம்மதுவின் முன்னேற்பாடுகள் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அவரின் படைகள் மக்காவை நோக்கி மிக வேகமாக முன்னேறிச் சென்றன . . . இதனைக் குறைஷியர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மக்காவிலிருந்து அரை நாளுக்கும் குறைவான பயணத் தூரத்தில் இருந்தபோதுதான், தங்களைத் தாக்குவதற்கு முஸ்லிம் ராணுவம் முன்னேறி வருவதை குறைஷியர் அறிந்தனர். தேவையான அனைத்து உபகரணங்களுடன் பத்தாயிரம்பேர் கொண்ட வலிமையான முஸ்லிம் ராணுவம் கி. பி. 630 ஜனவரியில் மக்காவுக்கு வந்தது. அந்த ராணுவத்தில் பல இனக் குழுவினர் இருந்தனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் இருந்தார். அதற்கென ஒரு முகாமும் இருந்தது. வீரர்கள் அனைவரும் ஒரே இடத்தில் முகாமிட வேண்டாம் எனவும், பரவலாக இருக்கும்படி முகாம்களை அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் முகாம்களுக்கு முன்னால் தீ வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் படை வீரர்களை முகம்மது (ஸல்) கேட்டுக்கொண்டார். முஸ்லிம் ராணுவத்தின் வலிமையையும், அளவையும் கணிப்பதற்காக அபூ சுஃப்யான் உள்ளிட்ட மக்காவாசிகள் சிலர் திருட்டுத்தனமாக ராணுவத்தில் ஊடுருவினர். மிக விரிவாகப் பரவியிருந்த முஸ்லிம் படையைக் கண்டு வியப்படைந்தனர். ஆனால் ஊடுருவியிருந்த அவர்களை முஸ்லிம் படைகள் கண்டுபிடித்தன. இந்த முறை அபூ சுஃப்யான் நபிகளாரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
முஹாஜிர்களைச் சேர்ந்த சில பெரியவர்களும் அன்சாரிகளைச் சேர்ந்த சில பெரியவர்களும் அடங்கிய நீதிமன்றத்தின் முன் அபூ சுஃப்யான் நிறுத்தப்பட்டார். காரசாரமாக விவாதம் நடந்தது, அபூ சுஃப்யானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனப் பலர் விரும்பினர். எனினும் அபூ சுஃப்யானுடன் முகம்மது (ஸல்) உரையாடினார். அதன்பின் நீண்ட நாள் பரம எதிரியான அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். குறைஷியரின் தலைவராகவும் பெருமை மிக்கவராகவும் இருந்த அவர் சில சிறப்புச் சலுகைகளை எதிர்பார்த்தார் . அதன்படி சலுகைகள் வழங்கப்பட்ட பின் முகம்மது (ஸல்) இவ்விதம் அறிவித்தார். அபூ சுஃப்யான் வீட்டிற்குள் நுழைவோர் பாதுகாக்கப்படுவர். கதவைத் தாழிட்டு வீட்டிற்கு உள்ளே இருப்போர் பாதுகாப்பாக இருப்பர். கஅபாவைச் சுற்றிக் கூடுவோர் பாதுகாப்பாக இருப்பர்.
முகம்மதுவிடம் அபூ சுஃப்யான் தற்செயலாக வந்தாரா அல்லது அந்தச் சந்திப்பு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற விசயத்தில் கல்வியாளர்களிடையே கருத்து வேற்றுமை உள்ளது. அபூ சுஃப்யான் இஸ்லாத்திற்கு மாறி வந்ததில் சிறிதும் சந்தேகம் இல்லை. மறுநாள் காலை எந்த எதிர்ப்புமின்றி முஸ்லிம்களின் ராணுவம் மக்காவில் நுழைந்தது. சண்டையிடவோ ரத்தம் சிந்தவோ கூடாது என்ற கண்டிப்பான கட்டளையுடன் நான்கு பிரிவுகளாக ராணுவம் பிரிக்கப்பட்டது . முஸ்லிம்களை எதிர்க்க வேண்டாமென தனது இனக் குழுவைச் சார்ந்த மக்களைக் கூவி அழைத்தவாறு அபூ சுஃப்யான் தெருவில் ஓடினார். ஆனால் ஹுதைபியா உடன்படிக்கையை மீறிய பனூ பக்ர் குலக் குழுவைச் சார்ந்த மக்காவாசிகள் சிலர் அப்போதும் எதிர்த்தனர். இது தொடர்பாக காலித் பின் வலீத்தின் படைப் பிரிவுடன் கைகலப்பு ஏற்பட்டது. விரைவிலேயே அமைதி நிலை நாட்டப்பட்டது.
இப்போது முகம்மது (ஸல்) கஅபா சென்று தவாஃப் செய்தார். ஏழுமுறை கஅபாவை வலம் வந்தார். இந்தச் சடங்கு ஏக இறைவனை வணங்கும் நம்பிக்கையாளர் ஒற்றுமையின் அடையாளமாகும். தன்னைச் சுற்றிக் கூடியிருந்த மக்காவாசிகளிடம் அவர் உரை நிகழ்த்தினார். அது வருமாறு:
ஒரு கடவுளைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. ஏக இறைவனுக்கு இணை இல்லை. .இறைவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். தனது அடியானுக்கு உதவினான். (அகழிப் போரின்போது) குறைஷியரின் கூட்டணி ராணுவத்தை விரட்டியடித்தான். (பரம்பரை அதிகாரத்தால்) மரபுரிமையாகத் தனிச் சலுகை கோருவது (பழங்குடியினர் சண்டைகளின் விளைவாக) சொத்துக்களையும் இழப்பீட்டுத் தொகையையும் உரிமையாகக் கோருவது ஆகியவை என்னால் இப்போது ரத்துச் செய்யப்படுகின்றன. ஓ குறைஷியரே . . . பல தெய்வங்களை வழிபடும் பேகன் பழங்குடியினரின் அகந்தையிலிருந்தும் முன்னோர்களை வழிபடும் அவர்களின் வழக்கத்திலிருந்தும் இறைவன் உங்களை வெளிவரச் செய்தார். ஆதாமிலிருந்து மனிதன் உருவானான், ஆதாம் மண்ணிலிருந்து உருவானான்.32
பின்னர் நபிகளார் கீழ்க்காணும் குர்ஆன் வசனத்தை ஓதினார்.
‘மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங் களாகவும் அமைத்தோம். உண்மையில், அல்லாஹ் விடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 49:13
உரையை முடித்ததும் கூடியிருந்த குறைஷியரை முகம்மது (ஸல்) பார்த்தார். தன்னை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கியவர்கள், தன்னைப் பின்பற்றுவோரைச் சித்திரவதை செய்து கொன்றவர்கள், தன்னைக் கொலைசெய்ய சதி செய்தவர்கள், பிறந்த நகரிலிருந்து துரத்தியவர்கள், அரேபிய இனக் குழுக்களைத் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழத் தூண்டியவர்கள், தன்னையும் தனது மக்களையும் ஒழிப்பதற்காக இடைவிடாமல் போர் செய்தவர்கள் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்,
அவர்களிடம் முகம்மது (ஸல்) கூறியதாவது:
‘குறைஷி மக்களே, நான் யார்? உங்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ அதற்கு அவர்கள் ‘நல்லது. நீங்கள் உன்னதமான சகோதரர். உயர்ந்த பண்புடைய சகோதரரின் மகன்’ என்று ஒத்திசைவுடன் பதில் கூறினர். அதற்கு ‘இந்த நாளில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் வழியில் செல்ல உங்களுக்குச் சுதந்திரம் உண்டு’33 .
பின்னர் முகம்மது (ஸல்) கஅபாவுக்குள் நுழைந்தார் . . .
கஅபாவின் சுவர்களில் படங்கள் வரையப்பட்டிருந்தன. படங்களையும் உருவங்களையும் அகற்றுமாறு கேட்டுக் கொண்டார். அங்கே ஏராளமான கடவுள் சிலைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த கல்லில் வடிக்கப்பட்ட முதன்மைத் தெய்வமான ஹுபல் சிலை இருந்தது. இறைத்தூதர் தனது கையில் உள்ள குச்சியால் அனைத்துச் சிலைகளையும் ஓவ்வொன்றாகத் தொட்டுப் பின்வரும் குர் ஆன் வசனத்தை ஓதினார்.
‘சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது. உறுதியாக அசத்தியம் அழிந்தே தீரும்’ 17: 81.
பின்னர் படங்கள் கிழிக்கப்பட்டுச் சிலைகள் நொறுக்கப்பட்டன.
கஅபா என்னும் இறையில்லம் இருக்குமிடமும் மதித்துப் போற்றத்தக்க இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் பிறந்த நகருமான மக்கா புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. மக்காவில் ரத்தம் சிந்துவது தடுக்கப்பட்டது எனவும் மக்காவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மரங்களை அழிக்கக் கூடாதெனவும் நபிகள் நாயகம் கட்டளையிட்டார். கொலை கொடிய குற்றமாதலால் அனைத்துக் கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும் என அறிவித்தார். பொது மன்னிப்பு வழங்குவது மன்னிப்பதிலேயே மிகப் பெரியது. அது மக்காவாசிகள்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் வரிசையில் நின்றனர். முழு நகரமும் இஸ்லாத்தைத் தழுவியது.
ஹுனைன் போர் மக்கா வெற்றி அரேபியா பேகன் இனக் குழுவினருடனான விரோதத்தை முடிவுக்குக் கொண்டு வாவில்லை. குறிப்பாக குறைஷியரின் வலுவான ஆதரவாளர்களாக இருந்த ஹவாஸின் மற்றும் தகிஃப் இனக்குழுக்கள் முகம்மதுவைக் கடுமையாக எதிர்த்தனர். மக்காவுக்கும் தாயிஃபிற்கும் இடையே வாழ்ந்து வந்த ஹவாஸின் வன்செயலில் ஈடுபட்டுவரும் சக்திவாய்ந்த இனக் குழுவினராவர். அவர்களே தாயிஃப் நகரின் ஆதிக்க இனக் குழுவினர். முகம்மது (ஸல்) மக்காவில் இருந்தபோது மத போதனை செய்வதற்காக தாயிஃப் சென்றார். அப்போது கல்லால் அடிக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டார். பேகன் இனக் குழுவினரின் முதன்மைத் தெய்வங்களில் ஒன்றான அல்-லாத் வழிபாட்டுத் தலமும் தாயிஃப் நகரிலேயே உள்ளது. எதிர்பாராதவிதமாகப் போர் தொடுத்து மக்காவை முகம்மது (ஸல்) கைப்பற்றியிராவிட்டால் ஹவாஸின் இனக் குழுவும் தகிஃப் குழுவும் மக்காவைத் தாக்க குறைஷியருடன் சேர்ந்திருப்பர். மக்காவாசிகளை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச்செய்யும் பணியில் முகம்மது (ஸல்) ஈடுபட்டிருந்தபோது முகம்மதுவை எதிராகப் போர் தொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். மற்ற இனக் குழுக்களை ஒன்றிணைத்து முஸ்லிம்களை எதிர்க்க ஒரு கூட்டு முன்னணியை உருவாக்க முடிந்தது. பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட தங்கள் இனக்குழுவினர் அனைவரையும் உடைமைகளுடன் போர்க்களத்திற்கு அணிதிரளச் செய்தனர். மக்காவின் தென்கிழக்கிலுள்ள ஹுனைன் பள்ளத்தாக்கிற்குப் படை புறப்படும் முன்னர் போர்க்களத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள் குறித்துக் கவனமாகத் திட்டமிட்டனர். அந்தத் திட்டம் எளிமையானது. முஸ்லிம் படை பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறி வரும்போது இருட்டில் அவர்கள்மேல் அம்புகள்வீசித் தாக்குதல் நடத்தப்படும். குழப்பத்துடன் முஸ்லிம் படை பின்வாங்கினால் பேகன் இனக் குழுவினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவர்கள்மீது பாய்வர். அதனால் முஸ்லிம் துருப்புக்களிடையே வன்முறையும் கொந்தளிப்பும் ஏற்படும்.. அப்போது அவர்கள் நிச்சயமாகத் தோல்வியடைவர். இந்தத் தோல்வி முஸ்லிம்களின் மக்கா வெற்றியை முக்கியமற்றதாகச் செய்துவிடும். உஹத் போரில் முகம்மது (ஸல்) பின்பற்றிய அதே திட்டமே இது. இந்தத் திட்டத்தால் பலன் விளைந்தது.
அன்சாரிகள் கவலை அன்சாரிகள் முகம்மதுவின் நீண்ட கால ஆதரவாளர்கள். முகம்மதுவுடன் மதீனாவிலிருந்தே வந்தவர்கள். அவர் மக்காவிலேயே மீண்டும் குடியேறிவிடுவாரோ என்று அன்சாரிகள் அஞ்சினர். அவர்களின் அச்சத்தைக் கேள்வியுற்ற முகம்மது (ஸல்) என் வாழ்வும் சாவும் மதீனாவில்தான் என அவர்களுக்கு உறுதியளித்தார். மதீனாவுக்குத் திரும்பும் முன்னர் இரண்டு வாரங்கள் மட்டுமே முகம்மது மக்காவில் இருந்தார் .
மக்காவில் தங்கியிருந்த குறுகிய காலத்தில் ஹவாஸின் தகீஃப் இனக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுக்க ஏற்பாடுகள்செய்துவருவதை முகம்மது (ஸல்) கேள்வியுற்றார். அவர்களை எதிர்கொள்ள பன்னிரண்டாயிரம் படை வீரர்களுடன் அவர் புறப்பட்டார். இவர்களில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். அபூ சுஃப்யான் உள்ளிட்ட 2000 பேர் மக்காவில் இஸ்லாத்தைத் தழுவியவர்கள். ஹுனைன் பள்ளத்தாக்கை முஸ்லிம் ராணுவம் கடந்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது. திட்டமிட்டபடி எதிரிப் படை முஸ்லிம் ராணுவத்தின் மீது அம்பு மழை பொழிந்தது. இருளில் எதிரி தென்படாததால் முஸ்லிம் ராணுவம் பின் வாங்கியது. தாக்குதல் தொடர்ந்தது. ஹவாஸின், தகீஃப் இனக்குழுப் படைவீரர்கள் ஏராளமானோர் பள்ளத்தாக்கின் ஓரங்களிலிருந்து நீண்ட ஈட்டிகளுடன் வேகமாய் வந்திறங்கினர். பீதியடைந்த முஸ்லிம் வீரர்கள் பல்வேறு திசைகளிலும் சிதறி ஓடத் தொடங்கினர்
ஆனால் முகம்மது (ஸல்) தனது நிலையில் உறுதியாக இருந்தார். அவரின் மிக நெருங்கிய தோழர்கள் அவரைச் சுற்றிலுமிருந்தனர். மீண்டும் ஒன்றிணையுமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்குள் பேகன் படைவீரர்கள் அனைவரும் மலைகளிலிருந்த தங்கள் முகாம்களிலிருந்து இறங்கி முஸ்லிம் படையை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். அடிவானத்தில் சூரியன் தோன்றினான். தங்கள் படை வீரர் அணிகளை விரைவாகவே மறுசீரமைத்துக் கொண்ட முஸ்லிம்கள் ‘போருக்கு அணி திரளுங்கள்’ என ஒருசேரப் பாடியவாறு புறப்பட்டனர். போர் தொடங்கிற்று. போரில் இரு தரப்பிலிருந்தும் படைவீரர்கள் விழத் தொடங்கியதை முகம்மது (ஸல்) கவனித்தவாறு இருந்தார். வெற்றி பெற முடியாது என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்ட ஹவாஸின் தாகீஃப் இனக் குழுக்களும் அவர்களின் கூட்டணிக் குழுக்களும் தங்களின் பெண்கள், பிள்ளைகள், ஒட்டகங்கள், ஆடுகள் ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டுப் போரிலிருந்து விலகி ஓடத் தொடங்கினர். எதிரித் தரப்பிலிருந்து சுமார் 6000 பேர் பிடிபட்டனர். ஆனால் முகம்மது (ஸல்) தனது எதிரியைப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஓய்ந்திருக்க விடவில்லை. தாயிஃபிற்குச் சென்று அந்த நகரை முற்றுகை யிட்டார். அதில் வெற்றிபெற முடியவில்லை; மதீனாவிற்கே திரும்பினார்.
இப்போது 60 வயதான முகம்மது (ஸல்) மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுதாயத்தின் சக்திவாய்ந்த தலைவராக இருந்தார். அரேபியாவில் வலிமையும் செல்வாக்கும் மிக்க சக்தியாக இஸ்லாம் உருவானது. சமாதானத்தை முன் மொழிந்தவாறும் சில சமயங்களில் இஸ்லாத்தில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்தவாறும் அரேபியா முழுவதிலிருந்தும் சிறப்புத் தூதுவர்கள் வரத் தொடங்கினர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது - இறைவன் ஒருவனே, முகம்மது (ஸல்) அவன் தூதர் என வெறுமனே ஒத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல. ஏழைகளின் உரிமையைப் பேணி, அவர்களுக்குச் சேரவேண்டிய ஸகாத் என்னும் மத வரியைக் கொடுப்பதும் கட்டாயம் ஆகும். அது மட்டுமல்லாது தானாக முன் வந்து தர்மம் செய்வதும் அவசியமாகும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் முஸ்லிம் அரசைச் சார்ந்து வாழும் பயனர் ஆவர். (முஸ்லிம் அரசு- சில முஸ்லிம் அரசுகள் தமது அரசியல் அமைப்பில் இஸ்லாத்தை அரசு மதமாக அறிவித்துள்ளன. ஆனால் தமது நீதிமன்றங்களில் இஸ்லாமியச் சட்டங்களை அமல்படுத்துவதில்லை.) முதன் முதலாய்ச் சிறப்புத் தூதுவர்களை அனுப்பி மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தாயிஃப் நகரைச் சார்ந்த மக்களே. கிழக்கு அரேபியாவின் பனூ தமீம் இனக்குழுவைச் சார்ந்த சிலர் மதீனாவிற்கு வந்து கவிதைப் போட்டிக்குத் தயாராவென முகம்மதுவிற்கு அறைகூவல் விடுத்தனர், அந்தக் குழுவிலுள்ள கவிஞர்கள் தங்களின் உன்னத குணத்தையும் உயர்வான அந்தஸ்தையும் பற்றியுமே பேசினர். அதற்கு முகம்மதுவின் தோழர்கள் இருவர் பதில் கூறினர். ‘இறைவனின் திருத் தூதரைத் தங்கள் இதயத்தில் வைத்திருக்கும் மக்களின் உயர் பண்புகள்’ பற்றியதாக அவர்களின் பதில் இருந்தது . . . போட்டியின் முடிவில் இஸ்லாத்தின் மீதான தமது நம்பிக்கையை பனூ தமீம் இனக் குழுவினர் அறிவித்தனர். மக்காவுக்கும் ஏமனுக்கும் இடையே உள்ள நஜ்ரான் என்ற கிறிஸ்துவ நகரிலிருந்து வந்த குழுவில் பெரும்பாலான பிரதிநிதிகள் பாதிரியார்கள் ஆவர். இறைத்தூதரின் பள்ளி வாசலிலேயே அவர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏசுவைப் பற்றி முகம்மதுவிடம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டனர். முகம்மதுவின் பதில் அவர்களுக்குத் திருப்தி தரவில்லை. பின்னர் குர்ஆனிலுள்ள கீழ்க்காணும் வசனத்தை முகம்மது (ஸல்) ஓதினார்.
“(நபியே!) இது குறித்துத் தெளிவான அறிவு உம்மிடம் வந்தபின்னரும் யாரேனும் உம்மிடம் தர்க்கம் செய்தால் அவர்களிடம் கூறிவிடும்: “வாருங்கள், எங்கள் மக்களையும் உங்கள் மக்களையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் அழைத்து இன்னும் எங்களையும் உங்களையும் சேர்த்து ‘பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நாம் ஒன்று சேர்ந்து இறைஞ்சி வேண்டுவோம்” (3: 61). இதனைச் சுட்டிக்காட்டித் தன்னுடன் தொழுகையில் கலந்துகொள்ளுமாறு அவர்களைக் கேட்க அவர்கள் மறுத்து விட்டனர். பின்னர் குர்ஆனின் கீழ்க்காணும் வசனத்தை ஓதி ஏகத்துவத் தோழமையில் தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு அவர்களை முகம்மது (ஸல்) கேட்டுக்கொண்டார். “நபியே! (மேலும்) நீர் கூறும்: வேதமுடையோரே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் நாம் வணங்கக் கூடாது. அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. நம்முள் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் இறைவனாகக் கொள்ளக் கூடாது என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கோட்பாட்டுக்கு வாருங்கள். அவர்கள் புறக்கணித்தால் “ நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று அவர்களிடம் கூறிவிடுங்கள் (3: 64).
முதலில் இதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் பின்னர் மனம் மாறி நஜ்ரான் திரும்பினர். ஒன்று மற்றொன்று எனத் தொடர்ந்து தூதுக் குழுக்கள் வந்த வண்ணமிருந்தன. கி. பி. 630 ஆம் ஆண்டு முழுவதும் தூதுவர்களை எதிர்கொள்வதிலேயே கழிந்தது. எனவே மதீனாவுக்குப் புலம் பெயர்ந்த பிறகான பத்தாம் ஆண்டினைத் ‘தூதுக்குழுக்களின் வருடம்’ என்றே முஸ்லிம் பாரம்பரியம் குறிப்பிடுகிறது.