சல்மா கவிதைகள்
வீடு
நீண்ட காலம்
வசிக்க நேர்ந்த
வீட்டிலிருந்து
வெளியேறத் தேவை
கதவில்லை
ஒரு உடையாத இதயம்
ஷெல்பிலிருந்து
கீழிறங்கிய புத்தகங்கள்
கழற்றப்பட்ட மின்விசிறிகள்
அமர்த்திவைக்கப்பட்ட
குளிர்சாதனப் பெட்டி
இவற்றிற்கு மத்தியில்
உறக்கம் நழுவிய
ஓர் இரவு
புத்தகங்கள்
என்னை உற்று நோக்கியபடி
அமர்ந்திருக்கின்றன
அடுத்து எனும் கேள்வியோடு
எங்களது பரஸ்பரப் பார்வைக்கும்
உற்று நோக்கலுக்கும் இடையில்
ஓடித் திரிகின்றன சிலந்திகள்
திரைச்சீலையற்ற
சன்னலுக்கு வெளியே
நகர்ந்துகொண்டேயிருக்கிறது
நகரம்
வந்த இடத்திற்கே திரும்ப
வாகனத்தில் ஏறக் காத்திருக்கின்றன
பொருட்கள்
அரவங்கள் வந்தடையாத
மாலை மடங்கி
இருள் விரியும்போது
தனது சிறகுகளை இறுக்கிக்
கூடடைகிற
கிராமத்தை நோக்கிப்
பயணிக்க
என் பரந்த எல்லைகளை
வரைந்ததும்
தொலைதூரத்தில் வசிக்கும்
பிள்ளைகளின் வாசனை
கவிந்திருப்பதும்
இந்த வீட்டின் சுவர்களில்தான்
இரவெங்கும்
வீட்டின் வெறுமைக்குள்
நடமாடித் திரிகிறேன்
விட்டுச் செல்லவும்
எடுத்துச் செல்லவும் இயலாத
அந்நினைவுகளோடு
உணர்வுகளால்
நெய்யப்பட்டதோர்
கூடு
சிறு சருகின்
அசைவில்
கலைந்துவிடுகிறது
“என் வீடெனும்”
கூரையின் கீழிருந்து
விலகிச் செல்வது
என்னிலிருந்து நானே
விலகிச் செல்வதுபோல
திகிலூட்டுகிறது.
-----------------
1.
அதிகாலைக் குளிர் காற்று
இணைந்து வர
இருள் சரிந்திருந்த மண்ணின்
வயது முதிர்ந்த வானத்தின் கீழாக
முதிராத இளம் பருவத்து முலையென
நிமிர்ந்து நிற்கிறது மலை
வானத்தின் மேலாகப் பறந்துகொண்டிருந்தபோது
நதி ஒன்று கடலிடம்
தலை சாய்த்துக்கொண்டிருந்ததைப்
பார்த்தேன் ஒருமுறை
ஊரின் கடைசி வீட்டின் அதிகாலையை
பிடிஎஸ் ஆல்பம் தன் கூக்குரலில்
சுமந்து கொண்டு நிற்கிறது
தொடரும் அடர் மரங்கள்
முணுமுணுக்க
ஓசைகளுக்குள் புதைந்தபடி
நீள நடக்கச் சிரமம் ஏதுமில்லை
இரவினில் மரங்கள் சூடியிருந்த
பறவைகளின் குரலோசைகள்
காற்று நெட்டிமுறிக்க
மரங்களிலிருந்து
உதிர்ந்து சிதற
என் தனிமையின் அரவம் கேட்டு
நீண்ட வாலைத்
தன் கூட்டுக்குள் தூக்கிச் செல்கிறது குருவி
இன்று காட்டு மல்லிகையும் சங்குப் பூக்களும்
மலரவில்லை
வேறெங்கோ
நதியின் மீது கோடை வலுவாக இறங்கிக்கொண்டிருந்ததை
நினைவூட்டியபடி
தனித்து
நடந்துகொண்டிருக்கிறேன்.
--------------------
2.
நமது விலகலுக்குச்
சற்றுப் பிந்திய தருணம்
இரக்கமற்றது
அசமந்தமான உலர்ந்த தெருக்களில்
சோம்பல் முறிக்கும் நாய்கள்
அதிகாலைச் சாலையில் சட்டெனத் தென்படுகின்றன
நேற்று பார்த்த
சாம்பல் நிறப் பூனையின்
உயிரற்ற உடலும்
சாலையை நனைத்திருக்கும் குருதியும்
----------------------
3.
ஒரு முழு நாளையும்
பூனையோடு கழிக்க நேர்ந்த பிறகு
இந்த உலகில் சலித்துக்கொள்ள
ஏதும் இல்லை
தனது கழுத்தின் நெகிழ் தசைக்குள்
எனது விரல்களைத்
தக்கவைத்துக்கொள்கிற
தந்திரம் தெரியும் அதற்கு
என்னோடு தன் விளையாட்டைத் தொடர்ந்தபடி
காயமுற்ற எனது ஆன்மாவை
நாவினால் நீவி
தனிமையைத்
துடைத்தெறியும்
பூனையிடம்
மனதை
காலத்தை
இழந்துவிடுபவருக்கு
வாழ்க்கை மீதான குற்றச்சாட்டுகள்
ஏதும் இருப்பதில்லை.