சுகுமாரன் கவிதைகள்
அத்துவானச் சிறு செடி
அத்துவானச் சிறு செடி
கதிர்த் தகிப்பில் துவண்டும்
பனிக்காற்றில் உறைந்தும்
மழைச் சீற்றத்தில் நடுங்கியும்
பெரும்புயலில் தத்தளித்தும்
மண்ணைத் துறக்காமல்
வீறாப்புடன் நின்றது.
இன்று பார்க்கிறேன்
சின்னஞ்சிறு மஞ்சள் பூவுடன்
கொஞ்சலாக அசைகிறது
இத்தனை இடர் தாண்டி
எப்படித்தான் பிழைக்கிறாய் என்றவனிடம்
சொல்ல மாட்டேன் ரகசியம் என்று
குலுங்கிச் சிரிக்கிறது
நாற்றிசைகளும்
மூவுலகமும்
இரு பொழுதும்
அப்போது குதூகலமாகத் தண்டனிட்டன.
------------------
இருப்பு விதி
கிளிகள்
மொழியறிஞர்கள்
புறாக்கள்
சமாதானத் தூதுவர்கள்
ஆனால் பாருங்கள்
கிளிகளுக்கும் புறாக்களுக்கும்
கூடுகள் இல்லை
கூண்டுகள் உண்டு.
-------------------
பதின்மூன்றாம் மணி
இந்தப் பொழுதுகளில் காத்திருப்பது
நான் இல்லாமற் போகும்
அந்தப் பொழுதுக்காகத்தான்
நானில்லா அந்தப் பொழுது
கைகூடுவது எந்தப் பொழுதில்?
பொழுதில்லா நான்
கைவசமாவது எந்த நேரத்தில்?
பொழுதில்லாப் பொழுதும்
நானில்லா நானும் சாத்தியமாவது
எந்த நிமிடத்தில்?
பதின் மூன்றாம் மணி காட்டும் கடிகாரம்
உண்டா உலகில் சொல்லுங்கள் ப்ளீஸ்.
---------------------
தன் வரலாறு
நடக்கும் இந்தப் பாதை என்னுடையதல்ல
எனினும்
பயணம் செய்துகொண்டிருக்கிறேன்
வந்தடைந்த இந்த இடம் எனக்கானதல்ல
எனினும்
வந்து சேர்ந்திருக்கிறேன்
குலாவும் இந்தச் சொந்தங்கள் என்னுடையவையல்ல
எனினும்
உறவாடிக்கொண்டிருக்கிறேன்
வாழும் இந்த வாழ்க்கை எனக்கானதல்ல
எனினும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
எனக்கான மரணம் என்னுடையதல்லவென்று
பராக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
-------------------
எதிர்பார்ப்பு
எதிர்பார்க்காதே
ஏமாந்து போவாய்
எதிர்பார்ப்பதே
புலி தன் வாலைத் தானே
குருதி கசியக் கடிப்பதுபோல
ஏமாந்து போகும் சுகத்துக்குத்தானே?
--------------------
எப்போதும் கடைசியில்...
வெளிச்சம்
பளீரிட்டுப் பளீரிட்டு
எப்போது இருளாகிறது?
வெண்மை
ஒளிர்ந்து ஒளிர்ந்து
எப்போது கருமையாகிறது?
இனிப்பு
தித்தித்துத் தித்தித்து
எப்போது கசப்பாகிறது?
அன்பு
முற்றி முற்றி
எப்போது வன்மமாகிறது?
சொல்லிச் சொல்லி
வார்த்தை எப்போது
வற்றிப் போகிறதோ
அப்போது.