‘கேளுங்கள்’
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கல்விக்கு அடிப்படைப் பங்கு உண்டு. அதுவே, மனிதர்க்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது; வாழ்வுக்கு வளம் சேர்க்கிறது. ஆனால் அறிவை வளர்ப்பதும் மனத்தை விரிவாக்குவதுமே கல்வியின் அடிப்படை நோக்கம். இப்படிச் சொல்லலாம், வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவது கல்வியன்று, வாழ்க்கையே கல்வி. அப்படியெனில், அது நிலையானதாக இருக்க முடியாது. அதில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருக்க வேண்டும். ஆனால் மாறாத கூறுகள் சில உண்டு; அவை வினவுதல், கேள்விகள் கேட்டு முன்னகர்தல். கற்றல் முறைகளில் பாடம் சொல்லுதல் என்றொரு வழக்கமுண்டு. ஆசிரியர் பாடம் சொல்லச் சொல்ல அதை மாணவர் கேட்டு அறிவர். கற்றலின் கேட்டல் நன்று. கேட்டலில் கேள்வி கேட்பதும் அடங்கும். ஆசிரியர் – மாணவர் கலந்துரையாடுவதும் கேள்வி பதில் எனும் முறையில் கற்றலுமே சிறந்ததெனக் கருதப்படுகிறது. நூல் பயிலும் முறை பற்றிப் பேசும் நன்னூல் சூத்திரம் ஒன்றுண்டு. அதில