இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
1.
கரப்பான் பூச்சிகள் கழிவறையில் மலம் கழித்துக்கொண்டிருந்தன
கறைபடிந்த என் கழிவறையை நெடுநாட்களுக்குப் பிறகு சுத்தம் செய்திருந்தேன்.
குமட்டலை உண்டுபண்ணியது கரப்பான் பூச்சிகளின் மலம்.
அதன் பிறகு ஒரு முறிந்துவிழும் மரக்கூட்டில்
எனது இருப்பிடத்தைச் சருகுக் குச்சிகளைக் கொண்டு கட்டத் தொடங்கினேன்
ஒரு நல்ல ஆரோக்கியமான கழிவறையை.
2.
கத்திரிக்காய் அரிகையில் தலைநீட்டி எட்டிப் பார்த்தது புழு
சொத்தை என்று வீசிய கத்திரி முளைத்தது
யார் விதைத்தது என்று நாங்கள் குழம்பிய பொழுதில்
பசி தீர்க்க முன்வினை தந்த வரமென பறித்துக் குழம்பில் போட்டோம்
ஒருநாள் அம்மாவின் வயிற்றில் புழு நெளிந்தபோது
நாங்கள் பிறந்தோம்
ஒவ்வொரு வருடமும் அம்மாவின் வயிற்றில் புழு உண்டாகிய காலத்தில்
அம்மா தன் சதைகளை இழந்துகொண்டிருந்தாள்.
3.
ஒரு பூனையைப் புலியென நினைத்துவிட்டோமென.
எனக்குள் இருக்கும் ஒரு பயந்தாங்கொள்ளியை
அப்போதுதான் நேருக்கு நேராகப் பார்க்க நேரிட்டது
ஒரு மனிதனுள் குடிகொண்டுள்ள பயந்தாங்கொள்ளிகளை
கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
ஒரு கணக்குக்காக, எத்தனை பயந்தாங்கொள்ளிகள் ஊர் முழுதும்
சுற்றுகின்றன என்பதற்காக.
4.
அவித்த நெல்லின் வாசனை வீதியெங்கும் பரவுகிறது
கூட்டிலிருந்து சென்ற பறவை கூடுதிரும்பும் காலம்
தலைச்சன் பிரசவத்தில் மனைவியை இழந்தவனின் மனநிலை
செத்தபாம்பைக் கொத்திக்கொண்டு இடுகாடுநோக்கிப் பறக்கும் கழுகு
யானையின் ஆசீர்வாதம் பெறும் குழந்தையின் குதூகலம்.
பச்சை இலை துளிர்க்கும் தருணம்
மற்றும் எந்தக் காரணமுமின்றி வரும் கனவை ஒருநோட்டுப் புத்தகத்தில்
ஓவியமாய்த் தீட்டுதல்
மின்னஞ்சல்: latchumanaprakasam@gmail.com