தற்கொலை மகாத்மியம்
என்னைப் போன்று எண்பது களின் வெகுஜனப் பத்திரிகை வாசகராய் நீங்கள் இருக்கும் பட்சத்தில், ‘தமிழ் மறவன்’ என்ற பெயர் உங்களுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கும். எந்த நடிகருக்கு யார் யாருடன் தொடர்பு, எந்த நடிகைக்குக் குடிப்பழக்கம் உண்டு என்கிற மாதிரியான முக்கியத் தகவல்களும் திரைத்துறைக்குப் புது வரவுகள், திரைப்பட விழாக்கள், திரைப் பிரமுகர்களின் அயல்நாட்டுப் பயணக் கட்டுரைகள் என்று பலப்பலவும் இந்தப் பெயரில்தான் வெளியாகும். சில சமயம் நேரில் சென்று சந்திக்காமலேகூட, நேர்காணல் எழுதிக் கொடுத்துவிடுவாராம் – அவரே சொன்னார்.
அப்புறம், திடீரென்று அந்தப் பெயர் காணாமல் போனது. தமிழ் மறவனே வேறு பெயரில் எழுதியிருந்தால்கூடக் கண்டு பிடிப்பதற்கில்லை. ஏனெனில், எல்லாப் பத்திரிகைகளிலும் சினிமாச் செய்திகளுக்கெனப் பக்கங்கள் இருக்கும் என்றாலும், அந்தந்தப் பத்திரிகைக்கென்று ஒரு மொழிநடை உண்டு அல்லவா. தமிழ் மறவன் என்ற அதே பெயரில் வந்த கட்டுரைகள்கூட வேறுவேறு நடைகளி