வடகிழக்கின் நேரம் முடிந்துவிட்டது
குற்றமும் அநீதியும்
(அனுபவம்)
வி. சுதர்ஷன்
தமிழில்: ஈசன்
ரூ. 290
ஒருநாள், ஐ.பி. இயக்குநரிடமிருந்து அனூப்பிற்கு ஒரு குறிப்பு வந்தது. லால் பஹதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக உயர் பயிற்சியகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், அனூப் பயங்கரவாதம், தீவிரவாதம், கிளர்ச்சி பற்றி உரை நிகழ்த்த வேண்டும் என்று. பார்வையாளர்கள், அடிப்படைப் பயிற்சிக்கு வந்திருக்கும் புதிய சிவில் சர்வீஸ் அதிகாரிகள், மூன்று மேசை அதிகாரிகள், கின்யாராம் பஞ்சாப் குறித்தும், அசோக் பட்நாயக் காஷ்மீர் குறித்தும், அனூப் மேற்சொன்ன தலைப்புக்கள் குறித்தும் உரையாற்ற வேண்டும். மற்ற இரு மேசை அலுவலர்களும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக அனூப்பைவிடப் பணியில் இளையோர் என்றாலும் அவர்கள் ஐ.பி.யில் அனூப்பைக் காட்டிலும் சில ஆண்டுகள் அதிக அனுபவம் பெற்றிருந்தார்கள்.
பஞ்சாப் பற்றியும், காஷ்மீர் குறித்தும் உரை நிகழ்த்த தனித் தனிக் குழுக்கள் இருந்தன. பஞ்சாப் குழுவில், டி.ஜி.பி. ஒ.பி. ஷர்மா இருந்தார். அவர் பின்னாளில் நாகாலாந்து கவர்னராக ஆனவர். இஸ்ஸார் ஆலம் என்னும் கண்டிப்பான போலீஸ் அதிகாரியும் இருந்தார். காஷ்மீர் குழுவில் பட்நாயக்குடன் காஷ்மீரிலிருந்து வந்த மூத்த அதிகாரி ஒருவர் இருந்தார். ஆனால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிப் பேச அனூப் தவிர வேறு யாரும் இல்லை. அங்கிருந்து வரவிருந்த ஒரு அதிகாரி, சூழ்நிலைகள் காரணமாக வர இயலவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் குழுவிற்காக ஏழு வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் அனூப் பேச வேண்டும் என்றாகியது. அனூப் அந்தப் பகுதிகளுக்குப் போனதில்லை. அவருக்குக் கள அனுபவம் இல்லை. எனவே இந்தப் பகுதிகள் பற்றித் தன்னம்பிக்கையோடும் திறம்படவும் பேச வேண்டும் என்பது பற்றி அனூப் பதற்றமாகவே இருந்தார்.
மறுநாள் அரங்கில் சுமார் 500 பார்வையாளர்கள் இருந்தனர். முதலில் ஒரு குழுவிற்கு ஒரு மணிநேரம் தரப்படும் என்றும் பின்னர் 15 நிமிடங்கள் விவாதம் என்றும் சொன்னார்கள். முதலில் பஞ்சாப், அடுத்தது அனூப், மூன்றாவதாகக் காஷ்மீர் என்று ஏற்பாடு. பிற்பகல் 01.30 மணிக்கு உணவு இடைவேளை. பஞ்சாப் அப்போது செய்திகளில் மிகவும் பேசப்பட்டது. அனுபவமிக்க அதிகாரிகள் அது பற்றிப் பேச நிறையச் செய்திகள் இருந்தன. பயிற்சியாளர்கள் அவற்றை விரும்பிக் கேட்டனர். பஞ்சாப் உரைக்கு இரண்டு மணிநேரம் பிடித்தது. 11.30க்குத் தேநீர் இடைவேளை. மற்ற இரு குழுக்களும் தங்கள் நேரத்தைக் குறைத்துக்கொண்டு 01.30 உணவு இடைவேளைக்கு முன் முடித்துக்கொள்ள வேண்டும். அனூப் என்னென்ன உரைக் கருவிகள் வைத்திருக்கிறார் என்று பட்நாயக் கேட்டார். அனூப்பிடம் எதுவும் இல்லை. பவர் பாயிண்ட் இல்லை, ஸ்லைடுகள் இல்லை, ஸ்டோரி போர்டு, எதுவும் இல்லை. வெறும் உரைதான். அப்படியானால் நிகழ்ச்சிகளை இடம் மாற்றிக்கொள்ளலாமா என்று பட்நாயக் கேட்டார். அவருடையது காஷ்மீர் குறித்த ஸ்டோரி போர்டு பிரசன்டேஷன். அதைக் கூட்டிக் குறைக்கவோ, இடை நிறுத்தவோ முடியாது. அனூப் ஒப்புக்கொண்டார். தமக்கு என்ன பேசுவது என்று யோசிக்க இன்னும் நேரம் கிடைக்கும் என்று நினைத்தார். அவர்கள் ‘தி மேன் கால்டு ஜியா’ என்று ஒரு திரைப்படம் கொண்டுவந்திருந்தார்கள். அதிலிருந்து காட்சிகளைக் காட்டினார்கள். அவர்களை அறியாமலேயே நேரம் கடந்து மணி பிற்பகல் 01.15 ஆகிவிட்டது. இயக்குநர், ஒரு தூண்டுச் சீட்டில் இன்னும் ஒரு விளக்க நிகழ்ச்சி இருக்கிறது என்று நினைவூட்ட வேண்டியிருந்தது. ஒரு வழியாக அவர்கள் முடித்தபோது, அனூப் தன் கைக்கடிக்காரத்தைப் பார்த்தார். மணி 01.30 ஆக ஏழு நிமிடங்களே இருந்தன. அது அவரது படபடப்பை அதிகமாக்கியது. இயக்குநர் வடகிழக்குப் பற்றிப் பேச நேரமில்லை என்று கருதினார். உணவு இடைவேளைக்குப் பிறகு அதை வைத்துக்கொள்ளலாமா என்று ஆலோசித்தார். பிற்பகலில் வேறு நிகழ்ச்சிகள் இருந்தன என்றார்கள். நாளைக்குத் தள்ளிவைக்கலாமா என்று கேட்டார். பயிற்சியாளர்களுக்குத் தொடர்ச்சியாக நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டிருந்தது. அதுவும் சாத்தியமில்லை என்றார்கள். பின் தொகுப்பாளர் அறிவித்தார்:
“உதவி இயக்குநர் அனூப் ஜெய்ஸ்வால் அவர்களை வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகள் பற்றி ஐந்து நிமிடங்களில் தொகுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம். உணவு இடைவேளைக்கு முன் நமக்கு அவ்வளவு நேரம் மட்டுமே இருக்கிறது.”
அனூப் தூக்கத்தில் நடப்பவரைப் போல மேடையை நோக்கி நடந்தார். எல்லோரும் தங்கள் கோப்புக்களைச் சேகரிக்கும் ஓசை, பெண்கள் தங்கள் மேலாடையைச் சரிசெய்துகொள்ளும் ஓசை, கழற்றி விட்ட காலணிகளை மாட்டிக்கொள்ளும் ஓசை ஆகியவை அவருக்குக் கேட்டன. ஐந்து நிமிடங்களில் அவர் என்ன சொல்லப்போகிறார்? பார்வையாளர்கள்மீது அவர் பார்வை பதிந்தது. அவர்கள் பலரும் தங்களுக்குள் தணிந்த குரலில் பேசத் தலைப்பட்டனர். எல்லோர் முகங்களிலும் களைப்பு, ஆர்வமின்மை. வடகிழக்கு பற்றி அவர் மனதில் சேகரித்ததெல்லாம் இப்போது தேவையற்றவையாகிவிட்டன.
“நானும் ஒரு பயிற்சியாளனாக இங்கே நின்ற நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். நீண்ட உரைகளை உட்கார்ந்து கேட்கும் துன்பம், அதை நானும் அனுபவித்திருக்கிறேன். நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகளை ஐந்து நிமிடங்களில் தொகுத்துரைக்குமாறு என்னைப் பணித்திருக்கிறார்கள். நான் உங்கள் துன்பத்தை இன்னமும் குறைக்கலாம் என்று கருதுகிறேன். நான் வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி என் உரையை முடித்துக்கொள்வேன்.”
அவர் இப்படிச் சொல்லி முடித்ததும் அரங்கில் முழு அமைதி நிலவியது. அந்த அமைதி இன்னும் ஆழமாகட்டும் என்று சிறிது நிறுத்தினார். பின்னர் மெதுவாக ஆனால் அழுத்தமாக அறிவித்தார்:
“வடகிழக்கு மக்களின் முக்கியப் பிரச்சினை. அவர்களுக்காகச் செலவிட நமக்கு நேரமில்லை என அவர்கள் நம்புகிறார்கள். இந்திய அரசாங்கம், தில்லியில் உள்ளவர்கள், மெயின் லேண்ட் என்று அழைக்கப்படும் பகுதிகள் யாருக்குமே வடகிழக்குப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை. பஞ்சாப் பற்றி நாம் இரண்டு மணிநேரம் மகிழ்ச்சியாகக் கேட்டோம். காஷ்மீர் என்று வந்தால் இன்னும் ஒரு ஒன்றரை மணிநேரம் நம்மை அறியாமலே கடந்துவிட்டது. வடகிழக்குப் பற்றி ஐந்து நிமிடங்களில் தொகுத்துரையுங்கள் என்று சொல்லும் துணிச்சல் நமக்கு இருக்கிறது என்றால், அதுவே நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்கிறது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? நாற்பது ஆண்டுகளாக அந்தப் பகுதி ஊடுருவல்களால் உருக்குலைந்திருக்கிறது. நாம் அதை ஐந்து நிமிடங்களில் முடித்துக்கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான பிரச்சினை. இதைக் காட்டிலும் கூடுதலுமில்லை குறைவுமில்லை. நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வடகிழக்கின் நேரம் முடிந்துவிட்டது என்று தோன்றுகிறது. நாம் அதைக்காட்டிலும் முக்கியமான நிகழ்ச்சிக்குச்செல்வோம். மதிய உணவு.”
இதைச் சொல்லி நிறுத்தியதும் கைதட்டல் அரங்கைப் பிளந்தது. எல்லோரும் தொடர்ந்து பேசுங்கள் என்றார்கள். அனூப் தொடர்ந்து பேசினார். அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் என்று தொடர்ந்து பேசினார். ஒவ்வொரு முறை அவர் நிறைவு செய்ய முயன்றபோதும், யாரேனும் ஒரு கேள்வியை எழுப்ப, அதற்குப் பதில் தந்து பேசினார். இறுதியாக அவர் நிறைவு செய்தபோது மணி 02.45. இயக்குநர் எழுந்து வந்து அனூப்பைக் கட்டித் தழுவி, தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த கரவோசைக் கிடையே, அவர் காதுகளில் உரக்கச் சொன்னார்: “பாராட்டுகள். நீங்கள் இந்தப் பசித்த கூட்டத்தையே கட்டிப்போட்டுவிட்டீர்கள்.”
அனூப் தனது அக்பர் ரோடு அலுவலகத்தை அடைந்தபோது, அவரது மேசையில், உறையிலிடப்பட்ட ஒரு தூண்டுச் சீட்டு தனக்காகக் காத்திருப்பதைப் பார்த்தார். அது இயக்குநர் எம். கே. நாராயணனிடமிருந்து வந்திருந்தது. கையால் எழுதப்பட்ட அந்தக் குறிப்பு படிக்கச் சிரமமாயிருந்தது.
“முசோரி அகாதமியின் இயக்குநர், என்னைத் தொலைபேசியில் அழைத்து, கருத்தரங்கில் உங்கள் அற்புத உரை பற்றிச் சொன்னார். ஐ.பி.யின் கொடியை உயரப் பறக்கவிட்டதற்காக நான் உங்களைக் குறித்துப் பெருமைப்படுகிறேன். என் சிறந்த வாழ்த்துகள் உங்களுடன்.”
இது அக்டோபர் மாதம். டிசம்பர் மத்தியில், இணை இயக்குநர் அழைத்து, அனூப் அஸ்ஸாமில் குவஹாத்தியில் பணியமர்த்தப்படக்கூடும் என்று தெரிவித்தார். குறுகிய கால அவகாசத்தில் அவர் புறப்பட்ட வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அனூப் தயாராகவே இருந்தார். ஆனால் அது கல்வியாண்டின் இடைப்பகுதி. மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துப் போக முடியாது. அவருக்குக் கிடைக்கும் சம்பளம், சலுகைகளுக்குள் இரண்டு இடங்களில் குடும்பம் இருப்பது சிரமமாக இருக்கும். அவர் கூடுதல் இயக்குநரைச் சந்தித்துவிட்டுப் பிறகு இயக்குநரையும் சந்தித்தார்.
அனூப், எம். கே. நாராயணனிடம் சொன்னார்: “நான் போகத் தயாராக இருக்கிறேன் சார். ஆனால் எனக்கு ஒரு சிரமம். மார்ச், ஏப்ரலில் போடுங்கள். பிரச்சினை இல்லை. இது பள்ளி ஆண்டு நடுப்பகுதி. அதுதான் சிரமம் சார்.”
“அது ஒன்றும் பிரச்சினை இல்லை அனூப். நீங்கள் இப்போது போங்கள். அது பயணமாகக் கருதப்படும். உங்களுக்குப் பயணப்படி, தினப்படி மற்றவை கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் பள்ளியாண்டு முடிந்ததும் சொல்லுங்கள், அப்போது மாற்றல் ஆணை தருகிறோம்.”
“அஸ்ஸாமில் இருக்கும் நிலைமையைக் கருதிப் பார்த்தால், குடும்பத்தை தில்லியில் விட்டுப்போவதே நல்லது” என்று அலுவலக நண்பர்கள் சொன்னார்கள். வடகிழக்கில் இருந்தாலும் தில்லியில் அரசுக் குடியிருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அரசு விதிகள் அனுமதிக்கின்றன.
அனூப் வீடு திரும்பியதும் நீலத்திடம் கேட்டார்: “நீ தில்லியில் இருக்க விரும்பறயா?”
“ஏன் கேட்கிறீர்கள்?”
“பாதுகாப்புக் காரணங்களுக்காக. உன்னயும், குழந்தைகளையும் ஏன் ஆபத்தில சிக்க வைக்கணும்?”
“அனூப். அந்த இடம் உங்களுக்கு ஆபத்தானதுன்னா. அதுக்காகவே குடும்பம் உங்களோட இருக்க வேண்டியது அவசியம். நாங்க உங்கள அப்படி விட்டுட முடியாது.”
“ஆனா பள்ளிக்கூடங்கள்? அங்க நல்ல பள்ளிக்கூடங்கள் இல்லன்னா? அங்கிருக்கும் பள்ளிக்கூடங்கள் கலவரங்களால பாதிக்கப்பட்டிருந்தால்?”
“நல்ல பள்ளிக்கூடங்க இல்லன்னா சாதாரண பள்ளிக்கூடங்கள்ல சேப்போம். அது ஒன்னும் பெரிசில்ல. பிள்ளைகளுக்கு நா சொல்லிக்கொடுக்கிறேன். அவங்க இதுவரை எத்தன பள்ளிக்கூடம் மாறியிருக்காங்க . மனு 7ஆம் வகுப்பு படிக்கிறான். இதுவரை 7 அல்லது 8 பள்ளிக்கூடங்க மாறிட்டான்.”
நீலம். அனூப்பைப் பேச விடவில்லை.
அவர்களது பியட் காரை கோரக்பூருக்கு அனுப்பிவைத்தார்கள். தில்லியில் அனூப்புக்கு டிரைவராக இருந்த கான்ஸ்டபிள் ரவி சீனிவாசன் அதை ஓட்டிச் சென்று அனூப்பின் தந்தையிடம் ஒப்படைக்க முன்வந்தார். அங்கு அனூப்பின் சகோதரர் அதை பயன்படுத்துவார். ஒருமுறை முஹரம் பண்டிகையின்போது, அனூப்பின் கார் நிறுத்தியிருந்த தெருவில் தாஸியா ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தில் யானையும் இருந்தது. பால்கனியிலிருந்து ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த யாரோ ஒருவர், தான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் துண்டை, நெருப்புடன் கீழே ஏறிய, அது ஆடிக்கொண்டிருந்த யானையின் காதில் போய் விழுந்தது. அதனால் கோபங்கொண்ட யானை இங்குமங்கும் ஓடி எல்லாவற்றையும் தாக்கியது. சாலையில் வரிசையாக இருந்த கடைகளைத் தாக்கியது. நிறுத்தியிருந்த கார்களைத் தும்பிக்கையால் தூக்கிக் கவிழ்த்தது. செய்தி பரவி, கடைக்காரர்கள் ஷட்டர்களை இழுத்து மூடினார்கள். ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்களை மிதித்து நொறுக்கியது. அனூப்பின் சாக்லேட் நிறப் பியட் முன் வந்து சற்றுத் தயங்கியது. அதை விட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த ட்ராக்டரைத் தூக்கிக் கவிழ்த்தது. அனூப்பின் சகோதரர், அனூப்பிற்கு போன் மூலம் அந்தச் செய்தியைச் சொன்னார். யானை ஏன் அவர்களது காரை விட்டுவிட்டது என்பதற்கு ஒரு காரணமும் சொன்னார். “அது ஒரு ஏழையின் கார் என்பது தெரிந்ததாலேயே யானை அதை விட்டுவிட்டது.”
அனூப், தின்சுகியா மெயில் மூலம் அஸ்ஸாம் சென்றார். கோக்ரஜார் ரயில் நிலையம் வந்தபோது, அங்கு தனக்கு என்ன காத்திருக்கிறதோ என்று நினைத்தபோது அச்சமாக இருந்தது. அவரைச் சுற்றிலும் எல்லாம் இயல்பாகவே இருப்பதுபோல் தோன்றியது. மக்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். ஊர்திகள் நகர்ந்துகொண்டிருந்தன. குவஹாத்தியில் சில போலீஸ் பூத்கள் இருந்தன. ஆனால் எங்கும் பதற்றம் இல்லை. ஓராண்டு அவர் சேகரித்த அறிக்கைகளில் இருந்ததுபோல இல்லை. ஒரு சாதாரண போலீஸ் கார் வந்து அவரை அழைத்துச் சென்றது. அலுவலகத்தில், எல்லாக் காவல்துறை அலுவலகங்களையும் போல ஒரே ஒரு போலீஸ் கார்டு இருந்தது. எல்லாமே இயல்பாக இருந்தன. ஆனால் அதனாலேயே அது உண்மையல்ல என்றும் தோன்றியது.