பெங்களூர் கவிதைத் திருவிழா
பெங்களூரைச் சேர்ந்த மம்தா சாகர் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர், கல்வியாளர் எனப் பன்முகச் செயல்பாடு களைக் கொண்டிருப்பவர். தன்னுடைய எழுத்துகளுக் காகச் சர்வதேச அளவிலான அங்கீகாரமும் விருதுகளும் பெற்றிருப்பவர்.
அவர் முன்னெடுப்பில் 2013ஆம் ஆண்டிலிருந்து கவி மாலை என்று பொருள்படும் காவ்யா சஞ்சே (Kaavya Sanje) என்ற பன்மொழிக் கவிஞர்களை உள்ளடக்கிய அமைப்பு, கவிதையை மையப்படுத்திப் பல்வேறு செயல்பாடுகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த 24.11.24 ஞாயிற்றுக்கிழமை பன்மொழிக் கவிஞர்கள் பங்குபெற்ற காவ்யா சஞ்சே கவிதை விழா -2024 (Kaavya Sanje poetry festival -2024) என்கிற நிகழ்வு பெங்களூர் சித்திர கலா பரிஷத் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. கன்னட மொழிக் கவிஞர்கள் பங்கு பெற்ற கவிதை வாசிப்பு, நூல் வெளியீடு, காட்சிக் கவிதை கன்னட ராப் இசைப் பாடல், கவிதை மொழிபெயர்ப்புக் குறித்த உரையாடல், கவிதை நாடகம், பன்மொழிக் கவிதை வாசிப்பு, பதிப்பாளர் கலந்துரையாடல் என நாள் முழுவதும் நிகழ்ந்த அமர்வுகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
எல்.என். முகுந்தராஜ் (கன்னடம்), ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் (கன்னடம்), சேரன் (தமிழ்), ஜீத் தயாள் (ஆங்கிலம்), அன்வர் அலி (மலையாளம்), சுகிர்தராணி (தமிழ்), ஷைனி ஆண்டனி (ஆங்கிலம்), மம்தா சாகர்( கன்னடம்), கெனோ லாங்பீன் (ஜெர்மன்) ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
கவிதை மொழிபெயர்ப்பு குறித்த அமர்வில் மாதவ் அஜம்புரா (கன்னடம்), சுனைஃப் (மலையாளம்) ஆகியோருடன் தமிழின் சார்பாக நான் கலந்துகொண்டு உரையாடினேன். தாதாபீர் ஜைமன், சித்தார்தா, ஹஜீரா கானும், ஷஷாங் ஜோஹிரி, ரேஷ்மா ரமேஷ் முதலியோர் அமர்வுகளை ஒருங்கிணைத்தார்கள்.
கவிதை வாசிப்பு என்ற தனிமனிதச் செயல்பாட்டினை ஒரு பண்பாட்டு நிகழ்வாக, கூட்டுப் பகிர்வு அனுபவமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பாக அமைந்திருந்த இந்த விழா மிக எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் பார்வையாளர்களிடையே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
மின்னஞ்சல்: mohankrangan@gmail.com