மொழி வளர்ச்சியும் காலச்சுவடும்
காலச்சுவடு இதழை முப்பத்திஆறு ஆண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமி தொடங்கினார். சு.ரா., மொழிக்கும் மொழிநடைக்கும் கூருணர்ச்சி மிக்கவர். தமிழ்ப் படைப்புக்களில் சமகாலத் தமிழும் இயல்பான மொழிநடையும் இடம்பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். தம் கட்டுரைகளிலும் புனைவுகளிலும் கையாண்ட மொழி தமிழகப் படைப்பாளிகளிடையே சு.ராவுக்கென ஒரு தனி இருக்கையைப் பதிவு செய்துள்ளது. தொண்ணூறுகளில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் மொழியைப் பற்றியும் மொழிநடையைப் பற்றியும் அறிவியல்பூர்வமான மொழியியலாய்வுகள் குறித்தும் விவாதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார். குறிப்பாகப் புனைவுகளில் வட்டார வழக்குகளின் பயன்பாடு குறித்துச் சிலாகித்த தருணங்கள் பல. கதைமாந்தரை வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் வல்லமை வட்டார மொழிக்கு மட்டுமே உண்டு என்ற கருத்துடையவர். மொழி நடையில் நவீனத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று வலியுறுத்துவார். இந்நிலைப்பாட்டை