காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்
தமிழ்ச் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்தத் தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டுச் சில நாள்களாகப் பழைய இதழ்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்து முதல்முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். 2014 ஏப்ரல் இதழில் அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ நூலுக்கு எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ எனும் விரிவான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியானது. அந்த முன்னுரை அம்பேத்கரின் பங்களிப்பையும் அவரது சிந்தனையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதைவிட காந்தியை அவருக்கு எதிரியாகக் கட்டமைப்பதிலும் மேற்கோள்களைத் திரித்து காந்தியின் மீது அவதூறு செய்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. அருந்ததி ராய்க்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய விரிவான மறுப்பு ‘சுதந்திரமும் சமூக நீதியும்’ எனும் தலைப்பில் சிறு பிரசுரமாக, சர்வ