உள்ளிருந்து ஒலிக்கும் குரல்
கற்றதால்
(நாவல்)
ஆர். சிவகுமார்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை
நாகர்கோவில்-1
பக். 208
ரூ. 260
தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமார். உலக இலக்கியங்கள் பலவற்றைச் சிரத்தையுடன் தமிழுக்குக் கொண்டுவந்தவர். இவர், ஆங்கிலப் பேராசிரியராக ஆத்தூர், கும்பகோணம், தருமபுரி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1983முதல் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்புப் பணியை முதன்மையாகச் செய்துவருபவர்கள், படைப்பில் ஈடுபடுவது குறைவு. இந்தப் பட்டியலில் ஆர். சிவகுமாரும் இணைகிறார். கற்பித்தல் பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர் இவர், அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்து தன்வரலாற்றுத் தன்மையில் ‘கற்றதால்’ நாவலை எழுதியிருக்கிறார்; ஏற்கெனவே ‘தருநிழல்’ என்றொரு நாவலையும் எழுதியுள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்கள்மீது கட்டப்பட்டுள்ள உன்னதங்களையும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் மீதான புனிதங்களையும் இந்நாவல் விமர்சிக்கிறது. அதேநேரத்தில் உயர்கல்வி சார்ந்த அரசின் போதாமைகளையும் நாவல் சுட்டிக்காட்டுகிறது. ‘தேசிய அளவில் உயர்கல்விக்குச் செல்வோர் விகிதம் 33 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 60 சதவீதமாக உள்ளது’ என்று மேடைகள்தோறும் ஆள்பவர்கள் பேசி வருகிறார்கள். உயர்கல்வியின் தரத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களின் பார்வையும் அதற்குள்ளேயே பல ஆண்டுகளாக இயங்குபவர்களின் பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. ஆர். சிவகுமார் உள்ளிருந்து பார்ப்பவர். கற்றல், கற்பித்தலின் தரம் காலந்தோறும் சரிந்துகொண்டேதான் வருகிறது. இன்றும், ‘நான் அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.’ என்று கூறுபவர்களிடம் ஒரு பெருமிதம் வெளிப்படத்தானே செய்கிறது.
ஆர். சிவகுமார் இந்நாவலைத் தன்வரலாற்றுத் தன்மையில் எழுதியிருந்தாலும் தன்னை முதன்மைக் கதாபாத்திரமாக முன்னிறுத்தவில்லை. ‘இவன்’ என்று படர்க்கையிலேயே விளித்திருக்கிறார். பிரதியிலிருந்து தன்னை வெளியே நிறுத்திக்கொண்டு, உள்முகமாக உயர்கல்வியின் செயல்பாடுகளையும் சமகால இலக்கியச் சூழலையும் அணுகியிருக்கிறார். ஆர். சிவகுமார் இயல்பிலேயே அதிர்ந்து பேசாதவர்; மென்மையானவர். மாற்றுக் கருத்தையும் பிறர்மனம் புண்படாமல் சொல்லக்கூடியவர். அந்தத் தொனி இந்நாவலிலும் ஒலிக்கிறது. சக பேராசிரியர்கள் மீதான அதிருப்தியைப் பெரும்பாலும் பகடியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். நாவலும் புனைவுக்கும் அ-புனைவுக்கும் இடையிலான ஒரு வெளியைத் தகர்க்க முயலும் பின் நவீனத்துவத் தன்மையில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆர். சிவகுமார் வெற்றி பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் இந்நாவல் விவரிக்கும் காலகட்டம் மிக முக்கியமானது. அந்தக் காலத்திய நவீன இலக்கியச் செயல்பாடுகள் குறித்து மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். உலக இலக்கியங்கள் பலவற்றைப் பிரதிக்குள் பிரதியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
கும்பகோணம் கல்லூரியில் பணிவாய்ப்பு கிடைக்கிறது. அதனை, “அந்தக் கல்லூரியின் மதிப்பு அங்கே படித்த ராமானுஜனால், தமிழ்ப் பதிப்பாராய்ச்சிப் பெருமை அங்கே போதித்த உ.வே.சாமிநாதையரால். பின்னாளில் நவீன இலக்கியத்தின் பிதாமகர்கள் சஞ்சரித்த கல்லூரியும் ஊரும் அவை” என்று எழுதியிருக்கிறார். இப்படித்தான் இடங்களின் பெயர்களும் எழுத்தாளர்களின் பெயர்களும் நாவலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட காலம்வரை நவீன இலக்கியங்கள் பாடநூல்களில் இடம்பெற்றதில்லை. பாரதி, பாரதிதாசன், வாணிதாசன், முடியரசன் உள்ளிட்ட மரபுக்கவிஞர்களுக்குப் பிறகு கவிஞர்களும் எழுத்தாளர்களும் பிறக்கவில்லையென்றே பாடநூல் தயாரிக்கும் வல்லுநர்கள் கருதியிருந்தனர். அதனால் நவீன இலக்கியங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அந்நியமாகவே இருந்தன. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தொண்ணூறு சதவீத ஆசிரியர்களுக்கு மரபிலக்கிய அறிவு மட்டுமே இருக்கும். இன்றும் அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. ஒரு கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்குப்போன தி. ஜானகிராமனையும் தன்னையும் அங்கிருந்த பேராசிரியர்களுக்குத் தெரியவில்லை என்று எம்.வி. வெங்கட்ராம் வருத்தப்பட்டிருக்கிறார். கும்பகோணத்தைச் சார்ந்த மூத்த படைப்பாளிகளான கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, மௌனி ஆகியோரையும் கும்பகோணம் கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் தெரியவில்லை. சுந்தர ராமசாமியின் புனைவுமொழியைப் புரிந்துகொள்ள இயலாமல், ‘எழுத்தாளரை முதலில் தமிழ் கத்துக்கச் சொல்லுங்க,’ என்கிறார் ஒரு பேராசிரியர். இப்படியாக, நவீன இலக்கியத்திற்கும் பேராசிரியர்களின் அறிவுக்குமான இடைவெளிகள் குறித்து மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருக்கிறார். தமிழகத்தில்தான் இந்நிலை; அண்டை மாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகாவிலும் எழுத்தாளர்களுக்குப் பெரும் மதிப்பிருக்கிறது என்ற தகவலையும் தரவுகளுடன் இந்நாவல் பதிவுசெய்திருக்கிறது.
ஆசிரியர் பணி மிகப் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்தப் பணிக்கு ஆசிரியர்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். “சம்பளத்தில் பத்து ரூபாய் குறைத்துக் கொடுத்தால் புனிதமும் அறமும் எங்கே காணாமல் போகும் என்றே தெரியாது,” என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்
ஆர். சிவகுமார். அதே நேரத்தில் ஆசிரியர் பணியில் நேர்மையாக இருந்தவர்களையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. பேராசிரியர்கள் அரசுக்கு எதிராக இதுவரை பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்; இன்றும் அது தொடர்கிறது. அதில் ஒன்றுகூட மாணவர் நலன் சார்ந்ததாக இருந்ததில்லை. தங்கள் நலனை மாணவர்கள் நலனாக மாற்றி வெளிப்படுத்தும் பாவனை மட்டுமே அதில் மறைந்திருக்கும். கல்லூரிப் பேராசிரியர்களின் ஊதியம் உயரும்போதெல்லாம் அவர்களுக்குக் கடமையுணர்வு பெருகுவதற்குப் பதிலாக அகந்தை பெருகுவதாக ஆர். சிவகுமார் எழுதியிருக்கிறார். கல்லூரி உதவிப் பேராசிரியருக்கு வாரத்துக்கு அதிகபட்சமாகப் பதினாறு பாடவேளைகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இந்த நேரத்தைக்கூட மாணவர்களின் கற்றல் நலனுக்காகப் பயன்படுத்தாத பேராசிரியர்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். உயர்கல்விச் சூழல் இப்படித்தான் இருக்கிறது.
தேர்வுத் தாள் திருத்தும் மையங்களில் நடைபெறும் அறமீறல்கள் பகிர முடியாதவை. ‘எல்லாரையும் பாஸ் செஞ்சிவுட்டுட்டா பிரச்சினை இல்ல பாருங்க,’ என்ற மனநிலைதான் பெரும்பாலான ஆசிரியர்களிடம் இருக்கிறது. இதனையும் ஆர். சிவகுமார் இந்நாவலில் கவனப்படுத்தியிருக்கிறார். பேராசிரியர்களின் இந்த மனப்போக்குக் காரணமாக, ‘விடைத்தாளில் என்ன எழுதினாலும் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்’ என்ற எண்ணம் மாணவர்களிடம் உருவாகிவிட்டது. இதனால் நன்கு படித்துத் தேர்வெழுதக்கூடிய மாணவர்கள்தாம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையெல்லாம் தொண்ணூறுகளுக்கு முன்பிருந்தே இருந்துவருவதை இந்நாவலின் மூலமாக அறிய இயல்கிறது.
ஆர். சிவகுமார், தொழில்சார்ந்து ஆங்கில இலக்கியத்துடனும் மொழி சார்ந்து தமிழ் இலக்கியத்துடனும் அணுக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இன்றுவரை இரண்டு மொழிகளின் நவீன இலக்கியப் போக்குகளையும் கூர்ந்து அவதானித்து வருகிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் தமிழ் இலக்கியத்தின் புதிய முயற்சிகளைக்கூடக் கவனிப்பதில்லை என்ற ஆதங்கம் இந்நாவலில் வெளிப்படுகிறது. ஏனெனில், ஆங்கிலப் பேராசிரியர்களைவிடத் தமிழ்ப் பேராசிரியர்களால்தாம் மாணவர்களுடன் எளிதில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது. பேராசிரியர்கள் தங்கள் பொருளாதார நிலையைப் பெருக்கிக்கொள்வதில் தீவிரம் காட்டுகின்றனர். மாணவர்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். தம் பணிக்காலத்தில் அறத்துடன் செயல்பட்ட பேராசிரியர்கள், புனைவில் பேசப்பட்டுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்வார்கள். பிறர், புனைவாசிரியரைக் கடுமையாக விமர்சிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆர். சிவகுமார் இதனையெல்லாம் கருத்தில்கொண்டே இப்புனைவை எழுதியிருக்க வேண்டும்.
‘கற்றதால்’ நாவல் கல்விச்சூழலைக் கடந்து, நிறைய இலக்கியத் தரவுகள் குறித்தும் பகிர்ந்துகொள்கின்றது. படைப்பாளர்களின் பெயர்களை வெளிப்படையாக எழுதுவதற்கும் புனைவாசிரியருக்கு ஏதோ தயக்கம் இருந்திருக்கிறது. மௌனி, க.நா.சு., சி.சு. செல்லப்பா, சி. மணி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, க்ரியா ராமகிருஷ்ணன், உ.வே.சா., வ.அய். சுப்பிரமணியம், ரா.ஸ்ரீ. தேசிகன், ஓ.வி. விஜயன், காஃகா உள்ளிட்ட பலரின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்தும் நாவலில் பேசப்பட்டுள்ளது. சுந்தர ராமசாமி ஆர். சிவகுமாருக்குப் பிடித்த எழுத்தாளராக இருக்கிறார். நாவலின் பல இடங்களில் சுந்தர ராமசாமி பற்றியும் அவரது இலக்கியச் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமிக்கும் ஒரு பேராசிரியருக்கும் இடையே நடைபெற்ற அற்புதமான உரையாடலொன்று புனைவில் இடம்பெற்றுள்ளது. சு.ரா. எதிர்கொண்டதைத்தான் நவீன எழுத்தாளர்கள் பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். கணிசமான ஊதியம் பெற்றுக்கொண்டு இலக்கியப் பணி ஆற்றிய பேராசிரியர்களைவிட, தன் அழுக்கு வேட்டியையும் துவைத்துக் கட்ட வழியில்லாமல் கல்விப்புலத்துக்கு வெளியே இலக்கியப்பணி செய்தவர்கள்தாம் அதிகம் என்பதையும் இந்நாவல் பகிர்ந்துகொள்கிறது. தனக்குக் கிடைத்த சொத்தையெல்லாம் விற்றுதான் க.நா.சு. இலக்கிய இதழ்களை நடத்தினார். சி.சு. செல்லப்பாவின் பரிதாபமான தோற்றத்தைக் கண்டுதான் அவர் சுமந்துவந்த நூல்களைச் சிலர் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் எழுத்தை நம்பிப் பிழைக்க முடியாது என்று தெரிந்தே அந்த வேலையைச் செய்தார்கள். “வயசானவர் சிரமப்பட்டு வந்திருக்காரே என்று பரிதாபப்பட்டு ராஜாங்கம் ஒதுக்கற நிதியில் ஏதோ நாலஞ்சி புஸ்தகங்களைச் சில பேர் வாங்கினாங்க. ஒன்றும் வாங்காமல் வெறும் கையோடு அவரை அனுப்ச்சி வச்ச பேராசான்களோட எண்ணிக்கதான் அதிகம்,” என்று நாவலில் எழுதியிருக்கிறார்.
நாவல் நேர்க்கோட்டுத் தன்மையில் எழுதப்படவில்லை. அதேபோன்று, நாவல் காத்திரமான புனைவுமொழியில் எழுத வேண்டும் என்ற நோக்கமும் புனைவாசிரியருக்கு இல்லை. தான் பணியாற்றிய காலகட்டத்தின் கல்விப்புலச் செயல்பாடுகளையும் அதே காலத்தில் நிகழ்ந்த இலக்கியப் போக்குகளையும் புனைவாசிரியர் இந்நாவலில் விவரித்திருக்கிறார். அதற்குத் தன்னையும் ஒரு கதாபாத்திரமாகப் புனைவுக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத தன்மையிலேயே புனைவை எழுதியிருக்கிறார். ‘நிகழாத ஒன்றை எப்படி எழுதுவது,’ என்ற கேள்வி இவரது புனைவைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. அதனால் புனைவை வாசிக்கும்போது கட்டுரைக்குரிய தன்மை கொஞ்சம் கூடுதலாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இதுவொரு வகைமைதான். இதனை ‘வளாக நாவல்’ என்கிறது, இந்நாவலின் பின்னட்டைக் குறிப்பு. நாவல் இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்ற வரையறைகள் ஏதுமில்லை. எழுதப்பட்ட வடிவத்திலிருந்துதான் அந்தப் பிரதியை அணுக வேண்டும். அதனால், ஆர். சிவகுமார் ஒரு புதிய நாவல் வகைமையை முன்மொழிந்திருக்கிறார்.
தனியார் கல்லூரிகளின் பெருக்கம் குறித்த விமர்சனத்தையும் நாவல் முன்வைக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு எம்.ஜி.ஆர். அனுமதி கொடுத்தார். தனியார் கல்வி நிறுவனங்களை அவர் கொண்டுவந்ததற்குச் சில நோக்கங்கள் இருந்தன. அந்த நோக்கங்களுக்கு நேரெதிராகவே இன்று அக்கல்லூரிகள் செயல்படுகின்றன. வரைமுறையே இல்லாமல் புதிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஏற்கெனவே இருந்த பாடப்பிரிவுக்கும் புதிய பாடப்பிரிவுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. ஒரேயொரு தாளைப் புதிதாகச் சேர்த்துவிட்டுப் புதிய பாடப்பிரிவாகக் காட்டினர். பல்கலைக்கழகங்களும் இதற்கு உடந்தை. பாடப் பிரிவுகளுக்குக் கவர்ச்சியான பெயர்களைச் சூட்டி, மாணவர்களை ஏமாற்றும் செயல் இன்று அதிகளவில் நடைபெற்று வருகின்றது. இந்தப் பிரச்சினைகள் குறித்தும் ஆர். சிவகுமார் எழுதியுள்ளார்.
இவர், இந்நாவலில் பயன்படுத்தியுள்ள அங்கத மொழி அருமையாகத் தொழிற்பட்டுள்ளது. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள் இவ்வகை மொழியைச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றனர். தீவிரத்தின் வறட்சியை அங்கதமொழி மென்மையாக மாற்றிவிடுகிறது. கல்விப்புலத்தில் செயல்படும் சாதிய அரசியலை நாவலாசிரியர் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். அது ஒரு நோயைப் போன்று தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. உயர்கல்விப் புலம் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக் கொண்டிருக்கிறது. அதன்மீது கட்டப்பட்டிருந்த உன்னதங்கள் சரிந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆற்றா மையை உள்ளிருந்தே ஒலித்திருக்கிறார் ஆ. சிவகுமார்.
மின்னஞ்சல்: ramesh5480@gmail.com