அம்பை 80: நெகிழவைத்த நிகழ்வு
அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தின. ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு மதுரை அமெரிக்கன் கல்லூரியின் உயராய்வுத் தமிழ் மையத்தில் நடைபெற்றது.
அம்பை பற்றிய ஆவணப்படத்தோடு நிகழ்வு தொடங்கியது. டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதினை அவர் பெற்றதையொட்டிப் பதிவுசெய்யப்பட்ட காணொளி திரையிடப்பட்டது. அம்பை உருவாக்கி நடத்திவரும் பெண் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் ஸ்பாரோ அமைப்பின் பணிகளைப் பற்றிய ஆவணப்படம் பிற்பகலில் திரையிடப்பட்டது.
காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் பதிப்பாளருமான கண்ணன் தொடக்க உரையாற்றினார். வரவேற்புரையைக் கடவு அமைப்பாளர் கவிஞர் தேவேந்திர பூபதியும் வாழ்த்துரையைக் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரும் நிகழ்த்தினர். முதல் அமர்வுக்கு எழுத்தாளர் பெருமாள்முருகன் தலைமை ஏற்றார்.
முதல் அமர்வில் பேசிய கவிஞர் சேரன், அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ சிறுகதைத் தொகுப்பு தன்னுடைய பாடத்திட்டத்தில் இருந்ததைக் குறித்தும் அக்கதைகள் ஈழச் சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் தனக்கே உரிய முறையில் சுவையாகப் பகிர்ந்துகொண்டார். ஈழத்திலிருந்து ‘சொல்லாத சேதிகள்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியாவதற்கு அம்பை முன்னோடியாக இருந்தார் என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமாரின் ஆங்கில உரை கன்னட மொழியில் அம்பை எழுத்துக்களின் பொருத்தப்பாடு பற்றியதாக அமைந்தது. கதைகள் கன்னடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அம்பைக்கும் கர்நாடகத்திற்குமான உறவைக் குறித்தும் அவர் பேசினார். அம்பையின் ஆளுமை பற்றிப் பேசிய சல்மாவின் உரை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. பிறகு, அமர்வின் விருந்தினர்களிடம் பார்வையாளர்கள் கேள்விகள் எழுப்பினர். கேள்வி எழுப்புவோருக்குக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மூன்று நூல்கள் அடங்கிய புத்தகக்கட்டு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் அமர்வை அரவிந்தன் ஒருங்கிணைத்தார். மயிலன் ஜி சின்னப்பன், லாவண்யா சுந்தரராஜன், ரம்யா ஆகியோர் பங்கேற்ற அந்த அமர்வு உரையாடலாக அமைந்தது. அம்பையின் கதைகளின் நிலப்பரப்பைப் பற்றி லாவண்யாவும் எழுத்தாளராக இருந்துகொண்டே செயல்பாட்டாளராகவும் அம்பை செயலாற்றிவருவது குறித்து ரம்யாவும், அம்பை கதைகளின் கருத்தியல் கூறுகள் பற்றி மயிலனும் தங்கள் பார்வைகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
மூன்றாம் அமர்வுக்குத் தலைமை சுகுமாரன். அம்பையின் ஆங்கில ஆக்கங்கள் குறித்து அமெரிக்கன் கல்லூரியில் உள்ள SCILET அமைப்பின் இயக்குநர் பிரமிளா பால் உரையாற்றினார். கூரிய பார்வைகள் நிறைந்த நேர்த்தியான உரையாக அது அமைந்தது. தொடர்ந்து அம்பையைப் பற்றிய நினைவுகளை இமையம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அம்பையின் புனைபெயர், அவருடைய சுயமரியாதை உணர்வு, சமரசமற்ற துணிச்சல் ஆகியவை குறித்து இமையம் பேசினார்.
மதிய உணவுக்குப் பிறகு நான்காம் அமர்வு தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது. சுடர்விழி, லறீனா அப்துல் ஹக் (இலங்கை), கமலதேவி ஆகியோர் பேசினர். அழகுநிலா, கவிதா லட்சுமி ஆகியோர் இணைய வழியில் பங்கேற்றனர். அம்பை கதைகளில் பயணங்கள் குறித்து சுடர்விழி ஆழமான உரையை வழங்கினார். அம்பை கதைகளுடன் தனக்கு உள்ள உறவு குறித்து லரீனா பகிர்ந்துகொண்டார். அழகுநிலாவும் கவிதா லட்சுமியும் கமலதேவியும் அம்பையின் படைப்புலகம் பற்றிய சித்திரத்தைத் தீட்டினார்கள்.
அம்பையின் புதிய சிறுகதைகள் அடங்கிய ‘இரு பைகளில் ஒரு வாழ்க்கை’ நூல், அம்பை தொகுத்த ‘ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்’ என்னும் நூல் ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. சுகுமாரன் வெளியிட முறையே மைதிலியும் லறீனா அப்துல் ஹக்கும் பெற்றுக்கொண்டனர். நூல்களைக் குறித்து சுகுமாரன் உரையாற்றினார்.
இறுதி அமர்வில் பெருமாள்முருகன் சிறப்புரையாற்றினார். அம்பையுடனான நட்பின் அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்துகொண்ட அவர், அம்பையின் கதைகள் தமிழ்ப் புனைகதைகளில் ஏற்படுத்திய உடைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அம்பை தன்னுடைய ஏற்புரையில் தன் இளமைக் கால அனுபவங்களை சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நன்றியுரையை அமெரிக்கன் கல்லூரி இளங்கலைத் தமிழ்த்துறைத் தலைவர் ஹென்றி ஜூலியஸ் ஆற்றினார்.
அம்பை படைப்புகளின் அடிப்படையில் அமைந்த ‘ஒரு பென்சிலின் மௌனப் புரட்சி’ நாடகம் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் அ. இராஜன் இயக்கத்தில் மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. அன்னலட்சுமி இணை இயக்கம். முதுகலைத் துறைத்தலைவர் செங்கோல் மேரி அறிமுகவுரை. மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து அந்நாடகத்தை அரங்கேற்றினர். பங்குபெற்ற அனைத்து நடிகர்களுக்கும் பொன்னாடை போர்த்திப் புத்தகம் பரிசளித்து மைதிலிசுந்தரம் கௌரவப்படுத்தினார்.
அம்பையைப் பற்றிப் பேசிய பலரும் ஒரு படைப்பாளுமையாக அவருடைய தனித்தன்மை, தனிப்பட்ட முறையில் அவர் காட்டும் அன்பு, பன்முகச் செயல்பாடுகள் கொண்ட துடிப்பான வாழ்க்கை ஆகியவை குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். கருத்தரங்கில் கலந்துகொண்ட பலரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்கள். எழுத்தாளர்களும் வாசகர்களும் நெகிழ்ச்சியுடன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தததைக் காண முடிந்தது. வாழும் காலத்திலேயே உரிய அங்கீகாரம் பெறாத பல சாதனையாளர்களைக் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பில் அம்பை 80 போனற நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன. சமகாலப் படைப்பாளுமை ஒருவரைப் பாராட்டவும் அவரது பங்களிப்புகளைத் தொகுத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் பல படைப்பாளிகள் கொண்டாடப்படுவதற்கான உந்தாற்றலைத் தரக்கூடும் என்னும் வகையிலும் முக்கியமானது.