ஆளற்ற சாலை சந்திப்பு
தங்க நகைப் பாதை
(நாவல்)
மு. குலசேகரன்
ரூ. 550
காலை வேளையில் தென்னந்தோப்பு மிகவும் குளிர்ந்தது. திட்டுகளாகத் தரையில் நிழல் பரவியிருந்தது. உச்சிவேளையில் மண் வெப்பமடையும். பச்சையோலைகள் ஆவியுமிழும். காய்ந்த ஓலைகள் பற்றியெரியத் துடிக்கும். மாலைவரை தோப்பு உலை போலிருக்கும். எதிர் தென்னை மரத்தடியில் விஜயா ஓலை முடைந்துகொண்டிருந்தாள். வெயிலுக்கேற்ப மரத்தைச் சுற்றி உட்காருவாள். அருகே தொட்டியில் குழாயிலிருந்து நுரை பொங்க நீர் குதித்தது. துளிகள் மேலே பட்டு உடல் சிலிர்த்தது. கிணற்றில் சிறிய நீரூற்றுகள் கொட்டின. பக்கத்தில் பால் போன்ற மணல் விரிந்து ஓடும். ஆறால் நீர் வற்றுவதில்லை. கோடையில் மட்டும் ஆற்றைப்போலவே கிணறும் வறளும். சிறிய மாடம் போன்ற தகரக் கூரை கொட்டகையில் வெயிலுக்கு அண்ட முடியாது. கடைசி தென்னை வயலுக்கு வாய்க்காலில் நீரைத் திருப்பியிருந்தாள். மின்சாரம் நிற்பதற்குள் பாய்ந்துவிடும். அவள் தலை நிமிராமல் மும்முரமாக ஓலை தைத்துக்கொண்டிருந்தாள். இன்று ஐந்து கட்டுகள் பின்ன வேண்டும். நாளை ஓலைத் தரகர் மொத்தமாக வண்டியில் வாங்கிப்போவார்.
தென்னந்தோப்பு ஆற்றையொட்டித் தனித்திருந்தது. முன்புறத்தில் வேலி போல் புதர்கள் அடர்ந்திருந்தன. உள்ளே நுழைய மூங்கில் படல் தடுப்பிருந்தது. எதிர்ப்புறக் கொல்லையில் தொலைவில் ஒரு குடிசை. உள்ளே காவல்காரர் குடும்பத்துடன் வசித்தார். விஜயா கல்யாணமான ஓரிரு மாதங்களில் தனியாகக் கொல்லைக்கு வந்தாள். முதல் நாளன்று “என்னக்கா வேல செய்ய வந்துட்டீங்க?” என்றார் காவல்காரர் சிரித்தபடி. “சும்மா வீட்டுல இருக்க முடியலை, அதான்” என்றாள் விஜயா. அவள் குடும்பச் சூழலால் வேலைக்கு வருகிறாள் என்று அவருக்கும் தெரிந்திருக்கும். தோப்பைச் சுற்றி வேறு யாருமில்லை. விஜயாவுக்குப் பயம் ஏற்படுவதில்லை. கணவர் முத்து காலையில் கனத்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு மற்றொரு கொல்லைக்குப் போய் விடுவார். அங்கு நெல், கரும்பு பயிரிட்டிருக்கின்றன. மத்தியானம் சாப்பிட்டு வீட்டில் தூங்குவார். யாரும் எழுப்பக் கூடாது. மாலையில் கடைப் பக்கம் போவார். அங்கு இருட்டும் வரை காசு வைத்துச் சீட்டாடுவார்கள். முத்துவுக்கு ஒருபோதும் அதிர்ஷ்டமிருப்பதில்லை.
அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்துக்கு முன்தினம். சுந்தரம் கொல்லைக்குப் போயிருந்தார். முத்துவின் மாமா வீட்டுக்கு வந்திருந்தார். தரை புரள கட்சிக் கரை வேட்டிக் கட்டியிருந்தார். மோகனைத் தனியாக அறைக்குக் கூப்பிட்டார். கையில் ஒரு கடிதம். “யாரோ மொட்டக் கடுதாசி எழுதியிருக்காங்க. உங்க அக்காவுக்கும் வேறொருத்தருக்கும் முன்ன கல்யாணம் நடந்துச்சாம். அதனால இத தடுத்து நிறுத்தணுமாம்” என்றார். மோகன் பதற்றத்தை மறைத்துக்கொண்டு “அதெல்லாம் பொய். பக்கத்து வீட்ல ஒரு கிழவி அவ மகனுக்குப் பொண்ணு தரலைன்னு கோபத்துல எழுதியிருப்பா” என்றான். அவர் “அத நாங்க பெரிசா எடுத்துக்கலை. ஊரில பொறாமைல பண்ணுவாங்க. முத்துவப் பத்திக்கூட அப்படி நெறையப் பேச்சிருக்கு” என்றார். மதியச் சாப்பாடு தயாராகிக்கொண்டிருந்தது. அவர் இடுப்பிலிருந்து ஒரு பாட்டிலை உருவினார். சொம்பில் வைத்திருந்த நீரில் கலந்து குடித்தார். “கொஞ்சம் சாப்புடறியா?” என்றார். மோகன் “இல்ல, வேண்டாங்க” என்றான். அவர் “நாங்க வேற கட்சி ஆளுங்க, அதனால எதிர்க் கட்சிக்காரங்கக் கூடச் சதி செய்ய எழுதியிருப்பாங்க . . .” என்றார். ஞாபகம் வந்தவராக “சரி, முத்துவுக்கு ரொம்ப நாளா ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கணும்னு ஆசை. உங்க அப்பாகிட்ட கல்யாணத்துக்கு முன்னால அதுக்குப் பணம் கொடுக்கச் சொல்லு” என்றார். திருப்தியுடன் கடிதத்தைச் மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டார். நாலைந்து பக்கங்களுள்ள கடிதம். அவ்வளவுக்கு என்ன எழுதப்பட்டிருக்குமென மோகன் யோசித்தான். அதைக் கேட்க நினைத்தான். அவர் தனக்கு அளிக்கும் மரியாதையைக் குலைக்கக் கூடாது. வெளியே விஜயா சாப்பிட அழைத்தாள். அவளிடம் தனியாக நடந்ததைச் சொன்னான். “அவருக்கு மோட்டார் சைக்கிளுக்குப் பணம் வேணுமாம். உன் வாழ்க்கைல சங்கிலித்தொடர் மாதிரி கடிதம் வருது” என்று மோகன் கிசுகிசுத்தது இப்போதும் காதில் ஒலித்தது.
முத்துவின் வீட்டுக்கு எதிரில் தெரு முச்சந்தியில் திருமணம் நடந்தது. பள்ளியிலிருந்து எடுத்து வந்த பெஞ்சுகளும் நாற்காலிகளும் போடப்பட்டன. நடுவில் அலங்கரிக்கப்பட்ட உயரமான மேடை. பக்கத்தில் புதிய இருசக்கர வாகனம் மாலையுடன் நின்றிருந்தது. அதில் கட்சியின் சிறிய கொடி பறந்தது. மோகன் தன்னுடைய கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்களை அழைத்திருந்தான். தமிழ்த்துறைத் தலைவர் வாழ்த்திப் பேசிவிட்டுத் தாலி எடுத்துக்கொடுத்தார். திருமணம் முடிந்ததும் தெருவில் சாப்பாடு போடப்பட்டது. பேராசிரியர்களை ஓய்வெடுக்க முத்து வீட்டு மாடிக்கு மோகன் அழைத்துச் சென்றான். மாடி முகப்பில் கட்சிக் கொடியும் வீடு கட்டிய வருடமும் பொறித்திருந்தன. தேங்காய், நெல் கொட்டி வைத்திருந்த அறை பூட்டியிருந்தது. கூடத்தில் யாரோ சாப்பிட்ட இலையை எடுக்காமல் போயிருந்தார்கள். மோகன் அதை வெளியில் இழுத்துவிட்டுப் பாயை விரித்தான். பேராசிரியர்கள் வெற்றிலை, பாக்கு போட்டபடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். மாபெரும் கட்சித் தலைவரின் மண் சிலை கூடத்து மூலையில் சாய்ந்திருந்தது. “அது இன்னைக்கு அரசியல் நிலையக் காட்டற குறியீடு” என்று சிரித்தார் மூத்த பேராசிரியர். மற்றவர்களும் சிரித்து ஆமோதித்தார்கள். “அத ஒரு போட்டோ எடுக்கச் சொல்லு” என்றார். மோகன் சிலையை நிமிர்த்த முயற்சித்தான். அதன் பீடம் உடைந்திருந்தது. பின்புறம் காலி பிராந்தி பாட்டில் மறைந்திருந்தது. அவன் கீழே சென்றான். எங்கு தேடியும் கல்யாண புகைப்படக்காரர் கிடைக்கவில்லை. இன்னும் மணமகள் கோலத்துடனிருந்த விஜயாவிடம் சொன்னான். அவள் முத்துவிடம் தெரிவித்தும் புகைப்படக்காரர் வரவில்லை.
முதலிரவன்று விஜயாவின் வீட்டுக்கு முத்து இருசக்கர வாகனம் சத்தமிட நள்ளிரவில் வந்தார். அனைவரும் களைப்பில் தூங்கியிருந்தார்கள். அப்பாவின் அறைக் கட்டிலில் அவள் காத்திருந்தாள். முத்து வேட்டியை அவிழ்த்து லுங்கிக்கு மாற முயன்றார். இடுப்பில் சொருகியிருந்த மது பாட்டில் தொப்பென்று கீழே விழுந்து உடைந்தது. வெளியிலிருந்து கார்த்தி “என்ன சத்தம்?” என்றான். முத்து “ஒண்ணுமில்லப்பா” என்றார். அறை முழுதும் சாராய நெடி அடித்தது. ஏற்கெனவே முத்து மேல் வேர்வையும் மது வாடையும் கலந்து வீசும். அவளுக்கு நாகேந்திரனின் தெளிந்த உருவம் நினைவுக்கு வந்தது. அவன் நிச்சயம் குடிக்க மாட்டான் என்றும் தோன்றியது. விஜயாவுக்கு நாற்றத்தில் தூக்கம் வரவில்லை. காலை நீண்ட நேரமானதும் சுந்தரம் கதவைத் தட்டி தன் இரும்புப் பெட்டியில் கணக்கு நோட்டை எடுக்க வந்தார். கடும் வாடையால் தலையில் அடித்துக்கொண்டு எதையும் எடுக்காமல் வெளியேறினார். முத்து போர்வையை இறங்கப் போர்த்தி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். அவள் எழுந்து தலைக்குக் குளிக்கச் சென்றாள்.
கல்யாணமான புதிதில் ஆற்றில் கிடைத்ததாகப் பை நிறைய மீன்களை முத்து வாங்கி வந்திருந்தார். அவற்றை விஜயா பொரித்துக்கொண்டிருந்தாள். இருட்டத் தொடங்கியதும் முத்துவின் அப்பாவும் அம்மாவும் ஒன்றாக மொட்டை மாடிக்குப் போனார்கள். அம்மாவின் கையில் சொம்பு நிறைய தண்ணீரிருந்தது. முத்து சமையல்கட்டுக்கு வந்து மீன்களை எடுத்தார். அவர் நடவடிக்கைகள் புரிந்தன. “என்ன விசயம்?” என்றாள். முத்து “நாங்க மேல போய் சாப்புடறோம்” என்றார். விஜயா மௌனமாகப் பார்த்தாள். முத்து தட்டு நிறைய மீன்களுடன் மாடிக்குப்போனார். அவள் மீதி சில மீன்களை வறுத்து முடித்து அடுப்பை அணைத்துவிட்டு மேலே சென்றாள். மாடிக் கதவு சாத்தியிருந்தது. அவள் தள்ளித் திறந்தாள்.
மொட்டை மாடியில் நிலவொளி பொழிந்தது. நடுவில் மூவரும் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். எதிரே தம்ளர்களில் பொன்னிற திரவம். அவளைக் கண்டதும் மாமனார் தலைகுனிந்தார். மாமியார் மறுபுறம் திரும்பிக்கொண்டாள். முத்து சிரித்தபடி “கொஞ்சம் தண்ணி சாப்புடறியா?” என்று தம்ளரைத் தூக்கிக் காட்டினார். அவள் பதில் சொல்லாமல் கதவைச் சாத்திக்கொண்டு கீழே இறங்கினாள். அவர்கள் ரசனையை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை. எதிர்காலத்தில் தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளைகளும் குடிகாரர்களாக மாறிவிடுவார்களென பயந்தாள். அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவள் மீனைச் சாப்பிடாமலே போய் படுத்துக்கொண்டாள்.
ஊர் திருவிழாவிற்கு முத்து நண்பர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார். அனைவருக்கும் பிளாஸ்டிக் கேனிலிருந்து கள்ளச் சாராயம் வழங்கப்பட்டது. சோறும் கறியும் சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். அவர்களுடன் முத்துவும் புறப்பட்டார். ஊரைச் சுற்றி கரகம் வந்துகொண்டிருந்தது. திடீரென கூக்குரல்கள் கேட்டன, விஜயா வெளியில் வந்து பார்த்தாள். தெருமுனையில் கூட்டமாக நின்றிருந்தார்கள். நடுவில் காவல் துறைச் சீருடை அணிந்தவரை முத்து காலால் ஓங்கி உதைத்துக்கொண்டிருந்தார். அவருடைய நண்பரும் அடித்தார். அந்த உதவி ஆய்வாளர் முத்துவின் நண்பருடைய தங்கையின் கையை ஊர்வலத்தில் பிடித்து இழுத்துவிட்டார் என்றார்கள். அவர் எழுந்து தேநீர்க் கடைக்குள் ஓடினார். முத்து உள்ளே புகுந்து இழுத்து வந்தார். மறுபடியும் தெருவில் வைத்து உதைத்தார். ஆய்வாளர் கையெடுத்துக் கும்பிட்டும் விடவில்லை. பக்கத்துக் காவல் நிலையக் காவலர்கள் லத்திகளுடன் ஓடி வந்தார்கள். முத்துவும் நண்பரும் தப்பிச் சென்றார்கள். ஆய்வாளர் அரைகுறை உயிருடன் கிடந்தார். இன்னும் கொஞ்சம் தாமதமாகியிருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரை அவசரமாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டுபோனார்கள். மாலையில் உயர் அதிகாரி தலைமையில் துப்பாக்கிகளுடன் அதிரடிப் படை வந்தது. எங்கு தேடியும் முத்து கிடைக்கவில்லை. கண்டவுடன் சுட முடிவெடுக்கப்பட்டது. ஆற்றில் நாணல் புதர்களில் முத்து ஒளிந்திருந்தார். காவல் துறை வந்தால் தூரத்திலிருந்து கண்டுபிடித்துவிடலாம். உதவி காவல் ஆய்வாளர் பிழைத்துக்கொண்டதால் கொலைக் குற்றத்திலிருந்து தப்பினார். ஊர்த் தலைவர் கண்ணன் அவரை வழக்கிலிருந்தும் மீட்டார்.
விஜயா தொடர்ந்து தென்னம் கீற்றுகளை முடைந்தவாறிருந்தாள். நடுவில் மின்சாரம் நின்றது. மதியம் சாப்பாட்டு வேளையில் தொட்டித் தண்ணீரை அள்ளிக் குடித்தாள். மாலையில் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வருவதற்குள் வீடு திரும்ப வேண்டும். மூன்று நான்கு கட்டுகளுக்கு ஓலைகள் முடிந்திருந்தன. அங்கங்கே தைத்தவையும் தைக்காதவையும் கிடந்தன. வெயில் விழாமலிருக்க மரத்தைச் சுற்றி உட்கார்வதில் கலைந்திருந்தன. பின்னியவற்றை எடுத்து அடுக்குகையில் வழக்கம்போல் மனம் நிறைந்தது. இதற்காகத்தான் ஓலை தைப்பது. விற்ற பணத்தை வாரச் சீட்டுக் கட்டுவாள். வீட்டுக்கு எதிரிலிருக்கும் நிதிக் கடைதான் சீட்டு நடத்துகிறது. அதில் முத்து ஆரம்ப காலப் பங்குதாரர். பிறகு பணம் வாங்கி கடனாளியாகிவிட்டார். மாதந்தோறும் வட்டி கட்டி வருகிறார். பிள்ளைகளைத் தென்னை ஓலைகளை விற்று மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும். தன்னைப்போல் அரைகுறையாக நின்றுவிடக் கூடாது என்று மீண்டும் நினைத்துக்கொண்டாள். ஓலைகளைச் சேர்த்துக் கட்டத் தொடங்கினாள்.
அப்போது கொல்லை எதிரில் சைக்கிளில் ஒருவன் வந்து நின்றான். இறங்காமல் ஒரு காலை தரையில் ஊன்றியபடி மூச்சு வாங்கினான். அவன் மற்றொரு தூரத்துத் துண்டுக் கொல்லையிலிருக்கும் வேலையாளின் மகன். கனத்த கண்ணாடி அணிந்திருப்பான். எப்போதும் முத்துவுடன் சுற்றுவான். “அக்கா, உங்க வீட்டுக்காரரு வண்டியில ஒருத்தர இடிச்சிட்டாரு. உடனே வாங்க” என்றான். விஜயா பதற்றமானாள். என்ன செய்வதெனப் புரியவில்லை. தைக்காத மீதி ஓலைகளைக் கட்டி முடிக்கலாமாவென யோசித்தாள். மோட்டார் அணைக்கப்பட்டிருக்கிறதாவென மறுபடியும் பார்த்தாள். சிறு தெளிவு மனதில் எழுந்து மறைந்தது. முகத்தை முந்தானையால் துடைத்தபடி வரப்பில் ஓடினாள். வேலிப் படலைச் சாத்தி அரைகுறையாகக் கட்டினாள். “எங்க, என்னவாச்சு?” என்று சைக்கிளின் பின்னால் உட்கார்ந்தாள். “ஒண்ணுமில்ல, பயப்பட வேணா. ஊரைத் தாண்டி போறப்ப இப்பதான் நடந்துச்சு” என்று மூச்சிரைத்தபடி அவன் சைக்கிளைக் கிளப்பினான். “இந்த ஆளுக்கு வேற வேலையில்ல” என்றாள் ஆசுவாசத்துடன். அவன் தடுமாறியபடி மிதித்தான். பாதைச் சரியாகத் தெரியவில்லை போலும். கீழே தள்ளிவிடுவானென பயந்தாள். அவள் தானே சைக்கிளை ஓட்ட நினைத்தாள்.
அவர்கள் ஊரைக் கடந்து இரு சாலைகளின் சந்திப்பை அடைந்தார்கள். இருபுறமும் புதர்களும் மரங்களும் மறைத்திருந்தன. சாலைகளில் எப்போதாவது ஓரிரு வாகனங்கள் ஓடின. முத்துவின் நண்பர்கள் வந்துவிட்டிருந்தார்கள். அவரின் கனத்த இரு சக்கர வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. மற்றொரு இரு சக்கர வாகனம் பக்கத்தில் விழுந்து கிடந்தது. ஒருவர் மரத்தில் கால்களை நீட்டி சாய்ந்திருந்தார். தலை தொய்ந்திருந்தது. கீழே செருப்புகள் சிதறியிருந்தன. நடு சாலையில் வண்டி இழுத்துச் சென்ற தடம். முத்து மரத்து வேரின் மேல் உட்கார்ந்து பதற்றமாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். கையிலும் காலிலும் இரத்தம் கசிந்தது. முட்டியில் கால் சட்டைக் கிழிந்திருந்தது. தலை கலைந்து மிகவும் பயந்தாற்போலிருந்தார். விஜயாவைப் பார்த்ததும் சிகரெட்டை கீழே எறிந்தார். கண்கள் கலங்க தலையைத் திருப்பிக்கொண்டார். அவள் நெருங்கி “என்னாச்சு, நிறைய அடிப்பட்டதா?” என்றாள். அவர் இல்லையெனத் தலையாட்டினார். மரத்தில் சாய்ந்து கிடந்தவர் பக்கம் கை காட்டினார்.
முத்துவின் நண்பர் அருகில் வந்தார். “ஒண்ணுமில்ல. நடந்தது நடந்தாச்சு. ஆவ வேண்டியதப் பாக்கணும். பாவம் ரொம்ப பயந்திருக்கான்” என்றார். “என்ன நடந்தது சொல்லுங்க” என்றாள் விஜயா. “முத்து வேகமா வந்திருக்கான். இங்கத் திரும்பியிருக்கான். அவரும் எதிரில வேகமா வந்திருக்காரு. ரெண்டு பேரும் குடிச்சிருக்காங்கப் போலிருக்குது. நேருக்கு நேரா மோதிக்கிட்டாங்க” என்றார் நண்பர். “அவரு யாரு, எந்த ஊரு? அவரு சொந்தக்காரங்களுக்குச் சொல்லி அனுப்பியாச்சா?” என்று அடிபட்டவரை மறுபடியும் பார்த்தாள். அவரிடம் எந்த அசைவுகளுமில்லை. சட்டையின் மேல் பொத்தான்கள் கழற்றிவிடப்பட்டிருந்தன. கைகள் தொங்க கால்களை நீட்டியிருந்தார். நன்கு பருத்த உடல். விரலில் பெரிய மோதிரம். “அந்த ஆளு மோதினதும் செத்திருக்காரு. பக்கத்து ஊர்க்காரருதான். இனிமேதா சொல்லி விடணும். இதோ கண்ண அண்ணன் வரட்டும், பாக்கலாம்” என்றார் முத்துவின் மற்றொரு நண்பர். விஜயா திகிலுடன் சாலையோரம் உட்கார்ந்தாள். கணவர் ஒரு கொலை செய்திருக்கிறார். அதற்குக் காவல்துறை கைது செய்து தூக்குத் தண்டனை கொடுக்கும். முன்பொரு முறை உதவி ஆய்வாளரை அடிக்கையில் நடந்ததுபோல் தப்பிக்க முடியாது. தானே குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும்.
சைக்கிளில் அழைத்து வந்தவன் எங்கிருந்தோ சொம்பில் நீர் எடுத்து வந்தான். “முத்துணா. இதக் குடி, தைரியமாயிரு” என்றான். நீர் சட்டையில் தளும்ப முத்து சொம்பைத் தூக்கி அண்ணாந்து குடித்தார். பாதி காலியானது. விஜயா இறந்தவர் அருகில் சென்று குனிந்து பார்த்தாள். சிறிய காயம்கூட இல்லை. மார்பு மெல்ல ஏறி இறங்குவதுபோல் தோன்றியது. ஆழ்ந்து தூங்குவதுபோலிருந்தார். நண்பர் பக்கத்தில் வந்தார். “நாந்தான் மொதல்ல வந்தது. நல்ல காலம் இந்தப் பக்கமாப் போயிட்டிருந்தேன். ரெண்டு பேரும் கீழ மயங்கி விழுந்து கெடந்தாங்க. யாரும் பாக்கலை. நா தூக்கிவிட்டேன். அவரு அப்பவே ஆளு காலி” என்றார். அவளுக்குப் பிணத்துடன் நெருங்கி நிற்பதற்குப் பயமாயிருந்தது. முத்துவின் வாகனத்திடம் வந்தாள். அது அவள் கல்யாண சீராக வற்புறுத்தி பெற்றது. முன் விளக்குக் கண்ணாடியில் விரிசல்கள்விட்டிருந்தன. முன்புறத் தடுப்பு நெளிந்திருந்தது. பெட்ரோல் தொட்டியில் அழுத்தமான கீறல்கள். கால் வைக்கும் பகுதிகள் வளைந்திருந்தன. வாகனத்திற்கு பெரிய சேதங்களில்லை. அவள் மீண்டும் முத்துவின் அருகில் வந்தாள். அவரின் கரிய தாடையில் மூன்று நாள் சவரம் செய்யாத தாடி. உடல் வேர்த்து ஒழுகியது. கூடவே சாராய நாற்றமடித்தது. அவள் தாள முடியாமல் பின்வாங்கினாள். “இப்படி ஒருத்தர அநியாயமாக் கொன்னுருக்கியே. இந்தப் பாவம் சும்மா விடுமா?” என்றாள். அவள் கண்களில் நீர் வழிந்தது. முத்துவும் அழுதார். “நா வேணுமுன்னுப் பண்ணல. அவருதான் தப்பான வழியில திரும்பி வந்தாரு” என்றார்.
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. மரங்கள் இருட்டாகத் தெரிந்தன. பறவைகளின் குரல்கள் தீனமாகக் கேட்டன. அவர்கள் சாலையில் காத்திருந்தார்கள். மரத்தடியில் பிணம் சாய்ந்திருந்தது. பக்கத்தில் வாகனங்கள் குறுக்கு மறுக்காக நின்றிருந்தன. இறந்த வரின் வாகனத்தைத் தூக்கி நிறுத்தியிருந்தார்கள். சாலையில் பயணித்த சிலர் சந்தேகமேதுமில்லாமல் கடந்தார்கள். வாகனவோட்டி ஒருவர் மட்டும் திரும்பிப் பார்த்தபடி நிதானித்தார். முத்துவின் நண்பர் “நிக்காத போ” என்று கையாட்டினார். கொஞ்ச நேரத்தில் கண்ணன் இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் உட்கார்ந்து வந்தார். வாகன மோட்டுபவர் தோள் மேல் ஒரு கையை வைத்திருந்தார். அவர் பெரும் நிலச் சுவான்தார். நகரத்தில் நிறைய வணிக வளாகங்களை வாங்கிப்போட்டிருக்கிறார். அருகில் வந்து அமைதியாக இறங்கினார். முத்துவையும் விஜயாவையும் பிணத்தையும் பார்த்தார். முத்துவின் நண்பர்கள் நடந்தவற்றைச் சொன்னார்கள். கண்ணன் “செத்ததுப் பக்கத்து ஊரு மோட்டுக்கொல்ல பலராம் மகன்தான? நம்மாளு இல்ல. சரி, போலிசுக்குத் தகவல் சொல்லிடுங்க” என்றார். முத்துவை ஒரு நண்பர் நெருங்கினார். “ஏம்பா கண்ண அண்ணன் வந்திருக்காரு பாரு. போய் பேசு” என்றார். முத்துவுக்கு கண்ணன் தூரத்துச் சொந்தம். முத்துவின் அம்மாதான் இளமையில் கண்ணனை வளர்த்ததாக சொல்வார்கள்.
முத்து எழுந்து கண்ணனிடம் வந்தார். தலை குனிந்தபடி ”தெரியாம நடந்துடுச்சு, நீதான் காப்பாத்தணும்” என்றார். கண்ணன் “பாத்து மெதுவா ஓட்டணும்” என்றார். வாகனமோட்டி வந்தவரிடம் “நீ நேரா போலிசுக்குப் போயிடு. இடிச்சதா ஒத்துக்க. வேற பழய வண்டிய ஒப்படைச்சுடு. போலிசே செத்தவரு வீட்டுக்குத் தகவல் சொல்லட்டும்” என்றார். வாகனமோட்டியவர் சலனமின்றி சரியெனத் தலையாட்டினார். முத்து கண்ணீர் மல்க கைக் கூப்பினார். விஜயாவும் வணங்கினாள். “நீ இங்க நிக்காதம்மா. ரெண்டு பேரும் வண்டிய எடுத்துட்டு வீட்டுக்குப் போங்க” என்றார் கண்ணன். அவர் தன் வாகனத்தை மற்றொருவர் ஓட்ட பின்னால் உட்கார்ந்துப் புறப்பட்டார். முத்துவும் கிளம்பி வாகனத்தை மெதுவாக ஓட்டிச் சென்றார். அவரிடம் தடுமாற்றம் வெளிப்பட்டது. இரு சக்கர வாகனம் வளைந்து நெளிந்து சென்றது. பின்னால் உட்கார்ந்திருந்த விஜயா இருக்கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவள் திரும்பிப் பார்த்தாள். இருள் கவியத் தொடங்கியிருந்தது. சாலை சந்திப்பு மங்கலாகத் தெரிந்தது. முத்துவின் நண்பர்கள் நிழல்களைப்போல் நின்றிருந்தார்கள். மரத்தடியில் கறுப்பு உருவமாகப் பிணம் தனியாகக் கிடந்தது.