காலச்சுவடும் சூழலியலும்
காலச்சுவடின் நீண்ட பயணத்தை வலசை வரும் பறவைகளின் பயணத்தோடு ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. இதழைத் தொடங்குதல் எளிது. தொடங்குதலும் தொடங்கிய கருத்தமைவுகளோடே தொடர்தலும் அரிது. சற்றே நீண்ட இவ்விதழின் பயணத்தில் சூழலியலைப் பொறுத்தவரை காலச்சுவடின் பங்களிப்பு என்ன எனப் பார்ப்பது சுவாரஸ்யமானது.
சூழலியல் இன்று பரந்துபட்ட அளவிலான தலைப்பு. அது இயற்கையை விதந்தோதுதலைத் தாண்டி, இன்று பல்வேறு பரிமாணங்களை எடுத்துவிட்டது. மக்களுக்கான சூழலியலாகச் சூழலியல் நீதியையும் பேசுவதாக வளர்ந்துவிட்டது. இந்த வகையிலான கட்டுரைகளும் நேர்காணல்களும் குறிப்பிடத்தகுந்த அளவு காலச்சுவடு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
குறிப்பாக நேர்காணல்கள் சிறப்பிடம் பெற்றிருக்கின்றன. அவை பிறமொழி இதழ்களில் , வேறு பிரதேச ஆளுமைகளால் எழுப்பப்பட்ட குரலாக இருப்பினும் அதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் சிறப்பான பணியைக் காலச்சுவடு செய்திருக்கிறது. முக்கியமான சில நேர்காணல்களைக் குறி்ப்பிட்டுச் சொல்வதன்